ஒரு இந்திய நடன மங்கைதான் இந்த அத்தியாய ஸார்ட்அப் இளவரசியை அழகாக்க இருக்கிறார்.
அமெரிக்கா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களை நடனமாட வைத்தவர் என்று ’பாயல் கடாகியா’-வை (Payal Kadakia) பற்றி குறிப்பிடலாம். நடனமாட வைத்தவர் என்று சொல்வது மிகையானதாக தோன்றலாம். அப்படியெனில், நடனமாடுதல் உள்ளிட்ட அவர்கள் விரும்பிய உடற்பயிற்சிகளை விரும்பிய நேரத்தில் செய்ய வழிவகுத்தவர் என்று சொல்லலாம். இதை தான் அவர் தனது கிளாஸ்பாஸ் (ClassPass) இணைய நிறுவனம் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார்.
கிளாஸ்பாஸ், இணைய யுகத்து சேவைகளில் ஒன்றாக அமைகிறது. அதன் பின்னே இருப்பது எளிமையான கருத்தாக்கம்தான். ஆனால் நடைமுறையில் அது செயல்படும் விதமும், பயனாளிக்கு அளிக்கும் வாய்ப்பும் அற்புதமாக அமைகிறது. உடல்தகுதியில் ஆர்வம் கொண்டவர்கள் உடற்பயிற்சி கூடங்களை எல்லாம் ஒரே இடத்தில் அணுக, தங்களுக்குத் தேவையான வசதியை தேர்வு செயது கொள்ள கிளாஸ்பாஸ் சேவை வழி செய்கிறது. ஒவ்வொரு உடற்பயிற்சி கூடத்திற்கும் தனியே கட்டணம் செலுத்தாமல், ஒற்றை உறுப்பினர் கட்டணம் வாயிலாக எண்ணற்ற வாய்ப்புகளில் இருந்து தேர்வு செய்யும் வாய்ப்பையும், வழங்குகிறது.
இந்தியாவில் இருந்து..
கிளாஸ்பாஸ் இணைய சேவை எப்படி செயல்படுகிறது என்பதை இன்னும் விரிவாக பார்ப்பதற்கு முன், பாயல் ககாடியா எனும் நடன மங்கைக்கு அந்த எண்ணம் வந்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் இந்த சேவையின் தேவையையும், அருமையையும் இன்னும் நன்றாக புரிந்து கொள்ளலாம். அதற்கு முன் பாயல் கடாகியா பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாயல் கடாகியா, இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். வாய்ப்பு தேடி அமெரிக்கா செல்லும் நம்மவர்கள் அங்கு நிலைப்பெறுவதற்கு முன் பலவித கலாசார சிக்கல்களை எதிர்கொள்ளலாம். ககாடியாவும் அத்தகைய கலாச்சார சிக்கலை எதிர்கொண்டார். நியூஜெர்சி நகரில் பிறந்து வளர்ந்தவர், சுற்றியுள்ளவர்கள் வேறுபட்டிருப்பதை உணர்ந்திருக்கிறார். தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை அவர் மறந்தாலும், சின்ன சின்ன விஷயங்களில் யாராவது தெரிந்தோ, தெரியாமலோ நினைவூட்டுக்கொண்டிருந்தனர்.
இந்திய நடனம் இந்த நிலையில் தான் இந்திய நடனம் அறிமுகம் செய்யப்பட்டது. அவருக்கு மிகவும் ஆசுவாசமாக அமைந்தது. இந்திய தன்மை, தனக்கான பாரம்பரியம் ஆகியவற்றின் அம்சமாக நடனம் அவருக்கு அமைந்தது. நடனம் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, வலிமையாகவும் செய்தது. ஆனால், நியூஜெர்சி நகரில் இந்திய நடனம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்ததை தற்செயல் என்று தான் சொல்ல வேண்டும். டென்னிஸ் அல்லது பாலே நடனம் போன்றவற்றுக்கான பயிற்சி வகுப்புகளை எளிதாக கண்டறிவது போல இந்திய நடனத்திற்கான வகுப்புகளை கண்டறிவது சாத்தியமாகவில்லை. ஏனெனில் எங்கு, யார் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர் என்பதை அறிய வழியில்லை.
