இந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று !

இந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று !
இந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று !
Published on

ஜூன் 25, 1983 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னான நாள். கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை கைப்பற்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த நாள் இன்று. இந்திய அணி தனது இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்க்கொண்டது. இரண்டு முறை உலகக்கோப்பை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது முறையாக அந்த மகுடத்தை சூடும் முனைப்பில் இருந்தது.  தன்னை உலகுக்கு நிரூபிக்கும் கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

ஒரு துடிப்பான தலைவனின் கீழ் இந்தியா இந்தப்போருக்கு தயாரானது. இந்தியா அணி உண்மையில் மகுடம் சூட வேண்டும் என்ற முனைப்பில் சென்றதா என்பது தெரியாது. ஆனால் அந்தத் தொடரில் இந்தியாவை ஏளனமாக பார்த்தவர்களுக்கும் கேலி பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடங்கிய அந்த கோபம் தான் இந்தியாவுக்கு கோப்பையை கைப்பற்றி தந்தது எனலாம்.

உலகக்கோப்பை தொடரில் இந்த அணி ‘பி’  பிரிவில் இடம்பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் இதில் இடம்பெற்று இருந்தன. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்க்கொண்டது. அப்போது எல்லாம் ஒருநாள் போட்டி 60 ஓவர்கள் நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. யாஷ்பல் ஷர்மா 89 ரன்கள் குவித்து அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்தது இதுவே முதல்முறை.

அடுத்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்க்கொண்டது. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய தெம்பில் இந்தியா களமிறங்கியது. அதேபோல் ஜிம்பாப்வே அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது. இந்தப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 155ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 37.3 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது.

இந்திய அணி மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்க்கொண்டது. இதில் 60 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஆஸி., அணி 320 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியால் ஆஸி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. 158 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. 162 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் கபில்தேவ் 40 ரன்கள் மற்றும் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 

இந்திய அணி அடுத்தப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை அணியை எதிர்க்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த  வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்கள் குவித்தது. இந்தியா 216க்கு ஆல் அவுட் ஆனது. இந்தப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்தியாவுக்கு எதிராக 116 ரன்கள் குவித்தார். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு அந்த அணி பழிதீர்த்துக்கொண்டது. இந்தப்போட்டியில் இந்திய வீரர் வெங்சர்கார் ரிட்டயர்ட் ஹேர்ட் (Retired Hurt) முறையில் வெளியேறினார்.

ஜிம்பாப்வே எதிரான போட்டியில் கபில் தேவ் மிரட்டினார். இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருத்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்களான கவாஸ்கரும் - ஸ்ரீகாந்தும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இந்தத்தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அமர்நாத் 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். யாஷ்பல் ஷர்மா, பாடீல் என தொடர்ந்து ஜிம்பாப்வேவின் பந்துவீச்சுக்கு இரையாகினர். இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி 50 ரன்களை கடப்பதே சவாலாக இருந்தது. ஆனால் கபில் தேவ் களமிறங்கிய பின்னர் அது எல்லாம் தலைகீழாக மாறியது. அதிரடியில் இறங்கிய கபில் தேவ் 138 பந்துகளில் 175 ரன்கள் ( நாட் அவுட்) குவித்தார். இதனால் இந்திய அணி 60 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. இந்தப்போட்டியில் ஜிம்பாப்வே அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிபிசி ஊழியர்களின் ஸ்ட்ரைக் காரணமாக இந்தப்போட்டியில் ஒளிபரப்பு மற்றும் பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக கபில் தேவ்வின் கிளாசிக் ஆட்டத்தை நம்மால் காண முடியாமல் போய்விட்டது. இந்தப்போட்டி தான் இந்திய வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. 

கடைசி லீக் போட்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய ஆஸி., அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 129ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப்போட்டியில் அபாரமான பந்துவீசிய பின்னி மற்றும் மதன்லால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தனது பிரிவில்  முதல் இரண்டு இடங்களை பிடித்த வெஸ்ட்இண்டீஸ், இந்திய அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறின.

அரையிறுதியும் அவமானமும்

அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி - இங்கிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தானையும் எதிர்க்கொண்டது. அப்போது இங்கிலாந்து பத்திரிகை ஒன்று இந்திய வீரர்கள் குறித்து கிண்டலாக செய்தி வெளியிட்டது. அதில் ஜோக்கர் கூட்டம் ( Bunch of Jokers) என கிண்டலாக பதிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதனை உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த சந்தீப் பாடீல் ஒருமுறை தெரிவித்திருந்தார். 

இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 60 ஓவர் முடிவில் 213 எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 217 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் சந்தீப் பாடீல் 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி போட்டியை விட்டு வெளியேறியது.


இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டியது. இந்தப்போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. மூன்றாவது முறையாக மகுடம் சூடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது. உலகக்கோப்பையை கைப்பற்ற கிடைத்த இந்தப்பொன்னான வாய்ப்பை தவறவிடக்கூடாது என இந்தியா களமிறங்கியது. லீக் சுற்றில் மோதிய இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றிருந்தது. இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்தப்போட்டியில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் 38 ரன்களும், அமர்நாத் 26 ரன்களும் எடுத்தனர்.

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்தது. மேலும் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணிக்கு இக்கட்டான சூழலை எப்படி கையாள்வது என்று  தெரியும். இந்தியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கட்டாயம். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் என பலரும் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அதற்கு இந்திய வீரர்கள் இடம் கொடுக்கவில்லை. கட்டுக்கோப்பான பந்துவீச்சு, சிறப்பான ஃபீல்டிங் என அசத்திய இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை 140 ரன்களில் சுருட்டியது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் தனது வரலாற்றை எழுத ஆரம்பித்தது. கபில் தேவ் லார்ட்சில் கோப்பையை உயர்த்திப்பிடித்தார். கபில் தேவ் இந்தியர்களின் ஹீரோவானார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com