ஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை

ஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை
ஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை
Published on

'ஒரே தேசம், ஒரே தேர்தல்'... இது 'நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்' என்கிறது பாஜக. 'சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும்; அதிபர் ஆட்சிமுறையை விரும்புகிறது பாஜக' என்கிறது காங்கிரஸ். 'ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா இது' என்கிறது திமுக. இவர்களது பார்வையின் பின்புலம்தான் என்ன?

நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறை மீதான விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. மீண்டும் இதுதொடர்பான தனது விருப்பத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "சில மாதங்களுக்கு ஒருமுறை தேசத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுவதைப் பார்க்கிறோம். இதனால் வளர்ச்சிப் பணிகள் தேக்கமடைவதை நாம் அனைவருமே அறிந்துவைத்திருக்கிறோம். எனவே ’ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறைதான் தற்போது நாட்டிற்க்கு அவசியமானது. 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்த விவாதம் தேவை.

நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கென தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது வீண்வேலை. இவை அனைத்திற்கும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கு பொதுவான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தலாம். இதை செயல்படுத்துவதில், சட்டமன்றங்களில் டிஜிட்டல் புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்" என்றார். 

ஒரே தேசம், ஒரே தேர்தல்... சாதகமா? பாதகமா? - இதுகுறித்து அரசியல் கட்சியினரிடம் கேட்டோம். அவர்களின் பார்வை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

'நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்!' - நாராயணன் திருப்பதி, பாஜக

"நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999-ம் ஆண்டே பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் இதை பரிந்துரைத்தது. பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி இந்தக் கருத்தை தொடர்ந்து பல காலங்களாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

குடியரசாகிய பின் முதல் நான்கு தேர்தல்கள் (1951, 1957,1962,1967) இதன் அடிப்படையிலேயே நடைபெற்றன. ஆனால், அதன் பின்னர் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சில மாநில அரசுகள் கலைக்கப்பட்ட காரணத்தினாலும், 1970-ம் ஆண்டு முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாலும், இயல்பாக நடைபெற்று கொண்டிருந்த தேர்தல் முறையானது வழி தவறி போனது என்பதே உண்மை.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலைகளை ஒரே நேரத்தில் நடத்துவதால் மாநில உரிமைகள் பறிபோகும், மாநில கட்சிகளின் செல்வாக்கு குறையும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநில கட்சிகளுடனான கூட்டணி ஆட்சியே இந்தக் குற்றச்சாட்டை முறியடிக்கும். மேலும், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் என்ற நிலை வருவது நிலையான நிர்வாகத்தை, தடையில்லா மக்கள் நலப்பணிகளை பாதிக்கிறது என்பது கண்கூடு.

பல மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுவதால், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதோடு, மற்ற மாநிலங்களோடு இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் பின் தள்ளப்படுவது தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில் மூன்று மாதங்களும், பின்னர் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மூன்று மாதங்களும் பெரிய திட்டங்கள், நலப்பணிகள் போன்றவைகள் செயல்படுத்தப்படாமல் இருப்பது, அந்த நேரத்தில் அதிகாரிகளின் பணியிட மாற்றம், கொள்கை முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை ஆகியவை அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

'இந்தியாவில் தேர்தல்கள்தான் ஊழலுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது' என்று முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி குறிப்பிட்டுள்ளது சற்றே திகைக்க வைத்தாலும், சிந்திக்க வைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த தொகுதி மக்களின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்பது இயல்பானது என்றாலும், அதிகாரம் என்பது முன்னெடுக்கப்பட்டு கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை என்கிற எண்ணமே முன் நிறுத்தப்பட்டு கட்சியின் பிரதிநிதியாகவே தற்போது இயங்குவது என்பதை வருத்தத்தோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பல்வேறு காலகட்டங்களில் தேர்தல்கள் நடப்பதால், வேட்பாளர்கள் அதிக பணத்தை செலவிட நேர்கிறது. வரையறுக்கப்பட்ட செலவை விட பன்மடங்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலையில், கருப்புப் பணப் புழக்கம் தேர்தல் காலங்களில் அதிகளவு புழக்கத்தில் இருப்பது ஊழல் அரசியலுக்கு வழிவகுக்கிறது.

சமீப காலங்களில் 'ஓட்டுக்கு நோட்டு' என்பது அதிகரித்து வருவது மிக பெரிய சாபக்கேடாக விளங்கி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது கண்கூடு. பல சமயங்களில் பல இடங்களில் தேர்தல் என்பதால் கட்சிகளும் அதிக அளவில் நிதி திரட்ட வேண்டியிருப்பதும், அதனாலேயே அதிக நிதி கொடுப்பவர்கள் ஆதிக்கமும் அரசியலில் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது.

சில செய்திகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகளால் 1998-ம் ஆண்டு தேர்தலில் 9000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும்,  2014ம் ஆண்டு 30000 கோடி ரூபாயாக  உயர்ந்த இந்த தொகை 2019-ம் ஆண்டு 60000 கோடி ரூபாயாக உயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்பதும் அச்சுறுத்தும் விவகாரம். அரசின் செலவே இத்துணை என்றால், வேட்பாளர்களின் செலவு, அரசியல் கட்சிகளின் செலவு இதைப்போல் பல மடங்கு உயரும். இந்தச் செலவுகள் லஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்கின்றன என்பதும், பணவீக்கத்திற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது என்பதும், 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

இதற்கான தேர்தல் சீர்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் பல காரணங்களால்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்தத் தேர்தலுக்கு குறுகிய காலம் இருந்தால், அடுத்த நாடாளுமன்றம் அமையும் வரை  குடியரசுத் தலைவர் நாட்டின் நிர்வாகத்தை நடத்தலாம் அல்லது தேர்தலுக்கு நீண்ட காலம் இருந்தால், தேர்தலை நடத்தி அந்த தேர்தலில் வெற்றிபெறும் அரசு  அடுத்த தேர்தல் நடத்தபட வேண்டிய காலம் வரையில் மட்டுமே  இயங்கும் (அதாவது எஞ்சியுள்ள காலம் மட்டும்) வகையில் மாற்றங்களை கொண்டு வரலாம்.