ஆனால், இந்திய குடும்பங்கள் எப்படியோ தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு விடுகின்றனர். இப்படி தான் பாயலின் அம்மாவும், பல இந்திய குடும்பத்தினரை அறிந்திருந்தார். அவர்களில் ஒருவரான உஷா பட்டேல் இந்திய நடன வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார். அந்த வகுப்பில் சிறு வயது பாயலும் சேர்ந்தார்.
இந்திய நடனமும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் பாயலுக்கு பிடித்திருந்தது. கதைச்சொல்லும் கலையுடன் அது பின்னி பிணைந்திருந்ததும் அவரை கவர்ந்தது. நடனம் அற்புதமாக இருந்தாலும், பயிற்சி வகுப்புகள் வேறு சரியான இடம் கிடைக்காததால், வீட்டின் கீழ் தளத்தில் நடைபெற்றன. எல்லாமே தற்காலிக அமைப்பாக இருந்தது. இதன் காரணமாகவே இந்த பயிற்சி வகுப்புகள் வாய் மொழி பரிந்துரைகள் தவிர பிற வழிகளில் கண்டறிய கடினமாக இருந்தன. பயிற்சி தேடல் பொருத்தமான பயிற்சி வகுப்புகளை கண்டறிவது என்பது பெரும்பாலும் தற்செயல் நிகழ்வாகவே அமைந்தன. இந்த அம்சம் தான், பின்னாளில் கிளாஸ்பாஸ் உருவாக்கத்தில் முக்கிய அங்கமாக அமைந்தது என்றாலும், பாயல் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. தொழில்முனைவு பயணம் என்பது கிளைப்பாதையாக அவரது வாழ்க்கையில் உண்டானது.
பாயலுக்கு நடனம் மகிழ்ச்சியும், உற்சாகமும் அளித்த நிலையில், கல்வியிலும் அவர் சுடர் விட்டுக்கொண்டிருந்தார். பள்ளியில் அறிவியல், கணிதம் பாடங்களில் சிறந்து விளங்கியவர், இயற்பியல் பரிசு வென்ற முதல் மாணவியாகவும் திகழ்ந்தார். பள்ளி படிப்பை முடித்ததும் புகழ் பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் உயர் கல்வி பயின்றார். கடின உழைப்பு மூலம் வெற்றிகளையும் வாய்ப்புகளையும் தேடிக்கொண்டார்.
கல்லூரி முடித்ததும் பாயலுக்கு பைன் & கம்பெனி எனும் ஆலோசனை நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இங்கு அவர் தனது திறமையால் பளிச்சிட்டார். குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களை பெறும் முயற்சியில் அழையா விருந்தாளியாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதில் ராணி என பாராட்டப்பட்டார். நடன ஆறுதல் அதே நேரத்தில் நடன ஆர்வத்தையும், பழக்கத்தையும் தக்க வைத்துக்கொண்டார். மற்றவர்கள் திணித்த வாழ்க்கையில் இருந்து நடனம் அவருக்கு ஆசுவாசம் அளித்தது. கிடைத்த ஓய்வு நேரத்தை எல்லாம் நடனமாட பயன்படுத்தி தன்னை ஊக்கப்படுத்திக்கொண்டார். பணியில் இல்லை என்றால் அவர் நடன மேடையில் இருந்தார்.
இதனிடையே 2008 ல் அவர் சா டான்ஸ் கம்பெனி எனும் நடன நிறுவனத்தையும் துவக்கினார். இந்திய நடன ஆர்வலர்களுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக இந்த நிறுவனம் அமைந்தது. இதை பகுதி நேர பணியாக விரும்பி மேற்கொண்டார் என்றாலும், அவர் இரண்டு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. ஒரு பக்கம் வர்த்தக வாழ்க்கையில் இலக்குகளின் பின்னே ஓடிக்கொண்டிருந்தார். அதிலிருந்து ஆசுவாசம் பெற நடனத்தை நாடினார்.
இரண்டு வேறு வேறு நபர்கள் போல பாயல் உணர்ந்தார். இந்த நேரத்தில்தான், வார்னர் மியூசில் குருப் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இந்த மாற்றம் வெறும் உயர் வாய்ப்பாக மட்டும் அமையவில்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. முந்தைய வேலையில் அவர் கடைசி நேர பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் அவரது நேரம் அவர் கையில் இருக்கவில்லை. ஆனால் புதிய நிறுவனத்தில் வேலை நேரம் என்பது வரையறுக்கப்பட்டதாக இருந்தது.
