”அப்போ மட்டும் ஏன் கையெழுத்துப் போட்டார்”-ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; ஆளுநருக்கு எதிர்ப்பு!

”அப்போ மட்டும் ஏன் கையெழுத்துப் போட்டார்”-ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; ஆளுநருக்கு எதிர்ப்பு!
”அப்போ மட்டும் ஏன் கையெழுத்துப் போட்டார்”-ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; ஆளுநருக்கு எதிர்ப்பு!
Published on

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், ஆளுநரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பூதாகரமாக வெடித்த ஆன்லைன் ரம்மி விவகாரம்

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தையும் இழந்து தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக் கொண்டே செல்கிறது. ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க இந்த விளையாட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழக அரசின் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது மிகப்பெரிய விவகாரமாக தமிழகத்தில் வெடித்துள்ளது. பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

எப்போது சட்டம் இயற்றப்பட்டது? 

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து சட்ட மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சட்ட மசோதாவுக்கு ஆளுநர்
ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை. அதில் சில விளக்கங்களை ஆளுநர் கேட்க, தமிழக அரசு சார்பில் அதற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில்
இரண்டாவது முறையாக ஆளுநர் மசோதவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆன்லைன் ரம்மி போன்ற தடை மசோதாக்களை நிறைவேற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்கே அதிகாரம் இருப்பதாகவும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இதனிடையே, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறும் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்து அனுப்ப அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

”இதற்குச் சில காரணங்கள் உள்ளன”

இதுகுறித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக வியாயகம், “இந்த விவகாரத்தில் அடிப்படையிலேயே ஆளுநர் செய்த செயல் மிக தவறானது. ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய அவசர சட்டமாக நிறைவேற்றியபோது அதில் கையெழுத்திட்டுள்ளார். இதை, சட்ட மசோதாவாக அனுப்பும்போது, 142 நாட்கள் நிலுவையில் வைத்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்த விவகாரத்தில், ஆர்டிகள் 142இன்கீழ் விடுதலை செய்யப்பட்டனர். இந்த எண் பிடித்ததன் காரணமோ என்னமோ, ஆளுநர் இந்த மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்துள்ளார். இது தேவையற்றது.

இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஆளுநர் செயல்பட்டுள்ளார் அல்லது மத்திய அரசிடம் உத்தரவு பெற்றுவிட்டு இதுபோன்று செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தடை வேண்டும் என்பதிற்கு சில காரணங்கள் உள்ளன. இந்த மசோதாவை பொறுத்தமட்டில் மத்திய அரசு மட்டுமே தடை விதிக்கவேண்டும் என்று ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது. இது தவறான ஒன்று. உயிர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், ஏற்கனவே பல உயிர்களை இழந்துள்ளோம். அவர்களின் தற்கொலை வாக்குமூலங்கள் முதல்வரின் பார்வைக்கு கொண்டுவரப்படுகிறது.

”ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை!”

அதன் அடிப்படையில் இந்த சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது; அவரச சட்டம் கொண்டுவரப்படுகிறது; உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதலால் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தால் உயிரிழப்புகளை தடுக்கமுடியும். ஒரு அரசு என்றால் அதைத்தான் செய்ய வேண்டும். அரசியல் போர்வையில் இதைப் பார்த்தால், உயிரோடு விளையாடுவதாக அர்த்தம். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் செய்தது மிகப்பெரிய தவறு என்னவென்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்துப் பேசியதுதான். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் அதை ஆளுநர் செய்யவில்லை. முதல் முறை திரும்ப அனுப்பிய பிறகு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இம்முறையும் திருப்பி அனுப்பியுள்ளார். அதேவேளையில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விவரங்களையும் தெரிவிக்கலாம் என அனுப்பியுள்ளார்.

”உயிர்களை காக்கும் எண்ணம் ஆளுநருக்கு வேண்டும்”

ஆளுநர் ரவி ஆரம்பத்தில் இருந்தே controversial ஆகவே உள்ளார். இங்கும் சரி, இதற்கு முன் ஆளுநராக பணியாற்றிய மாநிலங்களிலும் சரி, உயிர்களை காக்கும் எண்ணம் ஆளுநருக்கு வேண்டும். சட்டசபையில் எடுக்கும் முடிவுக்கு ஆளுநரே கட்டுப்படவேண்டும் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியால், ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்படும் பாதிப்பு, அதில் உள்ள அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து பரிந்துரைக்கப்பட்டதைத்தான் சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பட்டது. அதில் அவர் தடை செய்ய முடியாது என்று சொல்வதற்கு அளுநருக்கு அதிகாரம் கிடையாது.

”உயிர்கள் காவு வாங்குவது தடுக்கப்படும்!”

ஆளுநர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார். ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பாக நீதிமன்றத்தை நாடி தீர்வு காண முடியும். அதற்கு சற்று காலதாமதம் ஆகும். ஒருவேளை, இதுபோன்று காலதாமதம் செய்து, இதற்கிடையே உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்தால், இதைத்தான் ஆளுநர் விரும்புகிறாரா? ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்தால் மட்டுமே பல உயிர்கள் காவு வாங்குவது தடுக்கப்படும்.

மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராதவகையில், ஆளுநர்கள் செயல்பட வேண்டும். ஆளுநர்கள் ஆனபின்பும் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படக் கூடாது. இந்த விவகாரத்தில் ஆளுநர், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான முடிவிற்கு கட்டுப்படவில்லை என்றால், இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்” எனத் தெரிவித்துள்ளார்.

”ஏன் முதலில் அவர் கையெழுத்திட்டார்?”

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, “இது மிகவும் விசித்திரமான காரணம். ஆளுநர் 8 காரணங்கள் சொல்லியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் உண்மையிலேயே சட்டத்தின் பிரதி என்னவென்றால், இதை அவசர சட்டமாக அவர்தான் பிரகடனப்படுத்தியுள்ளார். அப்படி அவர் பிரகடனப்படுத்திய இந்த சட்டத்தை, மசோதாவாக வரும்போது ஆட்சேபனை தெரிவிக்கிறார். அப்படி என்றால் ஏன் முதலில் அவர் கையெழுத்திட்டார். அப்போது சட்டப்பூர்வமாக இருக்கிறது என்றவர், தற்போது சட்ட விரோதமாக இருக்கிறது என்று சொல்வதற்கு இதுவரை அவர் பதில் சொல்லவே இல்லை.

”இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது!”

தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட என் தலைமையிலான இந்த கமிட்டி அவர் சொல்லியிருக்கும் காரணங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லியிருக்கிறது. தமிழக அரசு எங்களுடைய அறிக்கை மட்டுமின்றி, பொதுமக்களின் கருத்தையும் கேட்டபிறகே இதற்கு அவசர சட்டத்தை இயற்றினார்கள். அவரும் இந்த சட்டத்திற்கு கையெழுத்திட்டார். இந்த நிலையில் அவர் மசோதாவை திருப்பியனுப்பி இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த சூதாட்டத்தைத் தடை செய்வதை தவிர, ஆளுநர் இதில் விளையாடுவதே ஒரு சூதாட்டம் மாதிரிதான் தெரிகிறது” என்றார்.

”ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது!”

ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், “ஆன்லைன் தடை மசோதாவை பல மாதங்கள் வைத்திருந்த அளுநர், தற்போது தமிழக அரசுக்கு இது சம்பந்தமாக சட்டம் இயற்றும் அதிகாரமில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார். இது, ஜனநாயகத்தை, கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இது, முதல் முறையல்ல. அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றிய பல மசோதாக்களை, சட்டமாக்காமல், கையெழுத்து போடாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com