பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியாருக்கு ஒப்பந்தத்தை வழங்க மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என கூட்டத்தில் மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த செப் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இத்திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த சூழலில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், மின் இணைப்புகள், ஒப்பந்ததாரர்களுக்கான பணி, குடிநீர் இணைப்பு, சிலிண்டர் இணைப்பு போன்ற வசதிகளை குறிப்பிட்ட தேதிக்குள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி திங்கட்கிழமை உப்புமா வகையும், செவ்வாய்க்கிழமை கிச்சடி வகையும், புதன்கிழமை பொங்கல் வகையும், வியாழக்கிழமை உப்புமா வகையும், வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் கூடிய இனிப்பு வகையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தமுள்ள 1545 பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்திய பின் பிற மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து சென்றனர்.
இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில், “சென்னையில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்திற்கு ஒராண்டுக்கு 19 கோடி ரூபாய் செலவாகிறது. ஒராண்டில் 66,030 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இப்பணியினை சிறப்பாக வெளி நிறுவனம் மூலம் செயல்படுத்தவும், நிபந்தனைகளை நிர்ணயிக்கவும், துணை ஆணையர் சரண்யா அறி (கல்வி) தலைமையில் கீழ்கண்ட அலுவலர்களை கொண்ட குழு அமைக்க தீர்மானிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் மேற்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட பணிகளாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான காலை உணவு வழங்கப்பட வேண்டும். உணவு வகை பட்டியல் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும். இதனை எந்த காரணம் கொண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியின்றி மாற்றக்கூடாது.
தினந்தோறும் சமைக்க வேண்டிய உணவின் எண்ணிக்கையை உணவு சமைப்பதற்கு முதல் நாள், சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலர் அவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். காலை 8.00 மணிக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட வேண்டும். கால தாமதம் ஏற்படக்கூடாது. காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்” போன்ற பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கருத்துகளை கேட்டோம். அவர் கூறியதாவன, “மாநகராட்சியின் நிர்வாக திறமையின்மையை இது காட்டுகிறது. சென்னை மாநகராட்சிக்கு நிர்வாகத்திறமை இருந்தால், சென்னை மாநகராட்சி தன்னுடைய பள்ளிகளுக்கு ஏற்கெனவே இருக்கக்கூடிய சத்துணவு ஊழியர்களை வைத்து உணவு தயார் செய்து கொடுக்க வேண்டும். தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் எங்கு இருக்கிறது.
சத்துணவு ஊழியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஊதியம் பற்றவில்லை. இருக்கும் சத்துணவு ஊழியர்களை காலையில் உணவு சமைக்கச் சொல்லாம். அவர்கள் மதியம் சமைக்கப்போகிறார்கள் எப்படியும். காலையில் அவர்கள் உணவை தயார் செய்து கொடுப்பதில் என்ன கஷ்டம் இருக்கப்போகிறது. தனியாக இதற்கென சென்டர்களை திறந்துவைத்துள்ளோம் என அவர்கள் கூறினால் அதை மாநகராட்சி நிர்வாகம்தான் நடத்த வேண்டும். மாநகராட்சி நடத்துவது மட்டுமே குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.
குழந்தைகளுக்கு சத்தான, பாதுகாப்பான, சூடான உணவை சமைத்து கொடுப்பதுதான் சரி. அதையும் அந்தந்த பள்ளிகளில் சமைத்துக் கொடுப்பதுதான் நியாயமானது. தனியார் மூலமாக கொடுப்பது எந்த வகையிலும் குழந்தைகளின் பாதுகாப்பையோ, நியாயமான அணுகுமுறையோ அது உத்தரவாதப்படுத்தாது.
இவ்வளவு நாள் செய்துவிட்டு இப்போது செய்ய முடியாததன் காரணம் என்ன? மக்களிடம் வரிப்பணத்தை வசூல் செய்து தனியாரிடம் காண்ட்ராக் கொடுப்பதுதான் மாநகராட்சியின் வேலையா? மாநகராட்சி பள்ளிகளை நிர்வகிக்கும்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான உணவையும் மாநகராட்சிதானே தயார் செய்து கொடுக்க வேண்டும். தனியாரால் செய்ய முடிவது மாநகராட்சியால் செய்ய முடியாதா?
லாபமில்லாமல் எந்த தனியாரும் செயல்பட மாட்டார்கள். தனியார் லாபம் சம்பாதிப்பதற்காக மக்களது வரிப்பணத்தை பயன்படுத்துகிறீர்களா? தனியாருக்கு கொடுத்த வழிமுறைகளை மாநகராட்சியால் செய்ய முடியாதா? அதில் உங்களுக்கு என்ன சிக்கல். தனியாரிலும் யாராவது ஒருவர் சமையல் செய்துதானே ஆக வேண்டும். தனியாரால் ஒருவரை வேலை வாங்க முடிகிறதென்றால் மாநகராட்சிகளில் இருக்கும் அதிகாரிகளால் வேலை வாங்க முடியாதா? இது பொறுப்பை கைகழுவி விடுவது.
மக்களிடம் வரி வசூல் செய்து அதை நீங்கள் நிர்வகிக்க வேண்டும். ஆட்களை நீங்கள் நியமித்து உணவை நீங்கள் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக பொறுப்பை தனியாருக்கு கொடுத்து அவர்களுக்கு பணம் தருகிறேன் என சொன்னால் யாரோ ஒரு இடைத்தரகருக்குத்தான் அந்த பணம். அதேசமயத்தில் குழந்தைகளின் பாதுகாப்பும் சமரசம் செய்துகொள்ளப்படுகிறது. தனியாருக்கு சொல்லும் விதிமுறைகளோடு மாநாகராட்சி நேரடியாக உணவை தயாரிக்க முடியாது என சொல்லுவதற்கு காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத்திற்குரியது - மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி திரும்பப்பெற வேண்டும். மாணவர்களின் நலன் சார்ந்த திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு மாநகராட்சி ஒதுங்குவதை ஏற்க முடியாது. சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாநகராட்சி வாயிலாகவே உணவு வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.