திருமணமே செய்யமால் உறவில் நீடிப்பது சாத்தியமா? - எழும் பிரச்னைகளும், உளவியலாளர் விளக்கமும்

திருமணமே செய்யமால் உறவில் நீடிப்பது சாத்தியமா? - எழும் பிரச்னைகளும், உளவியலாளர் விளக்கமும்
திருமணமே செய்யமால் உறவில் நீடிப்பது சாத்தியமா? - எழும் பிரச்னைகளும், உளவியலாளர் விளக்கமும்
Published on

டெல்லியில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர், அவருடன் லிவ் இன் உறவு முறையில் இருந்த காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மும்பையைச் சேர்ந்த இளைஞர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் மும்பையில் மல்டிலெவல் கால் சென்டரில் பணியாற்றிய ஷ்ரத்தா(27) என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லியின் மெஹ்ரவல்லியில் உள்ள சத்தர்பூர் பஹாடி பகுதியில் குடியேறி லிவ் - இன் முறையில் வசித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஃப்தப்பிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு, ஷ்ரத்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மே 18-ம் தேதி ஷ்ரத்தாவை, அஃப்தப் கழுத்தை நெரித்து கொலைசெய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இறுதியில் நீண்ட நாட்களாக ஷ்ரத்தாவை தொடர்புகொள்ள முடியாததால் எழுந்த சந்தேகத்தால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அஃப்தப் வசமாக சிக்கிக்கொண்டார். இந்நிலையில் ஷ்ரத்தாவின் எலும்புகளை கைப்பற்றி டிஎன்ஏ பரிசோதனை நடத்தும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாட்டையே அதிரவைத்த இந்த வழக்கு தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனையடுத்து லிவ் வின் ரிலேசன்ஷிப் குறித்து எழும் சந்தேகங்கள் குறித்து உளவியலாளர் Dr. சுஜிதாவிடம், புதிய தலைமுறை சார்பில் கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:

லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்றால் என்ன? அவை அங்கீகரிக்கப்படுகிறதா?

லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்பது திருமணமாகாத ஓர் ஆணும், பெண்ணும் உணர்வு மற்றும் உயிரியல் தேவைகளுக்காக அமைத்துக்கொள்ளும் உறவு. காதலிக்கும் இருவர் கல்யாணத்துக்கு பிறகு நமது வாழ்வு எப்படி இருக்கும்? ஒருமுறை வாழ்ந்து பார்ப்போம் எனும் நோக்கத்துடனேயே இந்த உறவு தொடங்குகிறது. அவ்வாறு மனம் ஒத்துப் போகும் ஜோடிகள் வருடக்கணக்கில் ஒன்றாக சேர்ந்து வாழ்வதுண்டு. நமது சட்ட விதிமுறைகளின்படி லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் அதிக காலம் வசிப்பவர்களை சட்டப்பூர்வமாக திருமணமானவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம். அதேபோன்று குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரிலேஷன்ஷிப் வாழ்வும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது.

இந்த உறவில் எந்த இடத்தில் வன்முறை பிறக்கிறது?

இந்த உறவானது எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது எனில், மன, உடல் தேவைகளைக் கடந்து இருவரும் ஒரு கர்வ (Ego) வலைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். இதன் நோக்கமே ’கல்யாணம் நமது வாழ்வில் தேவையில்லை. நாம் ஏன் ஊரறிய திருமணம் செய்து கொள்ள வேண்டும்? நாம் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டில் வாழப் போகிறோம்’ என்பது மட்டுமே. இந்த உறவில் குழந்தை என்பது இரண்டாம் பட்சமே. நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த உறவானது சில வருடங்களுக்கு பிறகு திருமணத்தை நோக்கி நகரும்போது, இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு மாறாக யாருக்கேனும் ஒருவருக்கு விருப்பம் இல்லை எனும்போது அது வன்முறையாக மாறுகிறது. தற்போது டெல்லி கொலைவழக்கில் நடைபெற்றுள்ளதும் இதுவே.

மேற்கத்திய நாடுகளிலும், நமது நாட்டிலும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் எவ்வாறு அணுகப்படுகிறது?

