தேசிய பறவையான மயில்கள் மற்ற பறவைகளைப் போலவே செக்ஸ் வைத்துக் கொள்வதாக வீடியோ ஆதாரத்துடன் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மயில்கள் பிரமச்சாரிகள் என்பதாலேயே அது தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ்சந்த் ஷர்மா கூறியிருந்தார். இதையடுத்து மயில்கள் குறித்த இணையதேடல்களால் கூகுள் அதிர்ந்தது. நீதிபதி மகேஷ்சந்தின் கூற்று அறிவியல் ரீதியாக தவறானது என்று நெட்டிசன்கள் பலரும் வீடியோ ஆதாரங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சயின்ஸிங்.காம் (Sciencing.com) என்ற இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, மயில்கள் இனப்பெருக்க காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையுடன் (பாலிகோமி) இணையும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வசந்தகாலத்தில் மயில்கள் இனப்பெருக்கம் செய்வதாக லைவ்சயின்ஸ்.காம் (Livescience.com) இணையதளம் கூறுகிறது. புறா உள்ளிட்ட பெரும்பாலான பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் முறையிலேயே மயில்களும் இனப்பெருக்கம் செய்வதாக உயிரியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால், மயில்கள் பிரமச்சாரிகள் என்ற வாதம் தவறானது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மயில்கள் உடலுறவு கொள்ளும் காட்சி அடங்கிய யூடியூப் வீடியோ லிங்க்குகளையும் ஷேர் செய்கின்றனர்.
இதே கருத்தினையே மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நீதிபதி மகேஷ்சந்தின் கூற்று முற்றிலும் தவறானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நான் பணியாற்றியபோது டெல்லி துக்ளக் சாலையில் மயில்கள் இனப்பெருக்கம் செய்வதாக நான் மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அதேபோல பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோருவது தவறானது. அவற்றை தேசிய விலங்காக அறிவிப்பதன் மூலமாக மட்டுமே பசுவதையைத் தடை செய்வதைத் தடுக்க முடியாது. முறையான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே பசுவதையைத் தடை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.