இயக்குநர் அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன், திண்டுக்கல் ஐ.லியோனி, சிங்கம்புலி, ராமர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் பன்னிக்குட்டி. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த சினிமா இன்று திரைக்கு வந்திருக்கிறது.
ஒரு சின்ன கிராமத்தில் சின்னச் சின்ன வாழ்க்கைச் சிக்கல்களுடன் வாழ்கிறார் கருணாகரன். அவரது பிரச்னைகளைத் தீர்க்க சாமியாராக நடித்திருக்கும் லியோனி ஒரு யோசனை சொல்கிறார். அந்த யோசனை என்ன அதன் விளைவுகள் என்ன என்பதே பன்னிக்குட்டியின் ஜாலியான திரைக்கதை.
ஐடியாவாக, பன்னிக்குட்டி புதுசு தான். ஆனால் ஐடியா மட்டும் நன்றாக இருந்தால் போதாதே. அதற்கான திரைக்கதையும், திரைமொழியும், காட்சியாக்கமும் அடர்த்தியாக இருக்க வேண்டும். இயக்குநர் அனுசரண் அங்குதான் மெல்ல பிடியை இழந்திருக்கிறார்.
பன்னிக்குட்டி, சாலையில் வரும் வாகனத்தில் மோதினால் வண்டியை விற்க வேண்டும் என இன்னமும் பலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையினை மையமாகக் கொண்டு சினிமா இயக்கப்பட்டிருந்தாலும் ஒரு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் விதமாக க்ளைமேக்ஸ் இருக்கக் கூடாது. படத்தில் வரும் காட்சிகளின் மூட நம்பிக்கை குறித்த விசயங்கள் இருப்பது வேறு படத்தின் மொத்த கதையே மூட நம்பிக்கையை தாங்கி நிற்பது வேறு இல்லையா...?
கருணாகரன், யோகிபாபு, லியோனி, சிங்கம் புலி, ராமர், தங்கதுரை என இத்தனை பெரிய காமடி காம்போவை வைத்துக் கொண்டும் நகைச்சுவை எதிர்பாத்த அளவு இல்லை என்பதே வருத்தம். இக்கதையின் திரைக்கதை குறித்து இவ்வளவு பேச காரணம், அவ்வளவு வாய்ப்பு இக்கதையில் உள்ளது. கதையின் ஆழத்தை இயக்குநரே உணரவில்லையோ எனத் தோன்றுகிறது. யோகிபாபுவின் கல்யாணத்தில் தொடர்புடைய பன்னி செண்டிமெண்ட், கருணாகரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகள் என இந்த இரண்டு ஏரியாவை மட்டுமே டீட்டயில்டாக ஸ்கிரீன் ப்ளே செய்திருந்தாலே படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
அதிகமான ரிப்பீட்டட் காட்கள் சோர்வைத் தருவதோடு படக்குழுவின் கற்பனை வறட்சியையும் காட்டுகிறது. படத்தின் முக்கிய கருவாக இருப்பதே ஒரு குட்டிப் பன்றி தான். உண்மையில் க்யூட்டான பன்றியாக அது இருக்கிறது. ஆனால் அந்த பன்றியை அழகாக காட்ட ஒளிப்பதிவாளர் தரப்பில் எந்த மெனெக்கெடலும் இல்லை.
முழுமையாக சுமார் என சொல்ல முடியாதென்றாலும் லியோனி தோன்றும் காட்சிகளும், சிங்கம் புலி தோன்றும் காட்சிகளும் படம் முழுக்க கலகலப்பை தக்க வைக்கின்றன. படத்தின் காதல் காட்சிகள் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன.
எதிர்ப்பார்த்த நகைச்சுவை அடர்த்தி படத்தின் குறைவுதான் என்றாலும் படத்தில் எங்குமே முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ, வசனமோ இல்லை. பெரிதாக எதையும் எதிர்பார்க்காமல், குடும்பத்துடன் சென்று பார்க்க பன்னிக்குட்டி ஒரு வீக் எண்ட் சினிமா.