அதேபோன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய - மாநில அரசுகளின் கட்டமைப்பு திட்டங்கள் தடைபடாது மக்களை சென்றடைவதோடு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதை விடுத்து,  இதனால் மாநில சுயாட்சி பாதிக்கும், மாநில கட்சிகளின் வலு குறையும் என்பதெல்லாம் ஒரு வலிமையான மாநிலத்தை, தேசத்தை வலுவிழக்க செய்யும் வாதங்களாகவே பார்க்கப்படும்.

ஒரு சட்டமன்ற / நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் அந்த சட்டமன்ற காலத்திற்கு மட்டுமே நீடிக்க முடியும் என்ற விதி, ஒட்டுமொத்த சட்டமன்ற / நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடந்தால் அதே சட்டம் பொருந்தாதா?"

அதிபர் ஆட்சிமுறையை விரும்புகிறது பாஜக..’  - ஆ.கோபண்ணா,  காங்கிரஸ்

இந்தியா போன்ற பன்முக அரசியல் கலாசாரம் கொண்ட நாட்டில், ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ ஒத்துவராது என்பதை பலமுறை தெளிவுபடுத்திவிட்டோம். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். தேர்தல் முடிந்து மாநிலத்தில் ஓர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த ஆட்சி ஏதோவொரு காரணத்தினால் கலைந்துபோனால், எஞ்சியுள்ள சட்டப்பேரவை காலத்தில் ஆளுநர்தான் ஆட்சி நடத்துவார். மக்களாட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்கெல்லாம் பிரதமர் மோடி என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கிற பாஜக, ஒரு நிலையான ஆட்சியைப் பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடாக ஆட்சி, குதிரைப்பேரம் திட்டத்தால் கவிழ்க்கப்பட்டது அதற்கு உதாரணம். மத்தியப் பிரதேசம் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி, பாஜகவின் அதிகார வெறியால் கவிழ்க்கப்பட்டது.

இப்போதுள்ள தேர்தலால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது; அரசு நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவது தடைபடுகிறது என்கிற பாஜகவின் வாதங்கள் எல்லாம் இரட்டை வேடம் போடுவதை காண்பிக்கிறது.

நாடு விடுதலையடைந்த பின் இந்தியாவின் பன்முகத்தன்மைகளை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு  திட்டங்களை வகுத்திருந்தது காங்கிரஸ். இந்த பன்முகத்தன்மைகளை தகர்க்கிற வகையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  

பிரதமர் மோடி அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவந்து தன்னை அதிபராக மாற்றுவதற்கு முயன்று வருகிறார். மோடியைப் பொறுத்தவரையில் அவர் பேசுவதை மக்கள் கேட்கவேண்டும். மக்கள் பேசுவது தனது காதுகளில் விழக்கூடாது என நினைக்கிறார். 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும். இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாக்கு, எல்லா வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு” என்ற அரசியல் சமத்துவத்தை அம்பேத்கர் ஏற்படுத்தித் தந்தாரே அதை சோதித்துப் பார்க்கத் தேர்தலே வாய்ப்பளிக்கிறது. 

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது இந்த உரிமையைப் பறிப்பதற்கும், சட்டமன்ற - நாடாளுமன்ற ஆயுட்காலத்தை மாறாமல் செய்வதற்கும், அதன் மூலம் இப்போதுள்ள நாடாளுமன்ற அமைப்பு முறையை ஒழித்துக்கட்டுவதற்குமான சதித்திட்டத்தின் வெளிப்பாடே ஆகும்.”

'ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா...' - சிவ ஜெயராஜ், திமுக

"ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே அரசு மொழி, ஒரே தேர்தல் என்கிற இந்துத்வா கொள்கையின் படிப்படியான செயல்பாடுகளின் வெளிப்பாடுதான் மோடி தெரிவித்துள்ள கருத்து. அடுத்து ஒரே மொழி, அது இந்தியாக இருக்கும் என விவாதம் கிளப்புவார்கள்.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சி நடக்கிறது. மாநில அரசின் உரிமைகள், அதிகாரம் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாநில முதல்வரின் அதிகாரம் ஒரு கார்ப்பரேஷனுக்கான அதிகார அளவில்தான் இருக்கிறது. அந்தளவிற்கு மாநில சுயாட்சி தகர்க்கப்பட்டு வருகிறது.

பெரும்பான்மையாக வெற்றி பெறாத பல மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி செய்கிறது. 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' எனும் முறை வரும்போது அது பாஜகவிற்கு இன்னும் வசதியாக இருக்கும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் இந்த 'ஒரே தேசம் ஓரே தேர்தல்'. இதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா. இதை திமுக கடுமையாக எதிர்க்கிறது. பேச்சு வழக்கில் இருக்கும் இத்திட்டத்தை எதிர்த்து, அடுத்து நாடாளுமன்றம் கூடுகையில் திமுக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com