ஆலோசனைக்கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்கவில்லை எனவும், தலைவரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை தேவை என தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து நேற்றைய தினம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் தங்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, ’’கட்சியின் விதிப்படி அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்வுசெய்யமுடியும். ஆனால் பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற சட்டவிதி எந்தச்சூழலிலும் மாற்றப்படக்கூடாது. தலைவரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை தேர்வுசெய்ய முடியாது. பொதுச்செயலாளர் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என முடிவெடுக்கப்பட்டது. இதனால்தான் இரட்டைத் தலைமை என்ற நிலை உருவாக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் பொறுப்பே இருக்கலாமே, அமைச்சர் பதவி வேண்டாம் என்று நான் அப்போது சொன்னேன். ஆனால் இரட்டைத் தலைமை என்ற யோசனையை எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது நான் ஏற்றுக்கொண்டேன். டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஆட்சி பறிபோகக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பாற்றினோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி துணை முதலமைச்சருக்கு பிரத்யேக அதிகாரம் என்பது இல்லை. ஆனால் நான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன்.
தற்போது ஒற்றைத் தலைமை சர்ச்சை ஏன் உருவாக்கப்பட்டது என எனக்கே தெரியவில்லை. சிறப்பு அழைப்பாளரை அழைப்பது ஏன் என்பது குறித்து விளக்கவே மாவட்ட செயலாளர்களிடம் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டம் முடிகின்ற நேரத்தில்தான் கருத்து சொல்ல எழுந்த மாவட்ட செயலாளர் மூர்த்தி இந்த பிரச்னையை முதலில் எழுப்பினார். இதுகுறித்து தலைமை ஒருங்கிணைப்பாளரான என்னிடம் யாரும் கலந்து பேசவில்லை. இருப்பினும் இதுபற்றி வெளிய சொல்லவேண்டாம் என்று கூறியிருந்தோம். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே பேட்டியளித்ததால் தற்போது இந்த பிரச்னை பூதாகரமானது.
தொண்டர்களுக்காகத்தான் தொண்டர்களுடன் இணைந்து இந்த கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எந்தவித அதிகார ஆசையும் கொண்டவனல்ல நான். என்னை தொண்டர்களிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது. அதனால்தான் தொண்டர்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம், அமைதி காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒற்றைத்தலைமை தேவைதானா? என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இது தேவையா? எதிர்க்கட்சியாக ஒற்றுமையோடு பணியாற்றி ஆளுங்கட்சியாக வேண்டும். நானோ, எடப்பாடி பழனிச்சாமியோ ஒற்றைத் தலைமை என்பது குறித்து பேசியதில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகம்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு நானும் எடப்பாடியும் ஒரே வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். எந்தக் காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடையக்கூடாது; எனவே பேச்சுவார்த்தைக்கு நான் தயார். பொதுக்குழுவுக்கு முன்னதாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்துவிட்டால், பொதுக்குழுவில் எந்த பிரச்னையும் வராது. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி குறித்த தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி கொண்டுவர முடியாது. இந்த பிரச்னையை எழுப்பியவர்களை எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்க வேண்டும்.
முதலில் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போடலாம் என்று சொன்னபோது, முதலமைச்சராக எடப்பாடி இருக்கிறார் என ஒத்துக்கொண்டேன். திடீரென 2 நாள் கழித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்து போடவேண்டும் என்றார்கள். நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததற்கு மூலகாரணம் தொண்டர்கள் தான். உச்சபட்ச அதிகாரத்தில் நான் இருக்கவேண்டும் என எந்த காலத்திலும் கேட்டதில்லை. விட்டுகொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.
சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராகவே அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போதும் ஒற்றைத்தலைமை தேவையா? இல்லையா? என்பது குறித்து தனது கருத்தை எடப்பாடி பழனிச்சாமிதான் சொல்லவேண்டும். எனது கருத்தை தலைமை கழக நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறேன். எதிர்க்கட்சி யார் என்பது பற்றி சட்டமன்ற தேர்தலிலேயே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தொண்டர்கள்மீது சிக்கலான கருத்துகளை திணித்து அவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.பொதுக்குழுவை சுமூகமாக நடத்திவிட்டு, அடுத்த கட்டம் குறித்து 14 பேர் கொண்ட குழு பேசி முடிவு செய்யட்டும்.