எழில்மிகு தமிழ்நாட்டில் எந்த ஊரில் நீங்கள் பிறந்திருந்தாலும் சீர்மிகு சென்னை உங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தொடர்பில்லாமல் இருந்துவிடாது. சென்னையைக் கடக்காமல் அதனுடன் பழகாமல் தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை முடியவும் முடியாது. அப்படிப்பட்ட சென்னை இன்று தனது 382-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
எப்போதும் புதுமையும் இளமையும் கொண்ட சென்னை மாநகரம் தன்னுடைய பழமையை இன்னும் இழக்காமல் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டு இருக்கிறது. சென்னை 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி உருவாக்கப்பட்டதாக வரலாற்று தரவுகள் தெரிவிக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள். இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் ஓர் ஆண்டுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற ஐய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் பழையை சென்னையை 'கறுப்பர் நகரம்' என்றழைத்த வரலாறும் இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தின் தலைநகர் மதராஸாக மாறியது. பின்பு 1969-ஆம் ஆண்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் பகுதி 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தலைநகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என மாற்றம் செய்யப்பட்டது. 382-வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னையின் பெருமைகளை இன்றைய நாளில் அறிந்து கொள்ளலாம்.
வணிக நகரமாக மாறிய சென்னை: சென்னையின் மக்கள் தொகை 1646 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறும் 19 ஆயிரமாக இருந்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனிகாரர்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு வந்தனர் என்பதால் அவர்களோடு வாணிபம் செய்ய நிறைய உள்ளூர் வியாபாரிகள் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறினர். கம்பெனியின் வியாபாரம் வேகமாக பெருகப் பெருக அதற்கேற்ப பொதுமக்களின் போக்குவரத்தும் அதிகரித்தது. இணைந்த கிராமங்கள் பரபரப்பான பகுதிகளான எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன.
முதன் முதலில் 1688 ஆம் ஆண்டு சென்னை, முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. பின்னர் சென்னை மாகாணம் என்ற அந்தஸ்தை பெற்றது. சென்னையின் அசுர வளர்ச்சி 1746-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சு அரசாங்கம் கைப்பற்றியது. பின்னர் 1749-ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்கு பிறகே சென்னை மாகாணம் அசுர வளர்ச்சி அடைந்தது. முக்கியமாக வாணிபத்துக்கான போக்குவரத்து வசதிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. தொலைபேசி, ரயில், சினிமா, தபால் போன்றவை அடுத்து அடுத்து மிக வேகமாக சென்னை மக்களுக்கு அறிமுகமாகியது.
சினிமா தொடங்கியதும் இங்கேதான்: தமிழகத்திலேயே முதல் சினிமாக் கொட்டகை சென்னையில்தான் அறிமுகமானது. இப்போது, அண்ணா சாலை தபால் நிலைய கட்டடத்தில் அப்போது திரையரங்கு இருந்தது. சென்னையில் ஆங்கிலேயர்கள் இருந்த பகுதி வெள்ளையர் நகரம் என்றும், ஆங்கிலேயர் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதி கறுப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. கறுப்பர் நகரமாக அறியப்பட்ட வட சென்னைப் பகுதிகளில் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலி பஜார் பிரபலமாக விளங்கியது. மற்றொருபுறம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்து வந்தன. வர்த்தக தலைநகரம் ஒருபுறம் எளிய மனிதர்கள், மறுபுறம் ராஜாக்கள், நவாப்கள், ஆங்கிலேயர்கள் என சென்னை தென்னிந்தியாவின் வர்த்தக தலைநகராக உருமாறியது.
ராயபுரம் ரயில் நிலையம்: வர்த்தகத்துக்கு துணை நின்ற சென்னைத் துறைமுகம் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தப் போக்குவரத்துகள்தான் சென்னையை ஒரு மிகப் பெரிய மாநகரமாக உருவாக்கின. ரயில் போக்குவரத்து 1856-ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையமும் அதுவே. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1873-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல எழும்பூர் ரயில் நிலையம் 1908-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன.
