திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பாஜகவினரின் வெற்றி உற்சாகத்தில் உடைத்த சிலைக்குப் பின்னால் ஒரு தத்துவார்த்த அரசியல் கோட்பாடு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிதான் அதற்கு பொருள் கூற முடியும். திரிபுராவில் சிலை வீழ்ந்தவுடன் தமிழ்நாட்டில் வழக்கம்போல் திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில்..இன்று திரிபுராவில் லெனின் சிலை..நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை” என மிரட்டல் விட்டிருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் வரலாறு ராஜாவுக்குத் தெரியவில்லை என்பதல்ல பிரச்னை. அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரலாற்றை கூடவா அவ்வளவு லேசில் மறந்து போவிட்டார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என குறிக்கும் நோட்டாவிற்கு 2373 வாக்குகள் கிடைத்த நிலையில் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் 1417 வாக்குகளைதான் வாங்கி இருந்தார். இதான் தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை.
கூடவே இங்கு இன்னொன்றை நான் குறிப்பிட்டாக வேண்டும். ராஜா சமீபத்தில் சாரணர், சாரணியர் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு அலையே வீசியது. அவரால் வெறும் 52 வாக்குகளை மட்டுமே வாங்க முடிந்திருந்தது. அப்படி இருந்தும் அவர் பெரியார் சிலை உடைக்கப்படும் என பேசுவதிற்குப் பின்னால் இருப்பது கட்சி பலம் அல்ல. அதை தாண்டிய ஒரு கண்ணுக்குப் புலப்படாத பலம். அது தரும் தைரியத்தில்தான் அவரால் குரலை உயர்த்த முடிகிறது.
இங்கே அவர் சார்ந்த கொள்கைகளை பரப்புவதில் அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்தச் சுதந்திரம் பாசிசமாக மாறிவிடக்கூடாது. ராஜாஜி கூட நீல்ஸ் சிலையை அகற்ற வேண்டும் என ஒரு போராட்டம் நடத்தினார். ஒரு அந்நியத்தின் அடையாளம் என்பதை தாண்டி ஒரு அநீதியின் அடையாளமாக உள்ள நீல்ஸ் சிலையை அகற்ற வேண்டும் என அவர் குரல் எழுப்பினார். அதற்குள் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் அவசர அவசரமாக இரவோடு இரவாக கண்ணகி சிலையை அகற்றிய ஜெயலலிதாவின் செயலை ராஜாஜியோடு ஒப்பிட்ட முடியாது. ராஜாஜி களைந்தது நம் மீது படிந்துள்ள அவமானத்தை. ஆனால் ஜெயலலிதா நிகழ்த்தியது அதிகாரத்தின் மயக்கத்தில் ஒரு கலாச்சார வெறியாட்டத்தை. அந்தக் குரலில்தான் இப்போது ராஜா பேசுகிறார்.
பொதுவாக இந்தச் சிலை உடைப்புக் கலாச்சாரம் வரலாறு நெடுகவே தொடர்ந்து வந்துள்ளது. சைவ மதத்தின் ஆதிக்கம் தலைத்துாக்கிய போது சமண சிலைகளையும் பெளத்த சிலைகளையும் உடைத்து எரிந்தனர். அதன் சாட்சியமாகத்தான் ஒவ்வொரு அருங்காட்சியத்திலும் தலை முண்டமான பல சிலைகள் நம் காட்சிக்கு கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதவாத தாலிபான்கள் ஆதிக்கம் தலைத்துாக்கிய போது புத்த சிலைகள் பீரங்கி வைத்து தகர்க்கப்பட்டன. உலகமே அதனை கண்டித்தது. வரலாற்றுச் சின்னங்கள் சிதைக்கப்படுவது என்பது ஒரு நாட்டின் பிரச்னை அல்ல; அது உலகப் பிரச்னை. அதைபோல பவுத்த இன வாதம் தலைத்துக்கிய போது இலங்கையில் இந்துக் கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்து உருவச் சிலைகளுக்குப் பதிலாக அங்கே பெளத்த கோயில்கள் உருவாக்கப்பட்டன.
உண்மையில் கூறப்போனால் இது ஒரு பழமைவாதம். நிலபிரபுத்துவ மனோநிலை. ஜனநாயக வரம்புக்குள் இதற்கு இடங்களே இல்லை. ஒரு பக்கம் பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா. உலக நாடுகளுடன் நல்லுறவு. அண்டைநாடுகளுடனான பயணம் என போய் கொண்டிருக்கிறார். பிரிவினையை எதிர்த்து கருத்துக்கள் கூறுகிறார். ஆனால் அவரது கட்சி சகாக்களோ மீண்டும் ஒரு பழமை வாதத்திற்கு நாட்டை கொண்டு செல்கிறார்கள். தாஜ்மஹால் ஒரு கல்லறை என்கிறார் ஒருவர். அவமானச் சின்னம் அதனை உடைக்க வேண்டும் என்கிறார் ஒருவர். இந்துக்கள் இல்லை என்றால் நாட்டை விட்டு புறப்படுங்கள் என்கிறார் இன்னொருவர். இவை யாரோ கூறும் வாய் வார்த்தைகள் அல்ல; எல்லாம் பாஜகவின் அதிகாரம் பொருந்தியவர்கள் கூறும் வார்த்தைகள் இவை.
