காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த குரல்கள் சில நாட்களாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிரானதாக மாறிவிட்டது. சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக் கூடாது என்று ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழ் உணர்வாளர்களும், ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வந்தார்கள். இதற்காக அழைப்பு விடுத்து பேசிய திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கெளதமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர், இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடக்கூடியதாகவும், கிரிக்கெட் ரசிகர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் இருந்தததையும் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
காவிரி உரிமைக்கான போராட்டம், ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிரானதாக மாறியதற்கு பாரதிராஜா உள்ளிட்டோர், ஐ.பி.எல். போட்டிகள் தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் இருக்கிறது என்று காரணம் தெரிவித்தார்கள். காவிரி நமது உரிமை. அதற்காக ஐ.பி.எல். போட்டியை எதிர்ப்பதில் தவறேதும் காண நேரிடாது என்றாலும், தமிழ் உணர்வாளர்களின் பேச்சுகள் சந்தேகத்தையும், போராட்ட பாதையையும் சந்தேகிக்க நேர்கிறது. ஒரு போட்டியில், ''ஐ.பி.எல். போட்டியை பார்க்கச் செல்பவர்கள் ஒரு தகப்பனுக்கு பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்'' என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டது எந்த வகையிலான அறவழிப் பேச்சு என்று பார்க்க வேண்டும். ''வீரர்களுக்கு ஏதாவது ஆனால் நாங்கள் பொறுப்பல்ல என்பதும், மைதானத்திற்குள் பாம்புகளை விடுவோம்'' என்று வேல்முருகன் பேசுவதும் எந்த வகையான அறவழிப் போராட்டம் என்பது விளங்கவில்லை.
ஐ.பி.எல். போட்டிகள் பண முதலைகளின் விளையாட்டுதான்! சூதாட்டம் நிறைந்ததுதான். அதற்காக மேட்ச் பார்க்கவில்லை என்றால் வீடு புகுந்தா நம்மை தூக்கிச் சென்றார்கள்? விருப்பம் இருந்தால் பார்ப்போம், பார்த்தாலும் சில மணி நேரங்களில் அதுகுறித்து மறந்து போவோம். ஆனால் காவிரிக்காக ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க உணர்ச்சிமிக்க வார்த்தைகளால் ரசிகர்களையும், பொதுமக்களையும் வலியுறுத்துவதும், போராட்டத்தில் பங்கேற்க தூண்டிவிடுவதும் எந்த வகையிலான அறவழிப் போராட்டம் என்று தெரியவில்லை.
இப்படியான பேச்சுகள் மூலம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கான கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்துவிட்டு, ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்களும், திரைப்படத் துறையினரும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். நகரின் இதயப் பகுதியாக விளங்கும் அண்ணா சாலையில், சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேரணி, மறியல் மற்றும் போராட்டத்தால், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகள் திணறிப் போயின. ஆம்புலன்ஸ் போவதற்குகூட வழியில்லாத நிலை ஏற்பட்டதையும் செய்திகளில் படிக்க நேர்ந்தது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். காவிரிக்கான போராட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களுக்கு நெருக்கடி தருவதாக இருப்பது எந்த வகையில் நியாயம்?
போராட்டத்தின் போது சென்னை அணிக்கு ஆதரவாக மஞ்சள் பனியன் அணிந்து வந்தவர்கள் மீது சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதும், காரில் வந்தவர்களை மறித்து பனியன்களை கழட்டி எறிந்ததும் அறவழி போராட்டமா? இப்படியாக போராட்டத்தின் பாதை வேறுவிதமாக மாறியதாலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நிகழ்வுகளை பார்த்தவர்கள் அறிவார்கள். மற்றொருபுறத்தில், காவலர்கள் மீது சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியது சரியா? இப்படியானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நடிகர் ரஜினிகாந்த் கூறியதை சரியானதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. காவல்துறையினர் அப்போது அப்படி அத்துமீறினார்கள், அந்தக் காலத்தில் இப்படி நடந்து கொண்டார்கள் என்று கூறி, தற்போதைய நிகழ்வை நியாயப்படுத்துவது எந்த வகையிலும் சரியான பேச்சாக இருக்க முடியும்?