குடிநீரில் முன்னோடி: சென்னை குடிநீருக்கு 27 கிணறுகள் 1783லிருந்து 1787 வரை பட்டணத்து மக்களுக்குக் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், குழாய்களில் தண்ணீர் வருவதைப் பார்த்து மிரண்டு ஓடிய மக்கள் அதைப் புறக்கணித்துவிட்டு, வழக்கம்போலக் கிணறு மற்றும் ஆற்றுத் தண்ணீரையே பயன்படுத்தினார்கள். இதனால், அந்தத் திட்டம் வெற்றிபெறாமல் போனது. 1818ல் மதராஸ் ஆட்சியர் எல்லீஸ், நகரின் பல்வேறு இடங்களில் மேலும் 27 கிணறுகளைத் தோண்டி, மக்களுக்கான தண்ணீர் தேவை சமாளிக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1911ல் சென்னை மாநகராட்சியின் சிறப்புப் பொறியாளர் ஜே.டபிள்யூ. மேட்லி ‘பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம்' ஒன்றை மாநகராட்சியிடம் சமர்ப்பித்தார். அந்தத் திட்டம் செயலாக்கம் பெற்று, கீழ்ப்பாக்கத்தில் 14 மிதமணல் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு அங்கே குடிநீர் சுத்திகரிக்கப்பட்டது. 1914 டிசம்பர் 17-ம் தேதி, மதராசப் பட்டணத்து மக்களுக்கு முதன் முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
சமயங்களை வளர்த்த சென்னை: பெரும்பாலான மக்களுக்கு சென்னனையில் இருக்கும் ஆன்மீக திருத்தலங்களின் பழமை தெரியாது. இந்து மதத்தின் சைவக் கோயில்களான மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் ஆகியவை உள்ளன. வைணவக் கோயிலான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரசித்திப் பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு சாந்தோம் தேவாலயமும், இஸ்லாமியர்களுக்கு பெரிய மசூதியும் சென்னையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
நூலகங்கள்: சென்னையில் இயங்கும் கன்னிமரா பொது நூலகம், மாக்ஸ் முல்லர் பவன் நூலகம், அல்லயன்ஸ் பிரான்சைஸ் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சென்னை இலக்கிய சங்க நூலகம், சென்னை ஆவணக்காப்பக நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் மட்டுமல்லாமல் எஸ்.எஸ். கண்ணன் நடத்திய மார்க்ஸ் லைப்ரரி, பெரியார் திடல் நூலகம், பாலன் இல்ல நூலகம், அண்ணா அறிவாலய நூலகம், சென்னை பல்கலைக்கழக நூலகம் போன்றவை அறிவுப் பெட்டகங்களாக விளங்குகின்றன.
முதல் வானியல் ஆய்வகம்: இந்தியாவின் முதல் வானியல் ஆய்வகம் 1792 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகம் கொடைக்கானலுக்கு மாற்றப்படும்வரை, இந்த ஆய்வகமே இந்திய ஸ்டாண்டர்டு நேரத்தை நிர்ணயித்து வந்தது. இந்த இடத்தில்தான் தற்போது வானிலை ஆய்வு மையம் இருக்கிறது. டிராம் வண்டிகள் மாட்டு வண்டிகளையும், குதிரை வண்டிகளையும், எப்போதாவது தென்படும் சீமான்களின் கார்களையும் மட்டுமே சென்னை மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் முறையாக 1895ம் ஆண்டு மே 7-ம் தேதி சென்னை நகர வீதிகளில் எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தப் போக்குவரத்தை சென்னை மக்கள் அதிசயித்துக் கண்டனர். இதில் முக்கியமாக அந்தச் சமயத்தில் லண்டனில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை.
எப்போதும் வீழாத சென்னை: சுனாமி, வர்தா, 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெரு வெள்ளம் என எத்தனை இயற்கை சீற்றங்களையும் சந்தித்துள்ளது சென்னை மாநகரம். ஆனால், எந்தவொரு நிலையில் சென்னை அதன் வளர்ச்சியை கைவிட்டதில்லை. இப்போது கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவுடன் போராடி வருகிறது சென்னை. ஆனால் ஒருபோதும் அந்த பெருந்தொற்றுக்கு முற்றிலுமாக வீழ்ந்துவிடவில்லை. சென்னையின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டேன்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை ஆகியவை கொரோனா காலத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு பல உயிர்களை காத்து வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை முதலில் அதிகரிக்கும் நகரம் சென்னையாக இருந்தாலும் இறுதியில் அதை கட்டுப்படுத்தும் நகரமாக இருப்பதும் சென்னைதான் என்பது பெருமை.
நம்ம சென்னை: சுனாமி, வர்தா, 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெரு வெள்ளம் என எத்தனையே இயற்கை சீற்றங்களையும் சந்தித்துள்ளது சென்னை மாநகரம். ஆனால், எந்தவொரு நிலையில் சென்னை அதன் வளர்ச்சியை கைவிட்டதில்லை. தமிழகத்தின் பல மாவட்ட மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். சென்னையின் பூர்வகுடிகள் 40 சதவிதம் பேர் மட்டுமே, மீதம் 60 சதவிதம் பேர் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பின்பு, சென்னையை சொந்த ஊராக மாற்றிக்கொண்டார்கள். பரபரப்பான வாழ்கைதான், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்தான், ஆனால் இம்மாநகர் பலருக்கு வாழ்வாதாரம் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.