புதிய வேலை, புதிய பாதை
புதிய வேலை அளித்த சூழல் காரணமாக அவரால் முதல் முறையாக வர்த்தக வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமான இலக்குகளை வகுத்துக்கொள்ள முடிந்தது. அடுத்து சில ஆண்டுகள், நிறுவன பணியை திறம்பட செய்த நிலையில் நடன நிறுவனத்திலும் கூடுதல் கவனம் செலுத்தினார். நியூயார்க் நகரில் அவரது நடன நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த காலத்தில் அவர் நிறைய கற்றுக்கொண்டார். இந்த பின்னணியில் தான், நேரத்தையும், பணி வாழ்க்கையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் எப்படி இருக்கும் என அவருக்கு தோன்றத்துவங்கியது. இதனிடையே தான் 2010 ல் அவருக்கு அவருக்குள் அந்த மின்னல் எண்ணம் உண்டானது.
பாயல் எப்போதும் தனது பையில் பாலே நடன ஷூக்களை வைத்திருப்பது வழக்கம். இந்திய நடனத்துடன், பாலே, ஜாஸ் போன்ற நடன அசைவுகளை இணைந்து மேற்கொள்வது அவரது வழக்கம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடன பயிற்சி மேற்கொள்வார். அன்றைய தினம் மாலை, அவர் அருகாமையில் எங்கேனும் பாலே வகுப்புகள் நடக்கின்றனவா என அறிய விரும்பினார். பாலே ஸ்டூடியோ சென்று நடனமாடும் விருப்பத்துடன், இணையத்தில் தேடினார். அவர் விருப்பத்திற்கு ஏற்ற இடம் எதுவும் கிடைக்கவில்லை. நிறைய தகவல்களும், இணையதளங்களும் தேடல் முடிவுகளில் தென்பட்டாலும், சரியான தகவல் கிடைக்கவில்லை. இந்த தேடலில் இரண்டு மணி நேரம் செலவானபோது தான் கையில் இருந்த நேரம் வீணானதை உணர்ந்து வருந்தினார்.
ஆனால் பாயலின் வருத்தம் தனிப்பட்டதாக மட்டும் அமையவில்லை. தன்னை போன்றவர்களை நினைத்து வருந்தினார். எண்ணற்ற இடங்களில் நடன மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றாலும் அருகாமையில் பொருத்தமான மையங்களை கண்டறிய முடியாமல் இருப்பதாக உணர்ந்தார்.
கிளாஸ்பாஸ் நடனம் வகுப்புகளை கண்டறிய முடியாததை ஒரு பிரச்சனையாக உணர்ந்தவர் மனதில், மின்னல்கீற்றாக அதற்கான தீர்வும் உண்டானது. இப்படி வகுப்புகளை தேடி அலைவதைவிட, ஓரிடத்தில் இருந்து தேவையான வகுப்புகளை கண்டறியும் வாய்ப்பிருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்தார். வகுப்புகளை தெரிந்து கொள்வதோடு மட்டும் அல்லாமல், ஒரே உறுப்பினர் கட்டணத்தில் விரும்பிய வகுப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார்.
எல்லோரும் தங்கள் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் தொடர்பு கொண்டிருக்க உதவி செய்ய வேண்டும் என்றும் நினைத்தார். இதற்கான இணையதளத்தை அமைக்க விரும்பினார். இப்படி தான், உடற்பயிற்சி உள்ளிட்ட வகுப்புகளுக்கான சேவையாக கிளாஸ்பாஸ் பிறந்தது. கிளாஸ்பாஸ் இணையத்தின் ஆற்றலை அழகாக பயன்படுத்திக்கொண்டது. நிஜ வாழ்க்கையில் பலருக்கும் உடற்பயிற்சியில் ஆர்வம் இருந்தாலும் அதை நிறைவேற்றுவதில் சிக்கல் இருந்தது. பலரும் உடற்பயிற்சி கூடங்களில் சேர்ந்தாலும் அதை தொடாமல் விடுவது வழக்கமாக இருந்தது. மேலும் அதன் கட்டணமும் அதிகமாக இருந்தது. இன்னொரு பக்கம் விரும்பிய ஆர்வங்களை பின் தொடர்வதும் சிக்கலாக இருந்தது.
