ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாடா மாவட்டத்தில் உள்ள பைரூபா ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்னை முதலை ஒன்று தாக்கி கொன்றது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனமா ஜெனா என்பவரின் மனைவி ஜோஷ்னா ஜெனா. இவர் கடந்த புதனன்று தனது வீட்டருகே இருக்கும் பைரூபா ஆற்றங்கரையில் காலை 9.30 மணி அளவில் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் குளித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஆற்று தண்ணீரில் மறைந்திருந்த முதலை ஒன்று ஜோஷ்னா ஜெனாவை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச்சென்றது.
அப்பெண்ணின் கூச்சலைக்கேட்ட உள்ளூர்வாசிகள் ஜோஷ்னா ஜெனாவை காப்பாற்ற கூச்சல்களை எழுப்பியும், கத்தியும் முயற்சித்து பார்த்துள்ளனர். ஆனால், அப்பெண்ணை முதலையிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தீயணைப்பு துறையினரும், வன காவலர்களும் ஆற்றில் இறங்கி ஜோஷ்னா ஜெனாவைத் தேடிய பொழுது முதலை சாப்பிட்டு எஞ்சி இருந்த பாதி உடலை கண்டெடுத்தனர் என்று தலிஜோடா வன அதிகாரி அபிராம் ஜெனா கூறியுள்ளார்.
இதனிடையே, இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களை கதிகலங்க வைக்கும்படி உள்ளது. அதாவது, அந்த பெண்ணின் உடலை முதலை கடித்து உண்பது பதிவாகியுள்ளது. அந்த ஆற்றில் கரையில் அந்த உடலை கவ்விக் கொண்டு சாப்பிடுவது பார்ப்பதற்கே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவிய பிறகு தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து, இறந்த அப்பெண்ணின் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே கேந்திரபாடா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், முதலை தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உள்ளது குறிப்பிடத்தக்கத்து.
கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி 56 வயதான அமுல்யா தாஸ் என்பவரையும், ஜூன் 29ம் தேதி கங்கதார் தாரி என்ற 56 வயது முதியவரையும், ஜீன் 21ம் தேதி 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவரையும், ஜுன் 14ம் தேதி 10 வயது குழந்தையையும் முதலை தாக்கிக் கொன்றது.
கேந்திரபாடா மாவட்டத்தில் முதலைகள் அதிகமாக காணப்படும் பகுதியாக ஆல், ராஜ்நகர், பட்டமுனை, ராஜ்கனிகா ஆகியவை உள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இப்பகுதிகளில் இருக்கும் ஆறு மற்றும் நீர்நிலை பிரதேசங்களில் முதலைகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் முதலைகளின் தாக்குதலைத் தடுப்பதற்கு கிட்டத்தட்ட 80 ஆறுகளில் தடுப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், முதலைகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் மக்களை எச்சரிக்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியும், ஒலிபெருக்கியின் உதவியாலும் மக்களை எச்சரித்து வருவதாக வனத்துறை அதிகாரியான சுதர்ஷன் கோபிநாத யாதவ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.