செந்தமிழ் நாட்டில் கவிஞர்கள் எங்கே போனார்கள் ?

செந்தமிழ் நாட்டில் கவிஞர்கள் எங்கே போனார்கள் ?
செந்தமிழ் நாட்டில் கவிஞர்கள் எங்கே போனார்கள் ?
Published on

இன்று உலக கவிதை நாள். உலகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கவிதை கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். தங்களுக்கு பிடித்தமான கவிஞர்களை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். புதிய புத்தகங்களை வெளியிடுவார்கள். ஆனால், இந்தியாவிலோ அப்படி இல்லை. கவிதை குறித்த புரிதல் உள்ளவர்கள் சொற்பமானவர்களே. கவிதையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் தற்போது வறட்சியே நிலவுகிறது.

சினிமாப் பாடல் தான் கவிதைகள் என்ற எண்ணம் வளரும் டீன் ஏஜ் பருவத்தில் எல்லோர் மனதிலும் இருக்கும். இசையோடு, குரலின் தித்திப்போடு சேர்த்து எத்தனையோ பாடல்கள் அதன் வரிகளின் இனிமைக்காகவும் நம்மை ஆட்கொண்டிருந்தது. கண்ணதாசன் தொடங்கி சமீபத்தில் மறைந்த முத்துக்குமார் வரை தங்களது பாடல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். சினிமா பாடலை தாண்டி சிலர்தான் கவிதை உலகிற்கு செல்வார்கள்.

அவர்களுக்கு ஏதோ ஒரு தருணத்தில் கவிதை உலகின் வெளிச்சம் கிடைக்கும். கல்லூரிகளில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் தான் மிகவும் அதிகமான வாய்ப்புகள் உண்டு. தினசரி செய்திதாள்களை புரட்டினால் இன்றைய நிகழ்ச்சிகளை கவனித்து வந்தால் அதில் கவியரங்க நிகழ்ச்சிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். கல்லூரிகளில் தமிழ்துறையில் நிறைய கவிதை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இப்படியான வாய்ப்புகள் மூலம் தான் கவிதை உலகில் அடியெடுத்து வைப்பார்கள். 

இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று கவிதை எழுதுவது, மற்றொன்று கவிதை, கவிஞர்கள் குறித்து தொடர்ச்சியாக படித்து, கேட்டு தெரிந்து கொள்வது. முதல் விஷயத்தை எடுத்துக் கொண்டால் இயல்பாக பள்ளி, கல்லூரி படிக்கும் பல மாணவர்களிடம் கவிதை எழுதும் உணர்வு இருக்கும். அவர்களுக்கு வெளிப்படுத்த சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது அவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதேபோல் தான் கல்லூரிகளிலும். இதில் சிக்கல் என்னவென்றால் கவிதை இயல்பான ஊற்றாக இல்லாமல் பெரும்பாலும் கவிதைப் போட்டிக்கான மனநிலையே உருவாக்குகிறார்கள். இருப்பினும், அதனையெல்லாம் தாண்டி சமூக சிக்கல்கள் குறித்து கவிதை எழுதும் நிலையில் நிறைய பேர் தங்களை உயர்த்திக் கொள்வார்கள். 

இரண்டாவது கவிதை குறித்த பரிட்சயம். இதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. கவிதை எழுதும் ஆர்வலம் உள்ளவர்களுக்கு நிறைய கவிதை நூல்களை படிக்க வழிகாட்டுதல் தேவை. அது பள்ளி, கல்லூரிகளில் அவர்களது ஆசிரியர்களை பொறுத்தது. சிலருக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியேயும் வழிகாட்டி அமைவார்கள். பாரதியார் கவிதைகள் தொடங்கி இன்குலாப் வரை அவர்களுக்கு நல்ல கவிஞர்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். கவிதைக்கான மொழித் திறனுக்கும், உள்ளார்த்த அர்த்தத்திற்கும் இது முக்கியமானதாக உள்ளது. எல்லோருக்கும் பாரதியாரின் கவிதைகளை தெரியும். ஆனால், அதனை புரிந்து கொள்வதற்கு பயிற்சி நிச்சயம் தேவை. அவரது சுதந்திர கவிதைகள், பாஞ்சாலி சபதம், விநாயகர் நன்மணி மாலை எல்லாவற்றையும் ஆழ்ந்து படிக்க வேண்டும். சுதந்திர போராட்டக் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கவி சக்ரவர்த்தியாக இருந்த பாரதியை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியுமா என்ன?.

இப்படியாக, தமிழகத்தை பொறுத்தவரை சென்ற தலைமுறைக்கு வைரமுத்து தான் கவிதை உலகிற்கான நுழைவாயில். திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசியகீதம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல போன்ற அவரது கவிதை நூல்கள் பலருக்கும் பரிட்சயம். வைரமுத்துவையும் தாண்டி கவிதை உலகில் இன்குலாப் போன்ற புரட்சிகரமான கவிஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஈரோடு தமிழன்பன், காசி ஆனந்தன் உள்ளிட்டோர் அதில் அடங்குவர். இதனையெல்லாம் தாண்டி இந்திய அளவில் தாகூர், உலக அளவில் வால்ட் விட்மன், பாப்லோ நெருடா உள்ளிட்ட கவிஞர்கள் பரிட்சையமாவார்கள்.

தமிழக இலக்கிய வரலாற்றப் பொறுத்தவரை கம்பன், ஔவையார், இளங்கோவடிகள் நமது சொத்துக்களாக உள்ளனர். சுதந்திர காலத்தில் பாரதியும், பாரதிதாசனும் புயலாய் மாறி கவிதைகளை படித்து மக்களுக்கு சுதந்திர உணர்வு ஊட்டினர். இப்படி இருக்கையில், தமிழ் இலக்கியம் படிப்பவர்களே கவிதைகளில் பயிற்சி எடுத்துக் கொள்வதில்லை. அதாவது கவிதைகளை, இலக்கியங்களை வாசிக்கும் பழக்கங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  

கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களை முன்பு வீட்டிலேயே வைத்து படித்தார்கள். ஆனால் தற்போது அந்த பழக்கம் இல்லை. அதனைவிட, இலக்கியம் படிப்பவர்களும் அந்த பயிற்சியை எடுத்துக் கொள்வதேயில்லை. தமிழகத்தில் புதிய கவிதை மரபு மீண்டும் உருவாக வேண்டும், செந்தமிழ் நாட்டில் கவிதைகள்  மீண்டும் செழித்து ஓங்க வேண்டும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com