“அன்று முதல்வரை பாராட்டி காவிரி காப்பாளர் பட்டம்..இன்று கையறு நிலை” விவசாய சங்க நிர்வாகி

“அன்று முதல்வரை பாராட்டி காவிரி காப்பாளர் பட்டம்..இன்று கையறு நிலை” விவசாய சங்க நிர்வாகி
“அன்று முதல்வரை பாராட்டி காவிரி காப்பாளர் பட்டம்..இன்று கையறு நிலை” விவசாய சங்க நிர்வாகி
Published on

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல அறிவிப்பு என்பது கண் துடைப்பு நாடகம்தான். அப்போது முதல்வரை பாராட்டி காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்கள் இப்போது கையறு நிலையில் நிற்கிறார்கள் என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர.விமல்நாதன்.

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகளில் ஒருவர் சுந்தர.விமல்நாதன். பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்டத்தின் நிலை பற்றியும், விவசாயிகள் சார்பில் முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைகள் பற்றி பேசினோம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது? அதுபற்றி முதல்வர் ஏதும் கூறினாரா?

அந்த அறிவிப்பு பற்றி முதல்வர் எதுவும் கூறவில்லை. அந்த அறிவிப்பு, அறிவிப்பு என்ற அளவில்தான் உள்ளது மற்றபடி எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில்தான் அதிக அளவில் மணல்கொள்ளை நடந்தது. இங்கு இயங்கக்கூடிய ஓஎன்ஜிசி திட்டங்கள் அப்படியேதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. சில அமைப்புகள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல அறிவிப்பை வெளியிட்டதால் முதல்வருக்கு “காவிரி காப்பாளர்”என்று பட்டம் கொடுத்தார்கள். ஆனால் அவர் வாய்சொல்லை தாண்டி எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. ஆனால் காவிரி டெல்டாவுக்கே பாதகமான சரபங்கா திட்டத்தைத்தான் நிறைவேற்றியுள்ளார். இது எல்லாமே கண் துடைப்பு நாடகம்தான். அப்போது பட்டம் கொடுத்தவர்கள் இப்போது கையறு நிலையில் தவிக்கிறார்கள்.

எதனால் வேளாண்மண்டல அறிவிப்பை கண்துடைப்பு நாடகம் என்கிறீர்கள்?

சேலம் மாவட்டத்தில் காவிரிநீரை எடுத்து பல ஏரிகளில் நிரப்பும் சரபங்கா திட்டத்தை தற்போது செயல்படுத்திவருகிறார்கள். இந்த திட்டம் மூலமாக காவிரியின் உபரி நீரை எடுத்து ஏரிகளில் நிரப்புவோம் என்றார்கள், ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் காவிரிநீரில் எப்படி உபரியாக தண்ணீர்வரும். இந்த சரபங்கா திட்டம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எதிரானது. இந்த திட்டமானது எதிர்காலத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களுக்குள்ளேயே தண்ணீர் பிரச்சினையை உருவாக்கும். அந்த எதிர்ப்பினை மடைமாற்றவே இந்த பாதுகாக்கப்பட்ட மண்டல அறிவிப்பை தமிழக முதல்வர் கண் துடைப்பிற்காக வெளியிட்டார். ஒருவேளை உண்மையான அக்கறையோடு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் இந்நேரம் இச்சட்டம் செயல்வடிவம் பெற்றிருக்கும். இந்த அரசியல் சூழ்ச்சிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளும் பலியாகிவிட்டார்கள்.

விவசாய சங்க பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்? பலரும் வேளாண்மண்டல அறிவிப்பை ஆதரிக்கிறார்களே?

வெறும் அரசியலுக்காக அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல அறிவிப்பிற்கு மயங்கி காவிரி டெல்டாவை சேர்ந்த பல மூத்த விவசாய சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழக முதல்வருக்கு “ காவிரி காப்பாளர்” என்று பட்டம் கொடுத்தனர். இப்போதுதான் சரபங்கா திட்டத்தின் சூழ்ச்சி அறிந்து என்னசெய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி நிற்கிறார்கள். சரபங்கா திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று இப்போதுதான் குரல்கொடுக்க தொடங்கியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல அறிவிப்பிற்கு அரசு இப்போது என்னதான் செய்யவேண்டும்?   

இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் அமைப்பது பற்றி அரசுத்துறை செயலாளர்களை மட்டுமே கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது. ஆனால் இதுவரை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க செயற்பாட்டாளர்களிடம் இதுபற்றி யாரும் கருத்தே கேட்கவில்லை. அதனால் இந்த வேளாண்மண்டல திட்டத்தை வடிவமைக்கும்போது அதில் விவசாய சங்க பிரதிநிதிகளும் நிச்சயமாக இடம்பெறவேண்டும். இந்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டுகாலம் ஆகப்போகிறது, ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. உடனடியாக இப்போது அரசு அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்து சட்டத்தை வடிவமைக்கவேண்டும்.

வேளாண்மண்டல அறிவிப்பில் உள்ள மற்ற சிக்கல்கள் என்ன?

வேளாண்மண்டல அறிவிப்பின்படி ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் மற்றும் ஓஎன்ஜிசி திட்டங்களை இது கட்டுப்படுத்தாது என்று சொல்கிறார்கள். இந்த விதியை மாற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, செயல்பாட்டில் உள்ள வேளாண் பாதுகாப்புக்கு எதிரான திட்டங்களையும் தடை செய்யவேண்டும். அதுபோல மணல்கொள்ளையை மிகக்கடுமையாக தடுத்து நிறுத்தவேண்டும். மேலும் வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து திட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல பகுதிகளில் தடை செய்யவேண்டும்.

முதல்வரிடம் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தீர்கள்?

விவசாய சங்க போராளி நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் கட்டியதற்கு நன்றி தெரிவித்ததுடன், இயற்கை வேளாண் விஞ்ஞானி உலகமெல்லாம் போற்றக்கூடிய நம்மாழ்வாருக்கு தஞ்சை மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். மேலும் பல விவசாயிகள் பிரச்சினைகள் பற்றியும் பேசினேன்.

முதவ்வரிடம் வேறு என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தீர்கள்?

தற்போது 25 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் மற்றும் 25 ஆயிரம் தட்கல் மின் இணைப்புகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 1963 ஆம் ஆண்டின் அரசாணைப்படி இந்த புதிய மின் இணைப்புகளுக்கு ஆறு, வாய்க்கால்,குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளிலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் போர்வெல் போடமுடியும் என்று உள்ளது. அதனை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் தோட்டக்கலை சார்பில் 3ஏ-1 விகிதப்படி மின் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கிடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். புதிய மின்சார சட்டதிருத்ததிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடவும் கோரிக்கை வைத்தோம். சட்டீஸ்கரில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2500 ரூபாயும், கேரளாவில் 2750 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதுபோல தமிழகத்திலும் நெல்லின் ஆதார விலையை உயர்த கோரிக்கை வைத்தேன்.

- Veeramani sundra cholan

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com