"நீண்டகால எதிர்பார்ப்பு", "அரசியலில் ஆன்மீகம் எடுபடாது!" - ரஜினி... பாஜக Vs காங்கிரஸ்

"நீண்டகால எதிர்பார்ப்பு", "அரசியலில் ஆன்மீகம் எடுபடாது!" - ரஜினி... பாஜக Vs காங்கிரஸ்
"நீண்டகால எதிர்பார்ப்பு", "அரசியலில் ஆன்மீகம் எடுபடாது!" - ரஜினி... பாஜக Vs காங்கிரஸ்
Published on

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியல் எப்படிபட்ட சூழ்நிலையில் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவது ஏற்கக்கூடியது. சூப்பர் ஸ்டாராக மக்கள் அறியக்கூடிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதற்கு மனபூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், “ரஜினியின் அரசியல் வருகை குறித்த எதிர்ப்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அனைவருக்கும் கட்சி தொடங்கும் உரிமை உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் ஒபிஎஸ் இபிஎஸ் சிறப்பாக வழிநடத்தி கொண்டு இருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எங்கும் செல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், “ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது. திமுகவுடன் ஏற்கெனவே கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும். ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது. ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி விரைவில் முடிவை அறிவிப்பதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது கட்சி ஆரம்பிப்பது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போது அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்டாயம். அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன். கொடுத்த வாக்கில் தவறமாட்டேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான். நான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் மக்களின் தோல்வி. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com