மதுரையில் தேர்தல் திருவிழாவில் களைகட்டாத பிரியாணி விற்பனை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
தேர்தல் திருவிழா என்றாலே தமிழகம் முழுவதும் பரப்புரை களைகட்டும். 2021 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் துவங்கி சுயேட்சை வேட்பாளர்கள் வரை பிரச்சார பணிகளை மும்மரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் உணவகங்கள், கலைத் தொழில், தோரணம் அமைப்பது, மேடை அமைக்கும் பணிகள் என பல்வேறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேர்தலை நம்பியுள்ள பெரும்பாலான தொழில்களில் எதிர்பார்த்த அளவிற்கு பணி வாய்ப்பு கிடைக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
நாள் முழுவதும் பரப்புரையில் ஈடுபடும் தங்களது தொண்டர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுப்பது என்பது தமிழகத்தில் பாரம்பரியமாக இருந்து வந்தாலும் தற்பொழுது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக மதுரையில் உள்ள பெரும்பாலான பிரியாணி கடைகளில் விற்பனை என்பது முற்றிலும் குறைந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் பரப்புரையில் ஈடுபடுபவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வாங்கி கொடுக்கும் அரசியல் கட்சிகள், பரப்புரை துவக்க நாட்களில் துவங்கி வாக்கு எண்ணிக்கை நாள் வரை நாள்தோறும் 200 பிரியாணி முதல் ஆயிரம் பிரியாணி வரை ஆர்டர்கள் கொடுக்கும் நிலையில், இந்த தேர்தலுக்கு பிரியாணி ஆர்டர்கள் வரவில்லை என கூறும் கடை உரிமையாளர்கள் தேர்தல் நேரத்தில் கடைகளில் வந்து பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
கடந்த தேர்தலின்போது 50 படி வரை ஆர்டர்கள் வந்த நிலையில் பிரியாணி தயாரித்து வழங்கவே முடியாத அளவிற்கு கூட்டம் தொடர்ந்து வந்ததாகவும், அதுபோன்று இந்த தேர்தலிலும் ஆர்டர்கள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்ததாகவும், ஆனால் ஆர்டர்கள் வராததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் பிரியாணி கடை உரிமையாளர்கள்.
கடந்த முறை தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்னர் சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பிலிருந்து பரப்புரை களைகட்டியதாகவும், அதனால் அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்த நிலையில் இந்த வருடம் பரப்புரைக்கான நாட்கள் குறைவாகவே உள்ளதும் வியாபாரம் குறைய காரணமாக உள்ளதாகவும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பரப்புரைக் களம் பெரிய அளவிற்கு பிரம்மாண்டமானதாக இல்லாததும் பிரியாணி ஆர்டர்கள் வராமல் போனதற்கு காரணமாக இருக்கும் என கருதுவதாக கூறுகின்றனர் பிரியாணி கடை உரிமையாளர்கள். இரண்டு வாரங்களாக பரப்புரைகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும்கூட இன்னும் எஞ்சியுள்ள நாட்களிலாவது ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு உள்ளதாகவும் கூறுகின்றனர்.
- கணேஷ்குமார்