1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 17-ஆவது வயதில் முதல் சதத்தை பதிவு செய்தார். அப்போது தொடங்கிய அவரது சாதனைப் பயணம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் வரை நீண்டுக்கொண்டே சென்றது.
ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடிப்பதற்கான விதை மான்செஸ்டரில் இதே நாளில் இங்கிலாந்துக்கு எதிராக விதைக்கப்பட்டது. இதனை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு காலத்தால் அழிக்க முடியாத ஜாம்பவானை கெளரவப்படுத்தியுள்ளது.
1990 மான்சஸ்டர் டெஸ்ட் போட்டி - ஒரு 'ரீவைண்ட்'
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 519 ரன்களை குவித்தது. அப்போது இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தவர் கிரகாம் கூச். அவர் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களை விளாசினார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆத்தர்டன் 131 ரன்களையும் எடுத்து வலுவான நிலையில் இருந்தனர். இதனையடுத்து இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுடன் ஆட்டமிழந்தது. அப்போது இந்திய அணிக்கு தலைமைதாங்கிய முகமது அசாருதீன் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 179 ரன்கள் விளாசினார்.
முதல் இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 68 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் லாம்ப் சதத்துடன் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. பின்பு இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 408 ரன்கள் நியமிக்கப்பட்டது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு 90 ஓவர்களில் இந்த இலக்கை எட்டியாக வேண்டும் அல்லது விக்கெட்டுகளை இழக்காமல் டிரா செய்ய வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. அப்போது இங்கிலாந்து அணியில் டெவன் மால்கம், ஆங்கஸ் பிரேசர், கிறிஸ் லூயிஸ் ஆகிய அசுர பவுலர்கள் இருந்தனர்.
நம்பிக்கையுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவின் சித்து, ரவி சாஸ்திரி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 2 விக்கெட் இழந்து 35 ரன்களை எடுத்து தடுமாறியது. பின்பு வெங்சர்கார், சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடினர். ஆனால் அணியின் ஸ்கோர் 109 ஆக இருந்தபோது மஞ்சரேக்கரும் ஆட்டமிழந்தார். பின்பு, வெங்சர்கார், அசாருதீன் ஆகியோர் அவுட்டாக இந்தியா 5 விக்கெட் இழந்து 127 ரன்களை சேர்த்தது. இந்த இக்கட்டான கட்டத்தில்தான் கபில் தேவுடன், 17 வயதேயான சச்சின் டெண்டுல்கர் க்ரீஸுக்கு வந்தார்.
கபில் தேவ் ஆட்டமிழந்ததும் இந்தியா நிச்சயம் தோல்வியடைந்துவிடும் என்று பலரும் நினைத்தனர். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மனோஜ் பிரபாகருடன் ஜோடியமைத்து யாரும் எதிர்பாராத இன்னிங்ஸை ஆட தொடங்கினார் சச்சின் டெண்டுல்கர். இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை தனது ஆட்டத்தின் மூலம் சோர்வடையச் செய்தார் சச்சின். முடிவில் 189 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 119 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தார் சச்சின். அப்போது மனோஜ் பிரபாகரும் 67 ரன்கள் நாட் அவுட். 90 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து இந்தியா 343 ரன்களை எடுத்தது.
17 வயதில் இந்தியாவுக்காக முதல் சதமடித்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் தோல்வியையும் தடுத்தார் சச்சின் டெண்டுல்கர். அப்போது தொடங்கிய அவரின் பயணம் இந்தியாவுக்காக 24 ஆண்டுகள் விளையாடினார் சச்சின். இப்போதும் சச்சினின் சாதனை முறியடிக்கப்படாமல் இருப்பதால்தான் இந்திய மனங்களில் இப்போதும் ஜாம்பவனாக இருக்கிறார்.