லிவ் இன் ரிலேஷன்ஷிப் எல்லாமே நச்சுத்தனமானது எனக் கூறமுடியாது. மேற்கத்திய நாடுகளின் நம்பிக்கையின்படி திருமணம் என்பது ஒப்பந்த அடிப்படையிலானதே. ஓர் ஆணும், பெண்ணும் சந்தோஷமாக வாழ தேவைப்படும் உடல் ரீதியிலான தேவைகளால் உருவாவதே குழந்தைகள் எனும் எண்ணத்தையே மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன. மேஸ்லோ அடிப்படைத் தேவைகள் என்பதன்படி ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசியம். எப்படி இவை இல்லாமல் வாழ முடியாது என சொல்கிறோமோ, பருவத்தை அடைந்த ஒருவருக்கு உடல்தேவை என்பதும் அப்படியே. அதனை தீர்த்துக்கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ள முடியும். செக்ஸ் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்பதையே மேற்கத்திய நாடுகள் கடைபிடிக்கின்றன. அதன் காரணமாகவே அங்கு பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் தொல்லை ஆகியவை நடைபெறுவதன் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

திருமணத்துக்குப் பின்னரும் இருவருக்கும் ஒத்துவராத பட்சத்தில் விவாகரத்து செய்துகொள்ளலாம் என்பதே அங்கு வழக்கம். ஆனால், இந்திய கலாசாரம் ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கோட்பாடுகளையே அனுமதிக்கிறது. இங்கு கணவனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமே அதிகமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பணி, கல்வி என பலரும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். அப்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை நாமும் நமது இந்திய சமூகத்தில் கடைபிடித்தால் தவறில்லை எனும் எண்ணத்தை உண்டாக்குகிறது. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மேற்கத்திய நாடுகளில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தங்களது உணர்வுகளை பரிமாறிக்கொள்கின்றனர். யாரையும் வன்முறைக்கு உள்ளாக்குவதற்கோ, கொலை செய்வதற்கோ லிவ் இன் ரிலேஷன்ஷிப் கிடையாது என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பால் மனப்பக்குவம் பாதிப்படைகிறதா?

நாம் இந்த உறவின் நோக்கத்தை தவறாக புரிந்துகொண்டு, எனக்கு பிடித்தவர்களுடன் எல்லாம் உடல்தேவைகளை தீர்த்துக்கொள்வேன் என்பது போன்ற எண்ணங்கள் பரவுகின்றன. இதனால்தான் ’நான் யாருடன் வேண்டுமானாலும் செல்வேன்? நீ ஏன் கேள்வி கேட்கிறாய்?. உனக்கு தேவை நான் உன்னுடன் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் அவ்வளவுதான்’ என்பன போன்ற வாதங்கள் எழுகின்றன. ஒரே வீட்டில் வசிப்பது பொருளாதாரம் உள்ளிட்ட எந்த ஒரு காரணிக்காகவும் கூட இருக்கலாம். லிவ் இன் ரிலேஷன்ஷிப் கலாசாரத்தை மாற்றுவதுடன், மனப்பக்குவத்தையும் மாற்றுகிறது.

ஒத்துவராத லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் நீடிப்பது எத்தகைய விளைவை உண்டாக்கும்?

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தனது பார்ட்னரின் குணநலன்கள் மாறுவதை எளிதாக கண்டறிந்து கொள்ளலாம். காதலிக்கும்போது இருந்த ஈர்ப்பு, ஒரே வீட்டில் 24 மணி நேரமும் உடனிருக்கும் ஒருவருடன் நீடிக்குமா என்பதையும் அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு குணநலன்கள் ஒத்துப்போகவில்லை என்பதை அறியும்போது, அந்த உறவை முறித்துக்கொள்வது நல்லது. சிலர் காதலிக்கிறோம் என்பதை கருத்தில்கொண்டு, எவ்வளவு நச்சுத்தனமானதாக இருந்தாலும் அந்த உறவைத் தொடர்ந்து கொண்டிருப்பர். உதாரணத்துக்கு உடல்ரீதியாக தாக்கினாலோ அல்லது தகாத வார்த்தைகளால் வசைபாடினாலோ கூட அந்த உறவைத் தொடர்ந்து கொண்டிருப்பர். இதுபோன்ற நச்சுத்தனமான உறவுகளில் நீடிப்பதே ஒருகட்டத்தில் கொலைசெய்யத் தூண்டுகிறது. எனது சுதந்திரம் உள்ளிட்டவை பறிபோய்விட்டது போன்ற மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எவ்வாறு ஒரு புரிதலுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை ஆரம்பிக்கின்றனரோ, அதேபோன்று பிடிக்காதபோது விலகிச்செல்வதே நல்லது. எந்த ஒரு உறவாக இருந்தாலும் நானும் வாழ்கிறேன், அவர்களும் வாழட்டும் எனும் நோக்கத்துக்குள் பயணிப்பதே நன்மை பயக்கும்.

இந்த உறவுமுறையால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்களா?

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களா என்பதற்கான பதிலை, துல்லியமாக ’ஆம்’ என கூறமுடியாது. முந்தைய சமயங்களில் ஆண், பெண் என இருவரையுமே வேறுபடுத்தி பார்க்க இயலும். தற்போதைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கான பாதிப்பு பொருளாதார ரீதியாக இல்லாமல், மனதளவிலேயே அதிகளவில் ஏற்படுகிறது. உணர்வு ரீதீயான பிணைப்பு, ஊக்கம், வாழ்வின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பு உள்ளிட்டவை இல்லாததன் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். லிவ் இன் ரிலேஷன்ஷிப், கல்யாணம் எனும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்போதே உறவுக்குள் விரிசல்விடத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தினர், உறவினர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர்? கருவுற்று குழந்தை பிறந்தால் என்ன செய்வது? போன்ற காரணிகளின் காரணமாகவும் பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குணநலன்கள் மாறும் காரணிகளுக்கு காரணம் என்ன?

கிராமத்திலிருந்து, நகரத்தை நோக்கி வரும் இரு பாலினத்தினருமே ’கல்ச்சர் அடாப்டேஷன் ’ என்பதில் குழம்புகின்றனர். ஆரம்பத்தில் பிடிக்காத ஒரு கலாசாரத்தை வம்படியாக திணிப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. கிராமத்தில் வளர்ந்தோர் சமூகத்துடன் இணைய வேண்டும் என்பதற்காகவே, தனக்கு பிடிக்காத தீய பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொள்ளத் தள்ளப்படுகின்றனர். உளவியல் ரீதியாக தொடர்ந்து 27 நாட்கள் நாம் கடைபிடிக்கும் விஷயமானது, நமது பழக்கவழக்கங்களுள் ஒன்றாகவே மாறும் வாய்ப்புள்ளது. அதன்படி ஒரு வருடம் மெட்ரோ நகரத்துக்குள் வாழ்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த நபரின் குணநலன்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். பருவ வயதினருக்கு கலாசாரம், உயிரியல் தேவைகள் குறித்த அறிவை புகட்ட வேண்டியது அவசியம். உடற்தேவை என்பது வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணராமல், அவசரப்பட்டு அதற்கு முக்கியத்தும் கொடுப்பது வாழ்வை சீர்குலைக்கும். இதனைத் தடுக்க கவுன்சிலிங் உள்ளிட்ட சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கியம்.

டெல்லி கொலைவழக்கு மதக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கப்படுவதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

லிவ் இன் ரிலேஷன்ஷிப், திருமணத்தை எட்டாதவரையில் மதம் ஒரு பொருட்டு கிடையாது. திருமணத்துக்குப் பின்னர் ஏதேனும் ஒருவரின் மதநெறிமுறைகளை கடைபிடிப்பதே பெரும்பாலும் நடக்கும். இல்லையெனில் அந்த ஜோடிகளுக்குள்ளான நிபந்தனைகளின்படி தங்களது தனிப்பட்ட மதத்தில் நீடிப்பர். இந்த டெல்லி கொலை வழக்கையுமே மதம் எனும் பார்வைகொண்டு அணுக முடியாது. மதத்தைக் கடந்து மனிதன் எனும் பார்வையிலேயே இதனை நாம் அணுகவேண்டும். நமது சிந்தனை, சூழல், விருப்பு, வெறுப்பு ஆகியவையே குற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தும்போது, தனது தனியுரிமை, சுதந்திரம் பறிபோவதாகவே குற்றவாளி நினைத்துள்ளார். கல்யாணம், குழந்தை உள்ளிட்ட பொறுப்புகளை வெறுப்பதன் காரணமாக, காதலியின் பேச்சு வெறுப்பைத் தூண்டியுள்ளது. அந்த வெறுப்பே கொலைக்கு வழிவகுத்துள்ளது.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்போருக்குள்ள சிக்கல்கள் என்ன?

வெளியில் இருந்து பார்க்கும்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வரதட்சணை, கல்யாண செலவு உள்ளிட்டவை கிடையாது. ’உனக்கு நான், எனக்கு நீ என வெறும் அன்பை மட்டுமே பறிமாறிக் கொள்வோம்’ என அழகாக தெரியும். ஆனால், இந்த உறவானது பல உளவியல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஒரு கட்டத்தில் இருவருக்குமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது. இருவருக்குமுள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப அங்கே யாரும் கிடையாது. லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்போர் பெற்றோரிடம் சென்று நிற்கும் வாய்ப்பு மிக குறைவு. பிரச்னைகளை வெளிப்படையாக பேச முடியவில்லை என்பதே கடும் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனை தனிநபர் பிரச்னையாக மட்டுமே காணவேண்டுமே தவிர, சாதி, மத ரீதியாக இதனை காணமுடியாது. என்னுரிமை எனும் பெயரில் பாதுகாப்பில்லாத ஓர் உறவை நமக்கு நாமே அமைத்துக்கொள்கிறோம்.

தொகுப்பு: ராஜேஷ் கண்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com