பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி என்று தனது கடைசி காலம் வரை முழங்கிய பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் இன்று.
சமூகத்தில் மிகப்பெரும் மாற்றங்களை நிகழ்த்திய பெரியார் சமகால வாழ்க்கையுடனும், அரசியலுடனும் ஒத்துப் போகிறார் என்றால் அது மிகையல்ல!
'தாழ்ந்து கிடக்கும் மக்களை பகுத்தறிவு உயர்த்தும்' நான் சொல்வதை அப்படியே நம்பாதீர்கள், உங்களுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று எல்லாக் கூட்டங்களிலும் கூறிய பெரியார் மாற்றுக்கருத்தையும் மதித்து பதில் அளிக்கும் பண்புடையவர். ஈரோடு வெங்கடப்பன் ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் பெண்ணடிமைத் தனம் குறித்து மாபெரும் பிரச்சாரம் செய்ததற்காக பெண்களால் கொடுக்கப்பட்ட பட்டம் தான் பெரியார்.
1879ஆம் ஆண்டு இதே நாள் ஈரோட்டில் பிறந்த பெரியார் தனது இறுதி மூச்சு வரை சாதிய ஏற்றத்தாழ்வை அகற்றவும், பெண் அடிமைத்தனத்தை களையவும், மூட நம்பிக்கைகளை நீக்கவும் பாடுபட்டார். தனது 25 வயதில் பெரியார் மேற்கொண்ட காசி பயணம் அவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இறை மறுப்பு கொள்கையை கடைபிடிக்கத் தொடங்கிய பெரியார் பெண் விடுதலை இல்லையேல், ஆண் விடுதலை இல்லை என்ற சிந்தனையை விதைத்து, சாதிய ஒழிப்புடன் பெண் விடுதலையையும் சேர்த்துக்கொண்டார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஆதரவாக வைக்கம் போராட்டம் நடத்திய பெரியார், 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அதன் பின்னர் பெரியார் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் அவரது கருத்துகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்துகிடக்கும் மக்களை உயர்த்தும் என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். கடவுள் மறுப்பு, பெண்கள் முன்னேற்றம், மூட நம்பிக்கை குறித்து அச்சமின்றி கருத்துகளை பதிவு செய்த பெரியார் மீது பல்வேறு விமர்சனங்கள் இப்போதும் உண்டு. ஆனால் சமூக மாற்றத்தில் பெரியாருக்கு பெரும் பங்குண்டு என்பதையும், அவர் இன்றும் தேவைப்படுகிறார் என்ற கருத்தையும் யாராலும் மறுக்க முடியாது.