“34 ஆண்டுகளாகியும் தீராத சோகம்”- போபால் விஷவாயு தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு

“34 ஆண்டுகளாகியும் தீராத சோகம்”- போபால் விஷவாயு தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு
“34 ஆண்டுகளாகியும் தீராத சோகம்”- போபால் விஷவாயு தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு
Published on

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 34-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

போபால் விஷவாயு கசிவு:

மத்தியப்பிரதேசத்தின் போபால் நகரில் அமெரிக்க உர நிறுவனத்துக்குச் சொந்தமான யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. கடந்த 1984-ஆம் ஆண்டில் டிசம்பர் 2-ம் தேதி இரவிலும், அடுத்த நாளான டிசம்பர் 3-ம் தேதி அதிகாலையிலும் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோ சயனடைடு விஷவாயு அந்த ஆலையில் இருந்து கசிந்தது. உயிருக்கு உலை வைக்கும் அந்த வாயு போபால் நகர வளிமண்டலத்தில் மெல்ல கலந்தது. இதில் பலர் தூக்கத்திலேயே விஷ வாயுவை சுவாசித்து உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் இந்த கோரம் நிகழ்ந்ததால் தப்ப வழியில்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். மேலும், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை:

உலகின் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகப் கருதப்படும் இந்த விபத்து தொடர்பாக யூனியர் கார்பைடு நிறுவன அதிபரும், தலைமை செயலதிகாரியுமான வாரென் ஆண்டர்சனை போலீசார் கைது செய்தனர்.

தீராத சோகம்:

யூனியன் கார்பைடு ஆலை ஏற்படுத்திய தீராத வடு போபால் மண்ணையும், நிலத்தடி நீரையும் இன்றும் விட்டுவைக்கவில்லை. விபத்து நடந்த யூனியன் கார்பைடு ஆலையில் விபத்து நடந்து 34 ஆண்டுகளாகியும், அங்கிருந்து நச்சுக் கழிவுகள் நீக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். போபாலில் 14 ஆண்டுகள் இயங்கிய யூனியன் கார்பைடு நிறுவனம், தொழிற்சாலை வளாகத்தில் 11 லட்சம் டன் நச்சுக் கழிவுகளை நிலத்தில் புதைத்துள்ளதாகவும், அந்த தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் 340 டன் நச்சுக் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பவம் நடந்து 34 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற நாள் முதல் ஆண்டு தோறும் இரண்டு நாட்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் சோக தினத்தை நினைவில் கொண்டு, மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்துதல், இரங்கல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் யூனியன் கார்பைடுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கோருகின்றனர்.

மாநில அரசு டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலையை மத வழிபாடுகளுடன் அனுசரித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்த தினத்தில் ரன் போபால் ரன் என்ற நிகழ்ச்சியை ஐ.ஏ.எஸ் அதிகாரி நிஷான்ட் வார்வார்டு தொடங்கி வைத்தார். இதில், டிசம்பர் 2 ஆம் தேதி ஓட்டப்பந்தயம், இசை நிகழ்ச்சி, என பல நிகழ்ச்சிகள் நடைபெறும். 

இந்நிலையில் இன்று போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று நகரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தினர். போபால் விஷவாயு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில தலைநகரில் ‘ரன் போபால் ரன்’ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் நடிகர் டைகர் ஷிராஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com