கொரோனா இழப்பீடு யாருக்கெல்லாம் பொருந்தும்? நிலவும் குழப்பங்களும் அரசு செய்யவேண்டியதும்!

கொரோனா இழப்பீடு யாருக்கெல்லாம் பொருந்தும்? நிலவும் குழப்பங்களும் அரசு செய்யவேண்டியதும்!
கொரோனா இழப்பீடு யாருக்கெல்லாம் பொருந்தும்? நிலவும் குழப்பங்களும் அரசு செய்யவேண்டியதும்!
Published on

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு சார்பில் ரூ. 50,000 இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய பேரிடர் நிவாரண மேலாண்மை ஆணையம் வெளியிட்டு அதனை நேற்று (செப்.,22) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த இழப்பீடு தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும், என்ன அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறித்து நெறிமுறைகளில் அரசு குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களையும் அதன் பின்னணியையும் அதிலுள்ள சிக்கல்கள் மற்றும் விமர்சனங்களையும் இங்கு காணலாம்.

இந்தத் திட்டம், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையை மாநில அரசுகள், தங்களின் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மக்களுக்கு தந்துவிடுமென நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகையானது முதன்நிலை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவருக்கும் வழங்கப்படும். இந்தத் தொகை, இதுநாள் வரை இறந்தவர்கள் மற்றும் இனி பதிவாகும் இறப்புகள் என அனைத்து கொரோனா மரணங்களுக்கும் பொருந்தும். மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கு 75% தொகையும், யூனியன் பிரதேசங்களுக்கு 90% தொகையையும் மத்திய அரசு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே அந்த நிதித்தொகையில் இருந்து பிரச்னையாக இருக்காது என கருதப்படுகிறது.

உச்சநீதிமன்ற வழக்கும் - தேசிய பேரிடர் மேலாண்மையின் நிவாரணத் தொகை அறிவிப்பும்:

கடந்த ஜூன் 30 ம் தேதி பதிவான மனுவொன்றின் விசாரணையின்போது, “தேசிய பேரிடர் மேலாண்மை, தனது சட்டப்பூர்வ பணியை செய்யவில்லை” எனக்கூறி கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறையை இனியாவது வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு தெரிவித்தது. மேலும் இழப்பீடு தொகையை தாங்கள் (நீதிமன்றம்) நிர்ணயிக்கமாட்டோம் என்றும், மத்திய அரசும் தேசிய பேரிடர் மேலாண்மையும் இதை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ‘பெருந்தொற்று நோய்க்காலம் தொடர்பாக குறைந்தபட்ச நிவாரணத்தொகை என இதுவரை ஏதும் நிர்ணயிக்கப்படாததாலேயே, கோவிட் -19 இறப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை ஒதுக்கப்படாமல் இருந்தது’ என தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்தது. இக்காரணத்தினாலேயே மத்திய அரசும் மாநில அரசுகளிடம் ‘உங்களின் மாநில பேரிடர் மேலாண்மையிடமிருந்து நிதி ஒதுக்க வேண்டாம்’ என கேட்டுக்கொண்டிருந்ததாக சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு சில மாநிலங்கள் (பீகார், கர்நாடகா, டெல்லி) முதல்வரின் தனிப்பட்ட நிவாரண நிதியிலிருந்து தரப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

பதில் அளித்ததை தொடர்ந்து, இந்த சிக்கல்கள் அனைத்துக்கும் முடிவுகட்டும் வகையில் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழியாக தேசிய பேரிடர் மேலாண்மை நெறிமுறை பட்டியலொன்றின் வழியாக தெரிவித்தது. அதன் சாரம்சம்தான், ‘கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்’ என்பது. கொரோனா மரணம் என குறிப்பிடப்பட்டிருக்கும் இறப்புச் சான்றிதழ் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல கொரோனா பாசிடிவ் என வந்து, அடுத்த 30 நாள்களுக்குள் உயிரிழந்தவர்களுக்கும் இந்த இழப்பீடு தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. எதுவாகினும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு 30 தினங்களுக்குள் நிவாரணத் தொகை ஒப்படைக்கப்படும் என்றும் அந்த நெறிமுறை பட்டியலில் சொல்லப்பட்டது. இழப்பீடு வழங்குவது தொடர்பாக அடுத்த மாதம் 4ம் தேதி சில வழிகாட்டுதல்களை தெரிவிப்போம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

என்ன சிக்கல் இதில்?

இந்த அறிவிப்பு குறித்து தமிழகத்தை சேர்ந்த சமூக சமத்துவ மருத்துவர் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் அறம் நம்மிடையே பேசுகையில், “இந்த அறிவிப்பு நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்றுதான். இந்தத் தொகை, உறவுகளை இழந்தோரின் குடும்பத்துக்கான இழப்பீடு தொகையாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. இதுவரை இந்தியாவில் 4.46 லட்சம் பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். ஒருவருக்கு ரூ.50,000 என்றால், மொத்தம் பேருக்கு கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்தளவுக்கு அரசு மக்களுக்கு நிதி ஒதுக்குகிறது என்றால் அது வரவேற்கத்தக்கதுதான். இப்போதைக்கு, இந்தத் தொகையை மாநில அரசே செலுத்துமென நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கெனவே மாநில அரசுகள் நிதிப்பற்றாக்குறையால் தவித்து வரும் வேளையில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் மாநில அரசு மீது மத்திய அரசு சுமத்தியுள்ளது, சற்றே விமர்சனத்துக்குரியது.

