மருது சகோதரர்கள் கால்பதித்த சங்கரபதிக் கோட்டை! சிதலமடைந்த அவலநிலையில் சேதுபதி காலத்து வரலாற்று இடம்

வரலாற்று இடங்கள் இன்றும் தமிழ்நாட்டில் நிலைத்திருக்க... அதன் அருமைத் தெரியாதவர்கள் அண்டை நாடுகளில் வரலாற்று ஆவணங்களைத் தேடுவது கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைந்த கதைப்போல் உள்ளது.
சக்கரபதி கோட்டையின் இன்றைய நிலை.
சக்கரபதி கோட்டையின் இன்றைய நிலை.PT
Published on

சங்கரபதிக்கோட்டை

இது தேவகோட்டைக்கு அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ளது. சிதலமடைந்துள்ள இக்கோட்டையானது ஒரு காலத்தில் வேலு நாச்சியாரின் பாசறையாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா..? தற்பொழுது சிதலமடைந்து, ஆள் ஆரவாரமற்று இருக்கும் இக்கோட்டையானது ஒரு காலத்தில் மிகவும் கம்பீரமாக போர் பயிற்சி அளிக்கும் கூடமாகவும் இருந்து இருக்கிறது.

ராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து விஜய ரகுநாதர் ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள் தங்களிடமிருந்த குதிரைகளை அரசருக்கு பரிசாக அளித்துள்ளனர். இக்குதிரைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்கும், பயிற்சி அளிக்கவும் சேதுபதி அரசர், சங்கரபதி என்பவரை நியமித்து அவரை படைத்தளபதியாகவும் நியமித்தார். அதனால் தான் இது சங்கரபதி கோட்டை என பெயர் பெற்றது.

செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் மகளான வேலு நாச்சியாருக்கு, முத்து வடுகநாதரை மணமுடித்து தரும் சமயம், தனது மகளுக்கு சீதனமாக அவர் வழங்கியது தான் இந்த கோட்டை என்று வரலாற்று ஆய்வாளார்கள் கூறுகிறார்கள். ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களுடன் போர் புரிவதற்கு படைவீரர்களுக்கு பயிற்சி அளித்த பல கோட்டைகளில் இக்கோட்டை முக்கியம் வாய்ந்தது.

சக்கரபதி கோட்டையின் இன்றைய நிலை.
காஞ்சிபுர விண்ணகர கோவிலுக்கும் அங்கோவார்ட் கோவிலுக்கும் என்ன ஒற்றுமை?

இங்கு தான் ஆங்கிலேயரை எதிர்க்க பல திட்டங்கள் தீட்டப்பட்டதாம். முத்து வடுகநாதர் மறைந்த பிறகு, ஆங்கிலேயரை பழிவாங்க இக்கோட்டையில் பலகாலம் வேலு நாச்சியார் தங்கி மருதுபாண்டியர்களுடன் இணைந்து பல்வேறு போர் யுக்திகளை வகுத்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய பெருமைவாய்ந்த இக்கோட்டையானது இன்று சிதலமடைந்து காணப்பட்டாலும் இதன் கட்டுமானமும் கம்பீரமும் நம்மை மிரள வைக்கின்றன. ஆங்கிலேயர் படையெடுப்பு சமயத்தில் அவர்களை எதிர்க்க, மருது சகோதரர்கள் தங்களின் வீரர்களுக்கு பயிற்சி அளித்த இடம் தான் இந்த கோட்டை.

இதில் சுரங்க வழிபாதை இருக்கிறது எனவும் அது ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை அரண்மனையை இணைக்கும் ஒரு வழியாக பயன்படுத்தப்பட்டது எனவும் கூறுகின்றனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட ஆங்கிலேய அரசு அவரது தம்பியான ஊமத்துரையை பிடிக்க முயன்ற பொழுது அவர் மருது சகோதர்களின் உதவியை நாடினார் என்றும், இந்த கோட்டையில் மருது சகோதரர்கள் , ஊமத்துரைக்கு அடைக்கலம் கொடுத்து தங்க ஏற்பாடு செய்தனர் எனவும் சில வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

காப்பாற்ற படவேண்டிய வரலாற்று இடம் ஒன்று, சிதலமடைந்து இருப்பது வேதனையளிக்கிறது என்று வரலாற்றாசிரியர்கள் பலரும் வேதனை தெரிவித்தும் வருகின்றனர்!

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டசபையில் 110 விதியின் கீழ் சுற்றுலா தளமாகஅறிவிப்புச் செய்திருந்தார். ஆனால், அவரது மறைவிற்குப்பின் அந்த அறிவிப்பு அலட்சியப்படுத்தப்பட்டதால் தற்போது வரை சங்கரபதி கோட்டை சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்து கிடப்பது வேதனை அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக தமிழக அரசு இக்கோட்டையை சீரமைக்க நிதி ஒதுக்கி வரலாற்றுப் பெருமைகளை காக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com