குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி - 5 மாநில தேர்தல்களிலும் சுற்றி சுழலும் ஒற்றை வாக்குறுதி

குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி - 5 மாநில தேர்தல்களிலும் சுற்றி சுழலும் ஒற்றை வாக்குறுதி
குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி - 5 மாநில தேர்தல்களிலும் சுற்றி சுழலும் ஒற்றை வாக்குறுதி
Published on

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் களைகட்டியுள்ளது. கட்சிகள் வெவ்வேறாக இருந்தாலும் காட்சிகள் ஒன்றுதான் என்பதற்கு ஏற்றார்போல் இந்த ஐந்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லி வைத்தார் போல் ஒரே ஒரு வாக்குறுதியில் மிக ஒற்றுமையாக இருக்கின்றன. அது என்ன வாக்குறுதி விரிவாக காணலாம்.

பொதுவாக தேர்தல்களில் மக்களை அதிகம் கவரக்கூடிய அம்சங்களை கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவார்கள். வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம் போன்ற அம்சங்கள் அரசியல் கட்சிகள் எப்போதும் அரைக்கும் அதே மாவுகள் தான். எனவே இலவசங்களை போல இந்தத் திட்டங்களை பொதுமக்கள் பெரிதும் கவனிக்க மாட்டார்கள். ஆனால், தற்போது 5 மாநில தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் அடிப்படை வாழ்வாதார தொகை வழங்கப்படும் என்பது தான் அனைவரிடமும் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட, நீங்கள் 1000 ரூபாய் கொடுத்தால் நாங்கள் 1500 ரூபாய் கொடுப்போம் என அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் அதிரடி காட்டப்பட்டது. மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பிற கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாத வருமானம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக தமிழகத்தின் நலத்திட்டங்களை பிற மாநிலங்கள் செயல்படுத்துவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, சத்துணவு தொடங்கி, அம்மா உணவகம் வரை அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால் இந்த முறை தேர்தல் அறிக்கையியையே தமிழகத்திடம் இருந்து பிற மாநிலத்தவர்கள் காபி அடித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான யு டி எப் கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 40 முதல் 60 வயதான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதே குடும்பத் தலைவிகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை தான் தற்போது கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய கம்யூனிஸ்டுகள் தலைமையிலான எல் டி எப் கூட்டணி சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. மச்சம் ஒட்டி வந்தால் கெட்டப் சேஞ்ச் என்பது போல தமிழக கட்சிகளின் அறிவிப்பின் மற்றொரு வெர்சன் தான் இந்த பென்சன் திட்டம்.

இதே போல திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஓபிசி , எஸ்சி எஸ் டி பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு மாதம் 1000 ரூபாயும் பொதுப் பிரிவைச் சேர்ந்த அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ஐநூறு ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். இந்தத் தொகை அந்த குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளும் இதே பாணியில் குடும்பத்தலைவி களுக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு தாய்மார்களின் வாக்குகளுக்கு குறி வைத்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்க அந்த மாநிலம் முழுவதும் தற்போது இதே பேச்சு தான்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்னும் எந்த ஒரு மாநிலத்திலும் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படாத நிலையில் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவி களுக்கான சிறப்பு திட்டங்கள் நிச்சயம் இடம் பெறும் என கூறப்படுகிறது.

இப்படி இந்த தேர்தலில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளனர் குடும்பத் தலைவிகள். நிதி ஆதாரங்கள் அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிறைய ஐயப்பாடுகள் இருந்தாலும் கூட தங்களுக்கு தேவையான சைடு பின் முதல் சேப்ட்டி நாப்கின் வரை குடும்ப தலைவிகள் தங்கள் கணவர்களின் கைகளை நம்பி இருக்க வேண்டியுள்ளது. உளவியல் ரீதியாக பெண்களை மனதளவில் தாழ்த்தவும், male chauvinism எனப்படும் ஆணாதிக்க மனோபாவம் வளரவும் இடம் கொடுக்க கூடிய இதனை மாற்ற குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் இந்த தொகை நிச்சயம் உதவியாக இருக்கும்.

நாடு நலமாக இருக்க வீடு நலமாக இருக்க வேண்டும் என்ற சொல்லாடல் உண்டு, அந்த வீடு நலமாக இருக்க குடும்ப தலைவிகள் நலமாக இருக்கட்டும். சொந்த காலில் நிற்க பெண்கள் பழகி கொண்டாலும் அவர்களுக்கன போனசாக இந்த தொகை இருக்கட்டுமே. இப்படி பல விஷயங்கள் இருப்பதால் குறை ஏதும் கூறிக்கொள்ளாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் 5 மாநில தேர்தலிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர் குடும்ப தலைவிகள்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com