பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம்

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம்
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம்
Published on

தொண்டு செய்து பழுத்த பழமான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 142 பிறந்த நாள் இன்று. அவரது இளமைக்கால வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம்…

பெரியாரின்  தங்கை  கண்ணம்மாளின் மகன்  எஸ்.ஆர். சாமி, பெரியாரிடம் உதவியாளராக  இருந்தபோது பெற்ற அரிய அனுபவங்களை 'விடுதலை' நாளிதழின் 111வது  (17.9.1989) பெரியார் பிறந்தநாள் விழா மலரில் எழுதினார். அதில், குடும்பத்தால் கைவிடப்பட்ட ஒரு சிறுவனை  பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையார் எடுத்து வளர்த்து ஆளாக்கியதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பெரியாருக்கு  ஓர்  அண்ணன்  ஈ.வெ.கிருஷ்ணசாமி. பொன்னுத்தாய், கண்ணம்மாள் ஆகிய இரு தங்கைகள். கண்ணம்மாளை மாப்பிள்ளை நாயக்கர் என்ற ராமசாமி நாயக்கருக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். கண்ணம்மாளுக்கு குழந்தைப்பேறு இல்லை என்பதால், மாப்பிள்ளை நாயக்கர் இரண்டாம் தாரமாக பொன்னம்மாள் என்பவரை மணந்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள்  பிறந்தனர். கடைசி மகன்தான் எஸ்.ஆர்.சாமி. இவரை ஐந்து வயதில் இருந்து வளர்த்துப் படிக்கவைத்தார் பெரியார். சிறுவனாக இருந்தபோது அவரை சுற்றுப்பயணத்துக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

பெரியார் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு ஈரோடு வரும்போதெல்லாம், அவருடன்  கூடவே  உதவிக்கு இருப்பார் எஸ்.ஆர்.சாமி. ஈரோடு நேதாஜி சாலையில் உள்ள மன்றத்தில் தங்கிப் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பார் பெரியார்.  அப்போது எஸ்.ஆர்.சாமி, பெரியார் மன்ற வாசலில் உட்கார்ந்திருப்பார். பார்வையாளர்கள் வந்தால், பெரியாரிடம் அனுமதி பெற்று அனுப்பிவைப்பார்.

இனி எஸ்.ஆர்.சாமியின் அனுபவம்...

ஒரு நாள் பட்டைப் பட்டையாக நாமம் தரித்த வயது முதிர்ந்த வைணவப் பிராமணர் ஒருவர், பெரியார் மன்றத்திற்கு வந்தார். வாசலில் உட்கார்ந்த என்னைப் பார்த்து, "ராமசாமி இருக்கிறானா?" என்று ஒருமையில் கேட்டார். பெரியாரை ஒரு பிராமணர்,  ஒருமையில் இருக்கிறானா என்று கேட்கிறாரே என்று பொங்கிய  சினத்துடன் சத்தம் போட்டு, இல்லை என்று சொல்லிவிட்டேன். அந்தப் பிராமணர் வாடிய முகத்துடன் நின்றுகொண்டிருந்தார். நான் சத்தம் போட்டுப் பேசியதை காதில் வாங்கிய பெரியார் என்னை, "இங்கே வா..." என்று கூப்பிட்டு, "ஏன் சத்தம் போட்டுப் பேசினாய்? யார் வந்திருக்கிறார்கள்?" என்று கேட்டார்.

பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையார் 

"வயதான ஒரு பிராமண முதியவர், தங்களை ஒருமையில் ராமசாமி இருக்கிறானா? என்று கேட்டார். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தாங்கள் இல்லை என்று சொல்லிவிட்டேன்" என்றேன். "சரி. அவரைப் போய் அழைத்து வா" என்றார். வெளியே நின்ற அவரை உள்ளே அழைத்து வந்தேன். அவர் வந்த உடனே, இருவரும் கண்களில் கண்ணீர் துளிர்க்க கட்டிப்பிடித்துத் தழுவிக்கொண்டனர். அந்தக் காட்சியைப் பார்த்து வியந்து நின்றேன்.

பின்  இருவரும் குடும்ப நலன்  குறித்து பேசிக்கொண்டிருந்தனர். பின் அந்த முதியவர்  என்னைப் பற்றி பெரியாரிடம் குறைகூறினார். அதற்குப் பெரியார், "நம்ம கண்ணு மகன் எஸ்.ஆர்.சாமி" என்று கூறி, என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

பிறகு அவர் விடைபெற்றுச் சென்றதும் எஸ்.ஆர்.சாமியிடம், "வந்த பிராமண முதியவரை சிறுவயதில் தாய் சின்னத்தாயம்மையார் எடுத்து வளர்த்துப் படிக்கவைத்தார். பின் அவருக்கு சார்பதிவாளர் உத்தியோகம் கிடைத்து, வசதியாக வாழ்ந்து ஓய்வுபெற்றவர். நானும் அவரும் சிறுவனாக இருந்தபோது மிக நெருக்கமாகப் பழகிவந்தோம். அதனால்தான் சாதாரணமாக பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்" என்று எஸ்.ஆர்.சாமியை அமைதிப்படுத்தினார். "மேலும் இவரைப்போலவே பல அனாதைப் பிள்ளைகளை வளர்த்துப் படிக்கவைத்து  ஆளாக்கியிருக்கிறார்  சின்னத்தாயம்மையார்" என்று அமைதியாக விளக்கினார்  பெரியார்.

நன்றி: சு.ஒளிச்செங்கோ தொகுத்த பெரியார் அடுக்குச்சொல்: சில நினைவுகளும் கட்டுரைகளும் என்ற நூலில் இருந்து…

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com