எளிய தீர்வு
இவற்றுக்கு எல்லாம் கிளாஸ்பாஸ் எளிய தீர்வாக அமைந்தது. இந்த தளம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நடன ஸ்டூடியோக்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றின் விவரங்களை தொகுத்தளித்தது. பயனாளிகள் இந்த தளத்தில் உறுப்பினராக இணைந்தால், அதன் மூலம் தங்களுக்கு விருப்பமான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெற முடிந்தது. ஒற்றை உறுப்பினர் கட்டணத்தில் விரும்பிய பயிற்சி வகுப்புகளை நாடலாம் என்பது மிகவும் பயனுள்ள எண்ணமாக அமைந்தது. இந்த புதுமையான எண்ணத்தை அடிப்படையாக கொண்ட கிளாஸ்பாஸ் வெற்றி பெற்றாலும், நிறுவனத்தை துவக்குவது பாயலுக்கு சவாலாக இருந்தது. ஏனெனில் முதலில் அவர் பார்த்துக்கொண்டிருந்த நல்ல வேலையை விடுவது பற்றி முடிவெடுக்க வேண்டியிருந்தது. இதற்கு பெற்றோரின் சம்மதம் பெற வேண்டியிருந்தது.
வேலையை விட்டு விட்டு தனது ஆர்வத்தை பின் தொடர்வது பெற்றோர்களிடம் பேசிய போது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அவரது அம்மா, இதற்கு ஆதரவு அளித்தார். அவர் அப்பாவும் துணை நின்றார். பெற்றோர்களின் ஆதரவுடன் கையில் ஓரளவு சேமிப்பை வைத்துக்கொண்டு, சஞ்சீவ் சங்கவி என்பவருடன் இணைந்து நிறுவனத்தை துவக்கினார். எனினும் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவது போன்றவை சவாலாக இருந்தன. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்முனைவு உலகில் பெண்ணாக அவர் பல இன்னல்களை எதிர்கொண்டார். இதற்கு பதிலடியாக முக்கிய கூட்டங்கள் சிலவற்றுக்கு லெக்கின்ஸ் அணிந்து செல்லும் வழக்கம் கொண்டிருந்தார்.
விரிவாக்கம்
கிளாஸ்பாஸ் சேவை நல்ல வரவேற்பை பெற்று மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் பெற்றது. பின்னர் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளிலும் அறிமுகமானது. வளர்ச்சி மற்றும் சவாலுக்கு ஏற்ப நிறுவனம் தனது வர்த்தக மாதிரி மற்றும் உறுப்பினர் கட்டண முறையில் மாற்றங்களை செய்தது. ஒரு கட்டத்தில் நிறுவனம், பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட யூனிகார்ன் நிறுவன அந்தஸ்து பெற்றது.
இதனிடையே, கோவிட் -19 பெருந்தொற்று சூழல் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைந்தது. பொதுமுடக்கம் அமல் செய்யப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றப்பட்ட சூழலில், பயிற்சி வகுப்புகளும், உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன. இது கிளாஸ்பாஸ் நிறுவனத்திற்கு சோதனையாக அமைந்தது. அதே நேரத்தில் பயிற்சி மையங்களும் பாதிக்கப்பட்டன. உண்மையில் கிளாஸ்பாஸ் சேவையின் வெற்றி காரணமாக, பயிற்சி மையங்களும் புதிய வாடிக்கையாளர்களை பெற்று வந்தன.
கோவிட் 19 சூழல் இருதப்பினருக்கும் சோதனையாக அமைந்தது. எனினும், பாயல் இந்த நிலையை சிறப்பாக சமாளித்தார். பயனாளிகள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் பயிற்சி பெற வழி செய்ததோடு, பயனாளிகள் பயிற்சி மையங்களுக்கு நிதி அளிக்கவும் வழி செய்தார். பல புதுமையான திட்டங்கள் மூலம் பொதுமுடக்க சூழலிலும் நிலைமையை சமாளித்தார்.
2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிளாஸ்பாஸ் நிறுவனம் மைண்ட்பாடி எனும் பெரிய நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நிறுவன தினசரி பொறுப்பு தொழில்முறை சி.இ.ஓ ஒருவரிடம் ஒப்படைத்திருந்த பாயல், இந்த கையகப்படுத்தல் மூலம் புதிய பாதையில் தனது தொழில்முனைவு பயணத்தை தொடரும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.