“கத கேளு கத கேளு..
நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக
உருவான கத கேளு!” என்ற பஞ்சு அருணாச்சலம் பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்றைய இணையதள தகவல் பரிமாற்றத்தின் மூலம் செவி வழியாக கேட்டு மகிழும் ‘ஆடியோ’ கதைகளுக்கு மவுசு கூடி வருகிறது. சிறுவர்கள் தொடங்கி அனைத்து வயதினரும் தங்கள் வேலைகளுக்கு எந்த இடற்பாடுமின்றி ‘வலையொலி’ (Podcast) மூலம் ஆடியோ கதைகளை கேட்டு ரசித்து வருவதே அதற்கு உதாரணம்.
இந்த டிஜிட்டல் உலகில் பல்வேறு மொழிகளில் வலையொலிகள் பேசி வருகிறன. சந்தா கட்டணத்துடன் (Paid), இலவசமாக (Free) என அது நீள்கிறது. அப்படிப்பட்ட வலையொலிதான் ‘பிரதிலிபி FM - ஆடியோ ஸ்டோரிஸ்’. இலவசமாக ஆடியோ கதைகளை சொல்லி வருகிறது.
பிரதிலிபி FM - ஆடியோ ஸ்டோரிஸ்
2.5 கோடிக்கும் மேற்பட்ட வாசகர்கள், 27 லட்சத்திற்கும் மேற்பட்ட கதைகள், 2.7 லட்சம் படைப்பாளிகள், 12 மொழிகள் என படைப்பாளிகள் மற்றும் வாசகர்களை கதைகள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக இணைத்து வருகிறது பிரதிலிபி தளம். தற்போது அடுத்தகட்டமாக எழுத்து வடிவில் உள்ள அந்த கதைகள் ஆடியோ வடிவில் உயிர் பெற்றுள்ளது.
தமிழ், இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் குஜராத்தி என இந்திய நாட்டின் பிராந்திய மொழிகளில் பிரதிலிபி FM கதை சொல்லி வருகிறது. காலத்தினால் என்றென்றும் அழிக்க முடியாத படைப்புகள் தொடங்கி சமகால படைப்புகள் வரை இந்த தளம் பேசி வருகிறது. இதனை வலைதளம் மற்றும் மொபைல் போன் அப்ளிகேஷன் வடிவில் பெற முடிவது சிறப்பு.
அதுவும் ரொமான்ஸ், கிளாசிக், த்ரில்லர், ஃபேன்டசி, திகில், நகைச்சுவை, புதினம் என பல்வேறு ஜானர்களில் இதில் பயனர்கள் கதைகளை கேட்டு மகிழலாம். அதுவும் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் இந்த கதைகளை கைபேசி மூலம் கேட்பது சிறந்தவொரு முயற்சி தானே.
தமிழில் என்னென்ன படைப்புகள் இந்த செயலி மூலம் கேட்கலாம்!
தமிழில் பல நூறு அத்தியாயங்களை தாங்கி நிற்கிறது இந்த செயலி. அதோடு குட்டி ஸ்டோரிகளும் இதில் உள்ளன. குறிப்பிட்டு சொல்லும் வகையிலான ஆடியோ நூல் என்றால் அது கல்கியின் பொன்னியின் செல்வன். சுமார் 293 அத்தியாயங்களை கொண்டுள்ளது இந்த படைப்பு. முனைவர் ரத்னமாலா புரூஸ் குரலில் இதனை ஒலிச் சேர்க்கைகளுடன் கேட்க முடிகிறது. அதுமட்டுமல்லாது ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளிலும் இந்த செயலியின் மூலம் கதைகளை கேட்க முடிகிறது.
இந்த செயலியை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம். கதைகளை டவுன்லோட் செய்து ஆப்லைனில் கேட்கும் வசதிகளும் உள்ளது. அதோடு இந்த செயலியை பயன்படுத்து பயனர்கள் Sign Up செய்வதன் மூலம் தங்களது குரல்களில், தங்களுக்கு பிடித்த ஆடியோ கதைகளை பதிவு செய்து, அதனை இதில் அப்லோட் செய்யும் வசதிகளும் உள்ளன. இப்போதைக்கு இந்த செயலியை ஆண்ட்ராய்டு இயங்குதள வசதி கொண்டு பயனர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற டிஜிட்டல் சாதனங்கள் மூலம் https://pratilipifm.com/ என்ற தளத்தின் மூலம் ஆடியோ கதைகளை இலவசமாக கேட்கலாம்.
அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய: ஆண்ட்ராய்டு லிங்க்!
முந்தைய அத்தியாயம்: 'ஆப்' இன்றி அமையா உலகு 22: உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவும் செயலி!