இந்த நிவாரணத் தொகை வழங்கும் விவகாரத்தில் இன்னும் சில சிக்கல்களும் இருக்கிறது. அவற்றில் முக்கியமானது, கொரோனாவால் இறந்தவர்கள் யார் (அதாவது இழப்பீடு தொகை யாருக்கு பொருந்தும்) என்பதை, இறப்புச் சான்றிதழை வைத்துதான் அரசு முடிவு செய்யும் என தெரிவித்துள்ளது. ஆனால் இறப்பு சான்றிதழிலேயே இங்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக இணை நோய்கள் ஏதேனும் தாக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட பக்கவிளைவால் இறந்த நபரென்றால், அவருக்கு கொரோனா இறப்பு சான்றிதழ் இங்கு வழங்கப்படுவதில்லை.

கொரோனா என்பது, எல்லா நேரமும் நேரடியாக ஒருவரின் உயிரைப் பறிக்கும் நோயாக இருக்காது. இதய பாதிப்பு, மாரடைப்பு, நரம்புகளில் ரத்த உறைவு என கொரோனா ஒவ்வொரு உடலுலும் ஒவ்வொரு வகை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆகவே ஒருவர் இறக்கிறார் என்றால் அதன் தொடக்கப்புள்ளியை கண்டறிந்து, அதை முதலில் குறிப்பிட்டு - பின் அதனால் வரும் பாதிப்பை குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு ‘கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா பாதிப்பு / மாரடைப்பு’ என்பதுபோல. இந்த வகையின்கீழ் இறந்தவர்களுக்கும், இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். அப்படியில்லாமல் கொரோனாவால் நேரடியாக உயிரிழந்தோருக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்குவோம் என்பது, பேரிடர் காலத்தில் பாகுபாடு பார்ப்பது போன்றதாகும்.

இதுநாள் வரை அரசு கொரோனாவால் இணை நோய் ஏற்பட்டு இறந்தவர்களுக்கு ‘கொரோனா சான்றிதழ்’ தரவில்லை என்றாலும்கூட, இனியாவது தங்கள் விதியை அரசு மாற்றி எழுதிக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பு அப்படி இறந்தவர்களை, அவர்கள் இறந்த மருத்துவமனையை அனுகி அந்த சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு ஏதும் வழியுள்ளதா என பார்ப்பது, இன்னும்கூட நல்லது. இவ்விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்படுவது அவசியம். அதேபோல, அறிவித்திருக்கும் நிவாரணத்தொகையையும் விரைந்து தந்திட வேண்டும்” என்றார்.

அரசு சொன்னது என்ன?

இந்த இறப்புச் சான்றிதழ் விவகாரம் முன்னரே பூதாகரமாணபோது, மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ மா.சுப்ரமணியன் “கொரோனா இறப்பை குறைத்துக்‌ காட்ட வேண்டிய அவசியம்‌ அரசாங்கத்திற்கு இல்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள் இழப்பீடு பெறுவதைத்‌ தவிர வேறு எதற்கும்‌ இறப்புச்‌ சான்றிதழ்‌ பயன்படாது.” என்றும்‌ கூறி இருந்தார்‌. ஆனால் தற்போது அந்த சான்றிதழ்தான் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.

மா.சு. மற்றொரு இடத்தில் குறிப்பிடுகையில், “ஒருவர்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்படும்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு, பின்னர்‌ மாரடைப்பு காரணமாகவோ அல்லது நுரையீரல்‌ பாதிப்பு காரணமாகவோ உயிரிழந்த நிலையில்‌ அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்தால்‌, அவருடைய உயிரிழப்புக்குக்‌ காரணம்‌ கொரோனா இல்லை” என்று தெரிவித்திருந்தார்‌.

எதிர்ப்புக் குரல்!

இன்றைய தினம் அமைச்சர் மா.சு.வின் இந்த பழைய குறிப்புகளை அடிக்கோடிட்டு காண்பித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது அறிக்கையில் அவர், “ஐசிஎம்ஆர்-ன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில்‌, ‘கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா, இதய பாதிப்பு, சர்க்கரை நோய்‌, புற்று நோய்‌ போன்ற இணை நோய்கள்‌ இருக்கலாம்‌. இந்த நோய்கள்‌ நுரையீரலில்‌ உள்ள தொற்றினை அதிகரித்து, அதன்மூலம்‌ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிக்கல்‌ ஏற்பட்டு, உயிரிழந்து இருக்கலாம்‌. ஆனால்‌, இணை நோய்கள்‌ அதற்குக்‌ காரணம்‌ அல்ல. ஏனெனில்‌ அந்த இணை நோய்கள்‌ நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை. எது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கின்றதோ, அதுதான்‌ பதிவு செய்யப்பட வேண்டும்‌’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து,  வழிகாட்டு நெறிமுறைகளுக்கும்‌, அமைச்சரின்‌ கூற்றுக்கும்‌ முரண்பாடு உள்ளது தெரிய வருகிறது. இந்தக் குழப்பங்களின் காரணமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில்‌ உள்ளபடி, அனைனருக்கும்‌ இறப்புச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம்‌ பொதுமக்கள்‌ மத்தியில்‌ ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, கொரோனா நோயினால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ் அடிப்படையில் நிவாரணம்‌ வழங்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆகவே ஐசிஎம்ஆர்‌ வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்புச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இறப்புச் சான்றிதழ் மீது நிலவும் இந்தக் கேள்விகளும் குழப்பங்களும், இணை நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களை தற்போது கூடுதல் மனச்சுமைக்கும் கேள்விகளுக்கும் தள்ளியுள்ளது என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். அரசு இவ்விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கும் / எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com