பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மற்றும் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதங்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை தொடர்ந்து மூன்றாவது வாரமாக முடக்கியுள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடந்த சில நாள்களாக ஒரு புதிய ஐடியாவை கையிலெடுத்துள்ளனர்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளிக்கிடையே அரசு மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கும்போது, மசோதாக்களுக்கு எதிராக தீர்மானங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிகின்றனர். இந்த தீர்மானங்கள் குறித்து பேச அழைக்கப்படும்போது, பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மற்றும் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு, கண்டனம் தெரிவிக்கின்றனர்.
மசோதா தொடர்பாக மட்டுமே பேச வேண்டும் என அவைத் தலைவர் குறிப்பிட்டு தடுப்பதற்குள், குறுகிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய கருத்துக்களை எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் வேகவேகமாக பதிவிடுகின்றனர். கடந்த சில நாள்களில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வழிமுறையைக் கையாண்டுள்ளனர்.
திமுகவின் திருச்சி சிவா, என்ஆர் இளங்கோ மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முழக்கங்கள் இடையே பெகாசஸ் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தங்களுடைய எதிர்ப்பை மாநிலங்களவையில் இந்த முறையில் தெரிவித்துள்ளனர். இதேபோல காங்கிரஸ் கட்சியின் அதீர் ரஞ்சன் சௌதுரி மற்றும் மணிஷ் திவாரி உள்ளிட்டோர் மக்களவையில் தங்கள் எதிர்ப்பை எதிரொலித்துள்ளனர்.
பொதுவாக முழக்கங்கள் தொடரும் நேரத்தில், மசோதா குறித்த விவாதங்களில் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பதில்லை. ஆகவே, அவைத்தலைவர் பொறுப்பில் உள்ளவர்கள் வாய்ப்பளிக்கும்போது அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற காட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கின்றனர். அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மசோதா மீது பேச அழைக்கப்படுகின்றனர். இதுவே எதிர்க்கட்சிகளுக்கு பெகாசஸ், வேளாண் சட்டங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற விவகாரங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைகிறது.
பெரும்பாலும் இத்தகைய கருத்துக்கள் அவைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றன. சில நேரங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதால், அவைத்தலைவர் பொறுப்பில் உள்ளவர்கள் சுதாரிக்க சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.
அரசு தரப்பும் இந்தப் புதிய தந்திரத்தை அடையாளம் கண்டுகொண்டு, அவ்வப்போது சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மசோதாவைப் பற்றி பேசவில்லை என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதைத் தவிர எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய பதாகைகளை மக்களவை மற்றும் மாநிலங்களவை கேமராக்களுக்கு முன்பு கொண்டுவர முயற்சிக்கும்போது, நேரலை வேறு கேமராக்களுக்கு மாற்றப்படுகிறது. ஒருகட்டத்தில் மாநிலங்களவை நேரடி ஒளிபரப்பு சிறிது நேரத்துக்கு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. புதன்கிழமை மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது, தொடர் முழக்கங்கள் வழக்கம்போல அவையை முடங்கின. அந்த சமயத்திலேயே எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நீடித்த நிலையில், மாநிலங்களவை நேரடி ஒளிபரப்பு கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
இப்படி எதிர்கட்சிகளும், ஆளும் தரப்பும் தங்களுடைய நிலைப்பாடு குறித்த தகவல்களை முன்னிலை பெற வேண்டும் என தொடர் முயற்சிகள் செய்கின்றன. நாடாளுமன்றத்தில் நடந்துவரும் எங்களுடைய தொடர் போராட்டத்தை மறைக்க முயற்சி நடைபெறுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும் அகாலிதளம் தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வெளிப்படையாக புகார் அளித்துள்ளார். இதனாலேயே பல தருணங்களில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
விவசாயிகள் பிரச்னை குறித்து பேசியபோது தனது மைக் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் தீபிந்தர் ஹூடா புகார் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர்ந்து மூன்றாவது வாரமாக முடங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை காலை மாநிலங்களவை கூடியதும், எதிர்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக முதலில் 12 மணி வரையும், பின்பு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையிலும் ஒத்திவைப்பு நடந்து, பின்னர் அமளிக்கிடையே இரண்டு மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவாதம் இன்றி மசோதாக்களுக்கு இப்படி ஒப்புதல் அளிப்பது ஜனநாயக விரோதமானது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டவுடன் எதிர்க் கட்சிகளின் முக்கியத் தலைவர்களில் பலரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்றனர்.
வெள்ளிக்கிழமை காலையிலேயே எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி தங்களுடைய போராட்டத்தை தீவிரமாக நடத்துவது என முடிவு செய்திருந்தனர். இதேபோன்ற ஒருங்கிணைப்பு கூட்டம் மீண்டும் நடைபெறும் என்றும், எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவை வழக்கங்களை தொடரும் எனவும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
- கணபதி சுப்ரமணியம்