காவிரி போராட்டம் ஐ.பி.எல். போட்டிக்கு எதிரானதாக மாறியது; ஐ.பி.எல்.க்கு எதிரான போராட்டம் ரசிகர்கள், காவலர்கள் மீதான தாக்குதலாகவும் மாறியது. இது சரியா என்பதை போராடிய தமிழ் உணர்வாளர்களும், ஆர்வலர்களும் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு வழியாக சென்னையில் முதல் ஐ.பி.எல். போட்டி நடந்து முடிந்த பிறகு பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா, ரசிகர்கள் மீதான தாக்குதல் குறித்து பேசினார். ''அந்த போராட்டத்தில் விஷமிகள் நுழைந்து அத்துமீறினார்கள்'' என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆக, காவிரி போராட்டம் திசைமாறுகிறது என்ற பலரின் கருத்து அன்றைய போராட்டத்தின் மூலம் அறிந்து புரிந்து கொள்ள முடிகிறது.
''கிரிக்கெட் போட்டியை பார்க்க குழந்தைகளுடன் சென்ற போது தாக்குதலுக்கு ஆளானதோடு, கடும் ஆபாச பேச்சுக்களையும் எதிர்கொள்ள நேர்ந்ததாக'' நண்பர்கள் சிலர் சொல்லி வருத்தப்பட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பலர் சொல்லாமலேயே மனதுக்குள் வைத்திருக்கலாம். காவிரி தண்ணீர் வருகிறோதோ இல்லையோ ரத்தம் சிந்தாமல் பார்த்து கொள்ள வேண்டியது முக்கியமானது.
மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க டாஸ்மாக் மதுக் கடைகளை பூட்டு போட்டு போராடலாம். காவிரி தண்ணீருக்காக இப்படி திடீர் திடீரென தமிழ் உணர்வாளர்கள் போராடி மக்களுக்கு சிரமத்தை கொடுக்காமல், தமிழகமெங்கும் இருக்கும் காணாமல் போய்கொண்டிருக்கும் அல்லது இருக்கின்ற குளம், குட்டை, ஏரி, வாய்க்கால்களை கண்டுபிடித்து தூர்வாரலாம். அதன் மூலம் மழை நீரை சேமித்து, கடலில் கலப்பதை தடுக்கலாம். இதை செய்தாலே கர்நாடகத்திடம் இருந்து போராடி பெறுகின்ற காவிரி நீருக்கான தேவையை எதிர்காலத்தில் சிறிது சிறிதாக தவிர்க்கலாம். அதற்காக நீருக்காக போராட வேண்டாம் என்று அர்த்தமில்லை. அது உண்மையான அறவழிப் போராட்டமாக இருக்க வேண்டும்.
உணர்ச்சிவயமான பேச்சுகளுக்கு மயங்குவதும், அதில் இருக்கும் உண்மைகளையும், நடைமுறை யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் போராட்டக் களத்தில் ஈடுபடுவதும், முழக்கமிடுவதும் ஒருபோதும் பயன் தராது. உணர்ச்சிவயப்படும் போது எடுக்கப்படும் முடிவுகள் சரியானதாக இருக்காது. அதில் புரிதல் வேண்டும். நடைமுறை யதார்த்தத்தையும், காலச்சூழலையும் புரிந்து கொண்டு களத்திற்கு வாருங்கள். இன்று விஷமிகளால் ரசிகர்கள் தாக்கப்பட்டார்கள். நாளை வேறு ஏதாவது செய்தால்? யார் பொறுப்பாவார்கள்?எனவே, யார் பின்னால் போகிறோம் என்பது முக்கியமல்ல. அது சரியான பாதையா என்பதை தீர்மானியுங்கள். இல்லையென்றால், திரும்பி வருவதும், சரியான இடத்திற்கு சென்று சேர்வதும் இயலாது. நமது போராட்டம் காவிரி உரிமைக்கானதாக இருக்க வேண்டும். அது, மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துவதாக அமைய வேண்டும்.