அந்த விதையைதான் இங்கே ஹெச்.ராஜா தூவி பார்க்கிறார். சாலையோரங்களில் இருக்கும் கோயில் ஸ்தங்கள் அகற்றப்படுவதை எதிர்க்கும் இவர் ஈ.வே.ரா. சிலையை உடைப்போம் என்பதில் ஒளிந்திருப்பது அரசியல் சாயமா? அல்லது வேறு ஏதேனும் சாயமா? ஒரு கோட்பாட்டை அல்லது அரசியல் தத்துவத்தை எதிர்க்கிறோம் என்றால் அதனை கருத்தியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். அதன் சுவடே இல்லாமல் செய்ய வேண்டும் என நினைப்பது என்ன மனநிலை?
லிபியாவில் கடாஃபி ஆட்சி காலியாக போகும் அவரது உருவச் சிலை உடைக்கப்பட்டது. சாதம் தூக்கிலிடப்பட்ட போது அவரது அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அவரு சிலை உடைக்கப்பட்டது. அதே அரசியலை இங்கே கொண்டுவர வேண்டும் என விரும்புகிறாரா ராஜா? அப்படி என்றால் அவர் விரும்பும் முன்னேற்றம் இதுதானா? காலம் முழுவதும் கடவுள் மறுப்பு, மதவெறியை எதிர்த்த பெரியார் எந்தத் தலைவர் சிலையையும் உடைக்க சொல்லவே இல்லை. மாறாக மதத் தலைவர்களுடன் அவர் கூடிப் பேசினார்.
ராஜா தன் இயக்கத்தை பலப்படுத்த விரும்பினால் அவர் உரையாட வேண்டும். உசுப்பல் அரசியலை விட்டு அவர் வெளியேற வேண்டும். ஆகவேதான் அவர் சொன்ன கருத்துக்கு அவரே நியாயம் சேர்க்காமல் இருக்கிறார். சிலையை உடைக்க வேண்டும் என சொன்னவருக்கு எதிராக ஸ்டாலின் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என உடனே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ‘முப்பாட்டன் வந்தாலும் பெரியார் சிலையை தொட முடியாது’ என திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ‘என் தலைமையில் தடுக்கும் படை வரும்’ என வைகோ பேசி இருக்கிறார். பிரச்னை பெரிதாகிறது என்றதும் கூறிய கருத்தை டெலீட் செய்துவிட்டு புறப்பட்டு விட்டார் ராஜா. இதுதான் கொள்கையின் சாரமா? இறுதிவரை தனது கருத்திற்காக மரணப்படுக்கை வரை நின்றவர் காந்தி. ஆகவேதான் இந்தத் தேசத்திற்கு காந்தி தேசம் என பெயரிடுங்கள் என்றார் பெரியார். உண்மையில் எலும்பும் தோலுமாக இருந்த காந்திதான் இந்தியாவின் இரும்பு மனிதர். உலகம் முழுக்க இந்த மனிதருக்கு சிலை இருப்பது அதற்காகதான். ஒவ்வொரு நாட்டிலும் காந்தியின் சிலை போதித்துக் கொண்டிருப்பதும் அதைதான்.
லெனினுக்கு எதற்கு இங்கே சிலை என்கிறார் ராஜா. 25 ஆண்டுகள் ஆட்சியின் அடையாளம் அது. அதன் மீது உங்களுக்கு மாற்று பார்வை இருக்கலாம். அதை மாற்ற நீங்கள் உழைக்க வேண்டும். ஊர் ஊராக சென்று குரல் எழுப்ப வேண்டும். அதைவிட்டுவிட்டு தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே ஜேசிபி வைத்து இடிப்பது எதற்காக? பாபர் மசூதியில் தொடங்கிய பிரச்னை இது. இன்னும் அதை விட்டு வெளியே வர மாட்டேன் என்பது முறையான அரசியல் அல்ல. லெனினுக்கு சிலை இந்தியாவில் எதற்கு என கேட்டால் காந்திக்கு இங்கே சிலை எதற்கு ஒரு வெளிநாட்டவன் கேட்பான்.
பாஜகவிற்கு இந்த அடையாள அழிப்பின் மீது பெரும் பசி இருக்கிறது. ஆகவே தான் ஒளரங்க சீப் சாலையை அப்துல்கலாம் சாலை என மாற்றி மகிழ்கிறார்கள். காந்தியின் அடையாளத்தை மாற்றி ‘தூய்மையின் அடையாளத்தை’ போதிக்கிறார்கள். காந்தி மறைக்கப்படுவதும் சர்தார் வல்லபாய் பட்டேல் உயர்த்திப் பிடிப்பதற்கும் பின்னால் ஒளிந்திருப்பது உண்மையான நாட்டுப் பற்றா? மாற்று அரசியலின்பால் உள்ள வெறுப்பா? ‘காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்’ என்றார் லெனின். ஆகவேதான்இவர்கள் லெனின் சிலை மீது கைவைப்பதுதான் சந்தேகம் வலுக்கிறது.
ஹோலி கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கிறார்கள் இந்திய மக்கள். மகிழ்ச்சியின் அடையாளமாக மக்கள் வண்ணங்களை வாரி இரைத்து வருகிறார்கள். அந்த வண்ணம் இந்திய மக்களின் பல்வேறு கலாச்சாரத்தை காட்டுகிறது. அவ்வளவு வண்ணத்தையும் அழித்து விட்டு ஒரே ஒரு வண்ணம்தான் இருக்க வேண்டும் என நினைப்பதுதான் உங்கள் எண்ணமா ராஜா?