‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்

‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்
‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்
Published on

தமிழ் நாட்டிற்கு இது மழைக்காலம். ஆனால் தமிழ் சினிமாவிற்கு இது ‘பார்ட் 2’ காலம்.  கதை பஞ்சத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழ் சினிமா தனது ரசிகர்களை தக்க வைக்க கண்டுபிடித்திருக்கும் புதிய சூத்திரம்தான் இந்த ‘பார்ட் 2’ ஐடியா. 2010ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. தமிழ் சினிமாவில் மட்டும் அள்ள இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட ‘ரோபோட் சினிமா’ என்று இதனை சொல்லலாம். அந்தளவுக்கு மொழிகளை கடந்து ரஜினியை தூக்கிக் கொண்டு போனது இந்தப் படத்தின் வியாபாரம். ஏறக்குறையை 196 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தத் திரைப்படம் 293 கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்தது. 

அதுவரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த் இந்திய நட்சத்திரமாக உருவானார். அதற்கும் ஒரு படி மேலே சென்று அவரை பிராண்ட் ஆக்கியது இந்த ‘எந்திரன்’. இந்தப் படத்திற்கு பெரும் மூலையாக இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. இவரும் ஷங்கரும் கலந்து உருவான கூட்டணி பெரும் வரவேற்பை எட்டும் என்பது எழுதி வைக்காத சட்டம்.

ஆகவேதான் அந்தப் படம் முதலில் ‘ரோபோ’ என்ற தலைப்பில் அறிமுகமாக இறுதியில் தமிழ் அடையாள பிரச்னை எழுந்தபோது அதனை ‘எந்திரன்’ ஆக முன்மொழிந்தார் சுஜாதா. அதன் பிறகும் அந்தப் படம் தன் திரைக்கதையால் அறிவியல் புனைவால் சூடுப் பிடித்தது. இப்படத்தில் இடம் பெற்ற ரஜினியின் கதாப்பாத்திரமான வசீகரன், சிட்டி ஆகிய இரு வேடங்களும் தனித்த புகழை சம்பாதித்தன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வசீகரித்தவன் சிட்டிதான். ஆகவேதான் இப்போது சிட்டியை வைத்து ‘பார்ட்2’ படத்தினை ‘2.0’ஆக 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறார் ஷங்கர். 

பல வருடங்களாகவே தன் படங்கள் குறித்து மீடியாவின் புரமோக்களில் தலை வைப்பதை தவிர்த்து வந்த ரஜினி, இந்த ‘2.0’ படத்திற்காக ஸ்பெஷல் பேட்டி கொடுக்க முன் வந்திருக்கிறார். அரசியல் ரீதியாக மட்டுமே தனது கருத்தை சமீப காலமாக முன் வைத்து வரும் ரஜினி, மீண்டும் தன் சினிமாவிற்காக புரமோஷனில் இறங்க வைத்துள்ளது ‘2.0’. ஆக, போட்ட பட்ஜெட்டை திரும்ப எடுக்க வேண்டும் என்ற தேவையை தாண்டி ரஜினி, தன் பிராண்ட் வேல்யூவை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ள படமாக அவர் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது ‘2.0’.

ரஜினிக்கு ‘எந்திரன்’ என்றால் கமலுக்கு ஒரு ‘இந்தியன்’. இந்தப் படம் கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்த திரைப்படம். ஊழல், லஞ்சம் என இரண்டு தீய சக்திகளின் கைகளில் சிக்கி தவித்த இந்திய மக்களுக்கு ஒரு புதிய தெம்பை வழங்கிய திரைப்படம் இது. ஆகவேதான் லவ், ரொமான்ஸ் என்ற கட்டங்களை தாண்டி இந்தக் கதை மக்களை தட்டி எழுப்பியது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தக் கதையை மீண்டும் இப்போது தூசி தட்டி புதுப்பித்து எடுக்க முன் வந்திருக்கிறார் ஷங்கர். அதுவும் ‘எந்திரன்’ படத்தின் பார்ட் 2 முடித்த அதே சூட்டோடு என்பது சிறப்பான விஷயம். 

