வேகமாக நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது நிவர் புயல். டெல்டாவை குறி வைக்கும் என முதலில் கணிக்கப்பட்ட நிவர் தற்போது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவர் புயலால் கடலோர மாவட்டங்களுக்கு கடுமையான மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. மீட்புப்படையினர் தயார்படுத்தப்படுகின்றனர்.
தண்ணீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் மின் மோட்டார்களும் தயார் படுத்தப்படுகின்றன. இதற்கிடையே பேரிடர் மீட்புப்படையினர் கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அரசு ஒருபுறம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், மக்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதே ஆகச்சிறந்தது.
பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
புயல் பாதிப்பு இல்லை என்றாலும் அதிக மழை பெய்யும் நேரத்தில் மின்சாரம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் மிக மிக அவசியம்.
வாகனங்களுக்கான பாதுகாப்பு:
புயல் வீச வாய்ப்புள்ள இடங்களில் வாகனங்களை சாலையில் மரங்களின் கீழ் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். பலமான கட்டடங்களின் கீழ் கார், பைக் போன்றவற்றை நிறுத்தலாம். அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள், மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றின் கீழ் நிறுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் கடுமையாக தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வாகனத்தை நிறுத்த வேண்டாம்
குறிப்பாக உங்கள் வீடு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட வேண்டும். புயல், மழையின் போது செல்போன் மூலம் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதோ, வீடியோ, புகைப்படம், பேஸ்புக் லைவ் என ஆர்வப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்வதையோ கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.