நியூட்ரினோ திட்டம் தேனியில் இனி சாத்தியமில்லை

நியூட்ரினோ திட்டம் தேனியில் இனி சாத்தியமில்லை
நியூட்ரினோ திட்டம் தேனியில் இனி சாத்தியமில்லை
Published on

நியூட்ரினோ திட்டம் தேனியில் தொடங்க வாய்ப்பு இல்லை என்றும், அது ஆந்திராவுக்கு செல்வது உறுதி என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறை இணையதளத்திற்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், “நியூட்ரினோ திட்டம் தமிழகத்தை விட்டுப்போகவில்லை என்று சில நாளிதழ்களில் இன்றைக்கு செய்தி வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இரண்டு இடங்களை ஆராய்ந்து அதில் ஒரு இடத்தை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் இப்போது முடிவுசெய்யப்பட்டிருக்கும் இடம், மேற்கு தொடர்ச்சி மலைகளை விட சிறந்த இடம் என்று துறை வல்லுநர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறிவருகின்றனர். இப்படி சொல்வதால் நியூட்ரினோ திட்டம் ஆந்திராவில் வரவேண்டும் என்று சொல்வதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை, ஆனால் நியூட்ரினோ ஆய்வக அதிகாரிகள் பொட்டிபுரம்தான் உலகத்தில் "சாலச் சிறந்த இடம்" என்கிற வாதத்தை வைத்த சமயத்தில், அப்படி எல்லாம் கிடையாது இதை விட சிறந்த இடங்கள் உள்ளன என்று எடுத்து வைத்தோம்.

ஆந்திர மாநிலத்திற்கு செல்வதால் நியூட்ரினோ திட்டத்திற்கு இலகுவாக அனுமதி கிடைக்கும் என்கிற உண்மைதான் அவர்களை ஆந்திர மாநிலத்திற்கு செல்ல வைத்துள்ளது. பொட்டிபுரத்தில் மறுபடியும் அனுமதி வாங்க வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தை வைத்து புதிதாக சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை மக்கள் மொழியில் மொழிபெயர்த்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும். இதைத் தவிர தேசிய வனவிலங்கு நல வாரியத்திடம் (கேரளா மாநிலம்) அனுமதி வாங்க வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க இரண்டு வருட காலமாகும். இவை எல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்றால், பொட்டிபுரம் இரு மாநில எல்லையில் 10 கி.மீ க்குள் உள்ளதால் இது "category A" திட்டம் என்று வகைப்படுத்தி, இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் சொல்லியுள்ளது. ஆனால் ஆந்திரா மாநிலத்தில் இப்போது முடிவு செய்யப்பட்டுள்ள இடம், அந்த மாநிலத்தின் உட்பகுதியில் உள்ளது, இரு மாநில எல்லைகள் எல்லாம் கிடையாது, அதனால் இந்த திட்டம் "category B" ஆக கருதப்பட்டு மாநில அரசே "கட்டிடங்கள் கட்டுவது" (Large Construction Project) என்று சொல்லி அனுமதியை வழங்கிவிடும். தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கியதில் மேலும் பல விதிமீறல்கள் உள்ளன, அவற்றை வரும் காலங்களில் வெளிக்கொண்டு வருவோம்” என்று கூறினார்.

முன்னதாக, தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதற்கான பணிகளையும் அரசு தொடங்கியது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியை சுற்றி பல முக்கிய நீராதாரங்கள் இருப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மறுபடியும் அனுமதி கேட்கப் போவதாக நியூட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தாடர் கூறினார். ஆனால் அனுமதி கேட்பதோ, அதை அமல்படுத்துவதோ அவ்வளவு சுலபமில்லை என்கிறார் சுந்தர்ராஜன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com