ஆக, அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் ‘பார்ட்2’ படங்களை இயக்க முன் வந்துள்ள முதல் இயக்குநர் என ஷங்கரை கூறலாம். பொதுவாக இந்த ஐடியாவை ஆரம்பித்தவர் ஷங்கர் இல்லை. சூர்யாவின் ‘சிங்கம்’ இதுவரை மூன்று பாகங்களை எட்டி இருக்கிறது. பல வருஷங்களுக்கு முன்னால் வந்த ‘சாமி’யை கூட இப்போது ஹரி, ‘சாமி ஸ்கொயர்’ என எடுத்திருக்கிறார். இவருக்கு முன்னால் ‘காஞ்சனா’ மூலம் பல பாகங்கள் வரை கலக்கியவர் ராகவலாரன்ஸ். அவருக்கு முன் ‘நான் அவனில்லை’ கூட வந்தது. சுசி கணேசன், ‘திருட்டு பயலே 2’ எடுத்திருக்கிறார். அடுத்து லிங்குசாமி தந்த வெற்றிபடமான ‘சண்டக்கோழி’யின் இரண்டாம் பாகத்தை கூட எடுத்துவிட்டார். ஆனால் இதில் பல படங்கள் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் போய் முடங்கிவிட்டது என்பதும் உண்மை. 

இதே வேகத்தில் தனுஷ் தனது ‘மாரி2’ வை களத்தில் இறக்க இருக்கிறார். முன்னதாக அவரது ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகியிருந்தது. இவரது ‘வடசென்னை’ கூட மேலும் சில பாகங்களாக வெளியாகும் என அதன் இயக்குநர் வெற்றிமாறன் வாக்கு கொடுத்திருக்கிறார். இதற்கான காட்சிகள் அவர்கள் கையில் ஏற்கனவே எக்கச்சக்கமாக உள்ளன. ஆனால் முதல் பாகத்திற்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளானதால், அதே காட்சிகளை மட்டுமே வைத்து ‘பார்ட் 2’வை வெளியிட்டுவிட முடியாது. மீண்டும் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய வேண்டும். இவரை போலவே ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ வெற்றியடைந்தால் மேலும் சில பாகங்களை இயக்க தீர்மானித்திருப்பதாக இயக்குநர் கெளதம் மேனன் கூறி வருகிறார். அவர், ‘விண்னை தாண்டி வருவாயா’வை கூட ‘பார்ட் 2’வுக்கு முயற்சிக்கலாம் என்ற பேச்சு அடிப்படுகிறது. 

இந்த விஷயத்தில் கமல் கொஞ்சம் முன்னோடி. ‘விஸ்வரூபம்’ எடுத்தவர், ‘விஸ்வரூபம் 2’கூட சாமர்த்தியமாக வெளியிட்டுவிட்டார். அவரது ‘தசாவதாரம்’ கதாப்பத்திரமான பல்ராம் நாயுடுவை வைத்து ‘சபாஷ் நாயுடு’வை இயக்கி வருவதையும் இந்த ‘பார்ட் 2’ பார்மூலாவுக்குள் வைத்து நாம் கவனிக்கலாம். இதே வரிசையில் அஜித்தின் ‘பில்லா’ மற்றும் ‘பில்லா2’, ‘தமிழ்படம் 2’, ‘கோலிசோடா 2’  போன்றவற்றையும் சேர்க்கலாம். 

இந்தப் பட்டியலை தாண்டி பல பேய் படங்கள் ‘பார்ட் 2’ படங்களுக்கான வாசலை திறந்துவிட்டுள்ளன. அதில், சுந்தர் சியின் ‘அரண்மனை’, அடுத்து ‘அரண்மனை 2’ ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங் 2’ கூட வந்துள்ளது. ஆக,‘பார்ட்2’ ஐடியா என்பது பணம் காய்க்க கூடிய நல்ல யோசனைதான். ஆனால் முதல் பாகத்தினை முந்திப் போக அடுத்த பாகத்தின் கதை வலுவானதாக இருக்க வேண்டும். அதற்கு சரியான உதாரணம் ‘பாகுபலி’.

இதன் முதல் எந்த அளவுக்கு கதை திருப்தியை தந்ததோ அதில் இரண்டு மடங்கினை ‘பாகுபலி2’ தந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக பல ‘பார்ட்2’ படங்கள் தலைப்பை மட்டுமே தக்க வைத்திருந்ததே தரவி, தரத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதற்கு மிகச் சரியான உதாரணமாக பல படங்களை சொல்லலாம். ஆனால் ரசிகர்கள் அதிகம் உதாரணம் சொல்வது ‘வேலையில்லா பட்டதாரி2’வைதான்.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com