ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், மறைந்த ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையிலான ஓர் எதிர்ப்புப் படை, பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான்களை எதிர்க்க குரல் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை ரட்சிக்கப்போவதாக கூறியுள்ள 'வடக்கு கூட்டணி' அல்லது ஐக்கிய இஸ்லாமிய முன்னணி என்னும் இந்த எதிர்ப்புப் படை பற்றியும், அவர்களின் கோட்டையாக விளங்கும் 'பஞ்ச்ஷிர்' மாகாணம் பற்றியும் சற்றே விரிவாக பார்ப்போம்.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், காபூலின் வடகிழக்கில் 100 கி.மீ தொலைவில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் இன்னும் அவர்கள் வசம் செல்லாமல் இருக்கிறது. பெர்சிய மொழியில் ஐந்து சிங்கங்கள் என்ற அர்த்தம் கொண்ட 'பஞ்ச்ஷிர்' மாகாணம், ஆப்கானிய வரலாற்றில் நடந்த பல்வேறு படையெடுப்புகளிலும் எந்த ஒரு வெளிநாட்டாலும், அதேநேரம் தலிபான்கள் போன்ற இயக்கத்தினராலும் இதுவரை கைப்பற்றப்படவில்லை என்பது வரலாறாக இருந்து வருகிறது. 1970 மற்றும் 1980-களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புகளின் போது கூட பஞ்ச்ஷிர் கைப்பற்றப்படவில்லை.
ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் ஒன்றான `பஞ்ச்ஷிர்', ஹிந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து சகோதரர்கள் 10-ஆம் நூற்றாண்டில், வெள்ள நீரைக் கட்டுப்படுத்த மன்னர் கஜினி சுல்தான் மஹ்மூதிற்காக ஓர் அணையை கட்டினார்கள் என்பதால் ஐந்து சிங்கங்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. 512 கிராமங்களுடன் ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள இதில், சமீபத்திய நிலவரப்படி, சுமார் 1,73,000 மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் தாஜிக்கள் எனப்படும் தாஜிக் இனத்தவர்கள் இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அஷ்ரப் கனி அமைச்சரவையில் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே இந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்தான். சில நாட்கள் முன் ``சட்டப்படி நானே அடுத்த அதிபராக தகுதி பெற்றவன். அதிபர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ ஆப்கன் சட்டப்படி துணை அதிபர் பதவிக்கு வரவேண்டும்.
நான் இப்போது ஆப்கானிஸ்தானில் தான் உள்ளதால் பொறுப்பு அதிபராக நான் இருக்கிறேன். எனக்கான ஆதரவை வழங்க வேண்டும்'' என தலிபான்கள் ஆட்சி அமைக்க எதிர்ப்பு குரல் கொடுத்தார் அம்ருல்லா சலே.
தற்போது பஞ்ச்ஷிர் பகுதியில் இருக்கும் அம்ருல்லா, தலிபான்களுக்கு எதிராக ஓர் எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவார் என்று நம்பப்படுகிறது. அதற்கேற்ப அவரின் செயல்பாடுகளும் அமைய தொடங்கியுள்ளன.
அதேநேரம், மறைந்த ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையிலான ஓர் எதிர்ப்புப் படை பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான்களை எதிர்க்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த அஹ்மத் ஷா மசூத், `தாஜிக்' இனத் தலைவராக அறியப்பட்டவர். 'வடக்கு கூட்டணி' அல்லது ஐக்கிய இஸ்லாமிய முன்னணி என அழைக்கப்பட்ட இவரது தலைமையிலான கிளர்ச்சி படை 1992-ல் தலிபான்களுக்கு முன்னதாக காபூலை கைப்பற்றியிருந்தது. இதன்பின் 1992 - 1996 வரை தலிபான்களை எதிர்த்து சண்டையிட்டு தோல்வியுற்று காபூலை பறிகொடுத்தது.
