கணவனையும் கூட கண்காணியுங்கள் : எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள் !

கணவனையும் கூட கண்காணியுங்கள் : எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள் !
கணவனையும் கூட கண்காணியுங்கள் : எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள் !
Published on

இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் என்ன , எத்தனை , செய்பவர்கள் யார் என பல்வேறு விதமான குற்றம் தொடர்புடைய அனைத்தையும் ஆவணப்படுத்துவதே தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் வேலை. அப்படி வருடா வருடம் குற்ற ஆவணக் காப்பகம் ஆவணப்படுத்திய தகவல்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அவற்றில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. குழந்தைகளுக்கு எதிராக நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள குற்றங்கள் ; அதனை செய்பவர்கள்

காஷ்மீர் சிறுமி, சூரத் சிறுமி, ஹைதராபாத் சிறுமி, விருதுநகர் சிறுமி, அஸாம் சிறுமி என தினமும் ஏதோ ஒரு மூலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறுகிறது. அதாவது 2016- ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என 19765 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்தியாவில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். இது பதிவானது , பதிவாகதவை எவ்வளவோ ?

2016-ம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையை படிக்கும் போது சில விஷயம் புரிந்துக் கொள்ள முடிகிறது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வதை தாண்டி கொடூரமாக கொல்லும் மனநிலையும் வளர்ந்திருக்கிறது. இது குற்றத்தில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் செய்யும் வேலையாகவும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 300 5 வளார்ந்திருக்கிறது. 2009-ம் ஆண்டில் 24000 வழக்குகள் பதிவாகியது , ஆனால் 2015-ல் 92ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 1லட்சத்து 2 ஆயிரமாக மாறியிருக்கிறது. இப்படி ஆண்டுக்கு ஆண்டுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கூடிக் கொண்டே போகிறது. காவல்துறை வழக்குகளை முடிக்க போராடிக் கொண்டிருக்கிறது.

கசப்பான இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ளாத மனம் ஒப்பாத போதே, மற்றொரு தகவல் நம்மை புரட்டிப் போடும் நிலையை உண்டாக்குகிறது. அதாவது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களில் 95 சதவீதம் பேர் பாதிக்கப்படுபவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது நம்முடைய உறவினர்கள் , நண்பர்கள், அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லக் கூடியவர்கள், தூரத்து சொந்தங்கள், வீட்டின் அருகே இருக்கும் கடைக்காரர் இப்படி நமக்கு நன்றாக தெரிந்தவர்கள். இது பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு பேரிடியாக இருக்கிறது.

மனநல மருத்துவர்களிடம் பேசும் போது , குழந்தைகளுக்கு அனைத்தையும் அவர்கள் மொழியில் கற்றுக் கொடுங்கள் , கணவனை கூட கண்காணியுங்கள் என்கின்றனர். ஆம், சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகளில் சில அப்பாக்களே தங்களது குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கிறது. தமிழகத்தில் 2016ல் பதிவான வழக்குகளில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 46 பேர் நெருங்கிய உறவினர்கள் , 101 பேர் வீட்டின் அருகே வசிப்பவர்கள். ஆக, கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம் ; குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம். சமூகத்தின் மனநிலை மாறும் வரை நம் குழந்தைகளை நாம் காத்துக் கொள்வதே வழி என்கின்றனர் மனநல ஆலோசகர்களும், காவல்துறையினரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com