ஆங்கிலேயரின் கோட்டையை ஒற்றை ஆளாக தகர்த்தெறிந்த ஒண்டி வீரன்! நினைவு தின சிறப்பு பகிர்வு!

ஆங்கிலேயரின் கோட்டையை ஒற்றை ஆளாக தகர்த்தெறிந்த ஒண்டி வீரன்! நினைவு தின சிறப்பு பகிர்வு!
ஆங்கிலேயரின் கோட்டையை ஒற்றை ஆளாக தகர்த்தெறிந்த ஒண்டி வீரன்! நினைவு தின சிறப்பு பகிர்வு!
Published on

அது 18-ஆம் நூற்றாண்டு! தென்னிந்தியாவின் சிற்றரசர்கள் எல்லாம் ஆற்காடு நவாபிற்கு வரி செலுத்திக் கொண்டிருந்த காலம். ஆங்கிலேய காலனி ஆதிக்கம் வேர் பதித்து நாடு முழுவதும் பரவத் துவங்கிய காலம். ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் முன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பேரரசுகள் எல்லாம் வரிசையாக வீழ்ந்து கொண்டிருந்தபோது, ஆற்காடு நவாப் குடும்பத்தில் வாரிசுச் சண்டை வெடித்தது. இதை கச்சிதமாக பயன்படுத்தி காய் நகர்த்திய ஆங்கிலேயர்கள் நெருக்கடி அளிக்க, தங்கள் ஆளுகைக்குட்பட்ட சிற்றரசுகளிடம் இனி நீங்களே வரி வசூலித்துக் கொள்ளுங்கள் என்று நவாப் ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து வரி கேட்க வந்த ஆங்கிலேயர்களுக்கு தலைவலியாக மாறினர் பல பாளையக்காரர்கள். அவற்றுள் தவிர்க்க முடியாத பாளையம் தான் பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டும்செவ்வல்.

வரி கட்ட மறுத்த பூலித்தேவன் - உறுதுணையாக நின்ற ஒண்டி வீரன்:

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்து உள்ள பாளையம் தான் நெற்கட்டும்செவ்வல். இப்பகுதியை ஆண்டு வந்த பாளையக்காரர்தான் பூலித்தேவன். ஆற்காடு நவாப் ஆளுகையின் கீழ் இருந்த பாளையம் எனும்போதும் நவாபிற்கே வரி தர மறுத்த பாளையமாக நெற்கட்டும் செவ்வல் திகழ்ந்ததாக கூறப்படுகிறது. அடுத்து ஆங்கிலேயர் வசம் வரி வசூல் உரிமை மாறியபோதும் வரி செலுத்த மறுத்தது இந்த பாளையம். மறுத்தவர் பாளையக்காரர் பூலித்தேவன். இவருக்கு பக்க பலமாக நின்ற படைத்தளபதிதான் “ஒண்டி வீரன்”.

ஒற்றை ஆளாய் ஆங்கிலேயப் படைகளை விரட்டிய வீரன்:

வரி கொடுக்க பல முறை மறுத்ததை அடுத்து நெற்கட்டும் செவ்வல் மீது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் படை 1755 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இப்படையை செவ்வலில் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர் பூலித்தேவனும் ஒண்டிவீரனும். அபாரமாக போர்புரிந்த இருவரும் ஆங்கிலேயப் படைகளை மதுரை நோக்கி பின்வாங்கச் செய்தனர்.

ஒற்றைக் கையை பறிகொடுத்த ஒண்டிவீரன்:

இதையடுத்து ஆங்கிலேயப் படைகள் பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் நெற்கட்டும் செவ்வலை தாக்குவதற்காக தென்மலையில் முகாமிட்டிருந்தனர். பீரங்கித் தாக்குதலை எப்படி சமாளிப்பது என ஆலோசனை நடத்தியபோது தாமாக முன்வந்து தென்மலைக்கு புறப்பட்டார் ஒண்டிவீரன். தன் மீது இலை தழைகளை போட்டுக் கொண்டு ஆங்கிலேயர்களின் முகாமில் ஊடுருவத் துவங்கினார். அப்போது குதிரையைக் கட்டுவதற்காக ஈட்டியை ஆங்கிலேய வீரர் தரையில் குத்தியபோது அது ஒண்டிவீரனின் கையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. தாம் சத்தம் போட்டால் வந்த காரியம் வீணாகிவிடும் என்று அமைதியாக வலியை தாங்கினார் ஒண்டிவீரன். ஈட்டியைப் பிடுங்க முயன்ற போது அது முடியாததால் தன் கையை வெட்டி விட்டு வந்த வேலையை பார்க்க ஒண்டி வீரன் சென்றதாக சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்னும் சிலர் அவர் குதிரையில் ஏறி தப்ப முயலும்போது ஒரு ஆங்கிலேய வீரன் அவரது கையை வெட்டி விட்டதாக குறிப்பிடுகின்றனர். எது எப்படியோ தென்மலை முகாமிற்கு சென்றபோது தனது கையை ஒண்டிவீரன் பறிகொடுத்தது ஆதாரப்பூர்வமாக தெரியவருகிறது. பின்னாளில் ஒண்டிவீரன் தன் கையை பறிகொடுத்திருப்பதை கண்டு பூலித்தேவன் கண்கலங்கி நின்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயர்களின் பீரங்கிகளை வைத்து அவர்களது கோட்டையை தகர்த்தவர்:

கையை பறிகொடுத்தபின் திட்டமிட்ட வேலையில் மும்முரமாக இயங்கினார் ஒண்டிவீரன். வெளி வாயில்களை நோக்கி வைக்கப்பட்டிருந்த பீரங்கிகளின் திசையை மாற்றி, ஆங்கிலேயர்களின் கோட்டையை நோக்கி குறிவைக்குமாறு திருப்பினார். பின்னர் அபாய ஒலியை அவர் ஒலிக்கச் செய்ய, ஆபத்தை எதிர்கொள்வதற்காக பீரங்கிகளை இயங்கினர் ஆங்கிலேய படைத்தளபதிகள். அவற்றில் இருந்து பாய்ந்த குண்டுகளால் ஆங்கிலேயர்களின் கோட்டை வெடித்து சிதறியது. பல்லாயிரக்கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.

போர்க்களத்தில் அசகாய சூரன் ஒண்டி வீரன்:

ஆங்கிலேயர்களுகே கிலியை ஏற்படுத்திய ஒண்டிவீரன் பின்னர் திருநெல்வேலி, களக்காடு, வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் என அனைத்து போர்களிலும் பகைவர்களை ஓட ஓட விரட்டினார். பூலித்தேவனுக்கு பிறகு அவரது புதல்வர்களுக்கும் படைத்தளபதியாக நின்று பல போர்களை வென்று அசகாய சூரனாக திகழ்ந்தார். நொண்டி சிந்து உள்ளிட்ட நாட்டுப்புற பாடல்கள் இன்றளவும் ஒண்டிவீரனின் தீரச் செயல்களை நினைவு கூறச் செய்கின்றன.

நினைவு அஞ்சல் தலை:

ஒண்டிவீரனின் நினைவு நாளான இன்று அவரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த தபால் தலையை வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com