`வடக்கு கூட்டணி' தலிபான்களை எதிர்ப்பதற்காக வந்த ராணுவ முன்னணியாகும். மேலும் ஈரான், இந்தியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதரவைக் கொண்டிருந்தது. இதே `வடக்கு கூட்டணி' 1996 மற்றும் 2001-க்கு இடையில் தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றுவதை தடுக்கும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.
ஆனால், தலிபான்கள் ஆதிக்கம் பெற்றதை அடுத்து, வடக்கு கூட்டணி படைகள் தலிபான்களின் கைகளில் சரணடைய வேண்டியிருந்தது. 2001-ல் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு அல்கொய்தா மற்றும் தலிபான்களால் சதித்திட்டத்தில் அஹ்மத் ஷா மசூத் கொல்லப்பட்டார். என்றாலும் காபூலை விட்டுக்கொடுத்தாலும் இன்றுவரை பஞ்ச்ஷிர் மாகாணத்தை அரணாக காத்து வருகிறது 'வடக்கு கூட்டணி'. அஹ்மத் ஷா மசூத்-க்கு பின் அவரின் வழித்தோன்றல்களால் 'வடக்கு கூட்டணி' வழிநடத்தப்பட்டு வருகிறது. தற்போது 'வடக்கு கூட்டணி' வழிநடத்தி வரும் அஹ்மத் ஷா மசூத் மகன் அஹ்மத் மசூத் தலிபான்களை எதிர்க்க தயார் என்றுள்ளார்.
இதனால் பஞ்ச்ஷிர் மீண்டும் தலிபான் எதிர்ப்பு முன்னணியின் மையமாக மாறத் தொடங்கியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில், ``நான் இன்று பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கிலிருந்து எழுதுகிறேன். என் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தயாராக இருக்கிறேன், முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து தலிபான்களை மீண்டும் கைப்பற்றத் தயாராக இருக்கிறோம். வெடிமருந்துகள், ஆயுதங்களை இதற்காக என் தந்தையின் காலத்திலிருந்து நாங்கள் பொறுமையாகச் சேகரித்து வைத்துள்ளோம். ஏனென்றால் இந்த நாள் வரக்கூடும் என்று எங்களுக்குத் தெரியும். தலிபான்கள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை" என்று அஹ்மத் மசூத் தெரிவித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது.
தலிபான்களை எதிர்க்க வடக்கு கூட்டணியிடம் போதுமான பலம் இருக்குமா என்பதே இப்பொது இருக்கும் கேள்வி. ஏனென்றால், 1992 காலகட்டத்தில் இருந்தது போல் இல்லாமல் தலிபான்கள் தற்போது அதிநவீன ஆயுதங்களை கொண்டுள்ளனர். முன்பு போராளிகளாக இருந்த தலிபான்கள் இப்போது தொழில்முறை ராணுவ வீரர்களாக உருவெடுத்துள்ளனர். அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு கவசங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் தலிபான்களை ஒரு சக்திவாய்ந்த குழுவாக மாற்றி அமைத்துள்ளன. இதன்காரணமாக ஆப்கானிஸ்தான் அரசு சார்பு படைகளை சமீப நாட்களில் வேகமாக வீழ்த்தியது தலிபான் படை. எதிர்பார்த்ததை விட முன்னதாகவே காபூலையும் கைப்பற்றி காட்டியது.
தலிபான்களின் கைகளில் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள் அமெரிக்கப் படைகளால் விட்டுச்செல்லப்பட்டு ஆப்கான் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. ஆப்கன் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த மாகாணங்களை கைப்பற்றவும், அங்கிருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவையும் தலிபான்கள் வசம் வந்தது. ஆப்கானிஸ்தான் படைகளிலிருந்து தலிபான்கள் ஆயுதங்களை கைப்பற்றும் வீடியோக்கள் மற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இதனிடையே, தலிபான்களிடமிருந்து தப்பித்த ஆப்கானிஸ்தான் அரசுப் படை வீரர்கள், அஹ்மத் மசூத் அழைப்பின் பேரில், பஞ்ச்ஷிர்க்கு வரத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இதனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை பற்றிய பரபரப்பு தான் தற்போது செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன.
- தகவல் உறுதுணை: இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ்