நிரம்பி வழியும் நீர்நிலைகள்... அலட்சியத்தால் உயிரிழப்புகள்... - ஒரு அலர்ட் பார்வை!

நிரம்பி வழியும் நீர்நிலைகள்... அலட்சியத்தால் உயிரிழப்புகள்... - ஒரு அலர்ட் பார்வை!
நிரம்பி வழியும் நீர்நிலைகள்... அலட்சியத்தால் உயிரிழப்புகள்... - ஒரு அலர்ட் பார்வை!
Published on

பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த தொடர்மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்தச் சூழலில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நீர்நிலை ஆபத்துகளில் சிக்காமலிருக்க செய்ய வேண்டியவை என்ன?

நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த தொடர்மழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. பல ஆண்டுகளாக தண்ணீரே தேங்காத ஏரிகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள், கண்மாய்கள்கூட இந்த ஆண்டு முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் வரும் காலங்களில் பாசன நீர், குடிநீர் பிரச்னைகள் தீரும் என்றாலும், இப்போது நீர்நிலைகளை மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.  

எதனால் ஏற்படுகிறது நீர்நிலை உயிரிழப்புகள்?

  • தற்சமயம் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள காரணத்தால், ஆறுகள், வாய்க்கால்களில் நீர் மிக வேகமாக செல்லும். இதனால் சிறிய கவனக்குறைவும் உயிரிழப்பை உருவாக்கும்.
  • மணல் கொள்ளை காரணமாக ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களால் புதிதாக பல இடங்களில் நீர்ச்சுழல்கள் உருவாகின்றன, அதனாலும் உயிரிழப்புகள் ஏற்படலாம்.
  • பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்காத குளங்கள், ஏரிகளில் குளிக்கும்போது எந்த இடத்தில் ஆழம் அதிகம் இருக்கும் எனத்தெரியாமல் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படலாம்.
  • குளங்கள், ஏரிகள், கண்மாய்களில் குடிமராமத்து அல்லது மணல் திருட்டு காரணமாக பள்ளங்கள் உருவாகியிருக்கலாம். இந்த இடங்களை பார்க்கும்போது சமமாக தெரியும். ஆனால், கால்வைத்தால் புதைகுழிபோல உயிர்க்குடிக்கும் எமனாக மாறும்.
  • நீர்நிலைகளில் பெரும்பாலும் உயிரிழப்பவர்கள் குழந்தைகள்தான், பெற்றோர்களுக்கு தெரியாமல் நீர்நிலைகளுக்கு செல்லும் குழந்தைகளே மூழ்கி உயிரிழக்கிறார்கள்.
  • சில நீர்நிலைகளில் ஆபத்தான பகுதிகள் என்று அரசு சார்பாக எச்சரிக்கை செய்திருப்பார்கள்; அந்த இடங்களில் அரசு உத்தரவுகளை மீறி இறங்கினால் உயிரிழப்புகள் ஏற்படும்.

எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்?

  • தற்போது நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்தான். எனவே பெற்றோரின் துணையின்றி குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்கவேண்டும்.
  • வீடுகளுக்கு அருகே நீர்நிலைகள் இருப்பின், குழந்தைகளை மிகக் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • பாதுகாப்பற்ற நீர்நிலைகள் இருப்பின் சம்மந்தப்பட்ட நிர்வாகங்கள் அல்லது கிராமத்தினர் துணையுடன் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
  • அறிமுகம் இல்லாத நீர்நிலைகளில் இறங்குவதை தவிக்கவேண்டும்.
  • நீர்நிலைகளில் இறங்கும் முன்பாக அதுபற்றிய விபரங்களை தெரிந்துக்கொள்வது அவசியம்.
  • உங்கள் பகுதிகளில் ஆபத்தான நீர்நிலைகள் இருப்பின், அதனை அரசுக்கு தெரிவித்து, அங்கே எச்சரிக்கை பலகை வைக்க உதவி செய்யவேண்டும்.
  • மதுபோதையில் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவேண்டும்.
  • நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி, புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
  • சாகச நோக்கத்துடன் நீர்நிலைகளில் இறங்குவதை தவிர்க்கவேண்டும்.

வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com