'அவ கடைசியா என் பெயர தானே சொன்னா?' என்கிறான் ஹீரோ. அவனுக்கு அந்த வார்த்தை ஏதோ செய்கிறது; உலுக்குகிறது. தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. பெரிய பாண்டிங் எதுவும் இல்லாத ஒருவர், எதிர்பார்க்காத நேரத்தில், இறுதியாக நமது பெயரை உபயோகிக்கும்போது பெயருக்கான அடர்த்தி அதனளவில் அதிகரித்துவிடுகிறது; நம்மையறியாமல் அது முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லப்போனால் காதலும் இப்படியான ஒரு விபத்துதானே... அப்படியாக நிகழும் விபத்தில் சிக்கும் காதல் ஜீவிக்கும் நொடிகள்தான் 'அக்டோபர்' திரைப்படம்.
ஷியுலி (Shiuli) டேன் (Dan) இருவரும் ஒரே ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்கள். ஷியுலியை பொறுத்தவரை அவர் பொறுப்பாக வேலை பார்க்கும் பெண். ஆனால், டேன் அப்படியில்லை. ஏனோ தானோ என மனம் போன போக்கில் வேலை பார்ப்பவர். இருவருக்குள்ளுமான உறவு என்பது சக ஊழியர் என்ற அளவிலியே இருக்கிறது. தொடர்ந்து எதிர்பாராத விதமாக நிகழும் விபத்து டேன் மனதுக்குள் ஏற்படுத்தும் மாற்றம், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களாக விரிகிறது படம். ஹிந்தி மொழிப் படமாக 'அக்டோபர்' அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. ஜூஹி சதுர்வேதி எழுதி ஷூஜித் சர்கார் இயக்கியுள்ள படம் 2018ம் ஆண்டு வெளியாகியுள்ளது.
'காதல் ஒரு விபத்து' என்பார்கள். இந்தப் படமும் அதைத்தான் சொல்கிறது. இறுதிவரை அவர்களுக்குள் நிகழ்வது காதல் என்பதை எந்த இடத்திலும் படம் பதிவு செய்யவில்லை. ஆனால், அது காதல்தான் என்பதை பார்ப்பவர்களுக்கு உணர்த்தும் விதம் ஈர்க்கிறது. அது ஒரு நட்பின் உச்சமாக கூட இருந்திருக்கலாம். ஆனால் உற்ற தோழி கூட, 'எதார்த்தமா பேசு' என நகர்ந்துவிடும்போது, அவன் மட்டும் தனது உலகத்தையே மருத்துவமனையாக்கிவிடுகிறான். காதலின் வீச்சைத் தவிர வேறொன்றும் இந்த உந்துசக்தியை தந்துவிடாது என உணர வைக்கிறது படம்.
படத்தின் தலைப்புடன் கதையின் போக்கை இணைக்கும் காட்சி ஒரு கவிதை போல ஈர்க்கிறது. அதாவது, அக்டோபர் மாத சீசனில் இரவில் பூக்கும் மல்லிகைப்பூவின் பெயர் ஷியுலி. அதுதான் கதாநாயகியின் பெயரும் கூட. விரைவில் உதிர்ந்துவிடும் அந்தப் பூவை தன்னுடனேயே நாயகன் எடுத்துச் செல்லும் ஒரு சிங்கிள் ஷாட் படத்தை உச்சத்தில் தூக்கி நிற்கிறது. அதுவரை படத்தில் இருந்த சோர்வு முழுமையாக நீங்கி அப்லாஸ் அள்ளுகிறது.
படம் பொறுமையாக நகர்வது போல தோன்றினாலும், நாயகன் வருண் தவானின் (Varun Dhawan) நடிப்பு ஈர்க்கிறது. சின்ன சின்ன ஹியூமருடன் அவர் செய்யும் செயல்கள் புன்னைகைக்க வைக்கிறது. பல இடங்களில் ரசிக்கவும் வைக்கிறார். அதேபோல நாயகி பனிதா சந்து (Banita Sandhu)-வுக்கு கடினமான பாத்திரம். அவ்வளவு எளிதில் யாராலும் செய்துவிடமுடியாது. மெனக்கிட்டிருக்கிறார் என்பது திரையில் தோன்றுகிறது. 'கண்ணை மட்டுமே அசைக்க வேண்டும்; முகத்தில் எந்த ரியாக்ஷனும் கூடாது' என்றால் அந்த பொண்ணு என்னதான் செய்யும். அதை அவ்வளவு எதார்த்தமாக கச்சிதமாக செய்திருக்கிறார். அதேபோல படத்தில் தமிழ் பேசுபவரான தென்னிந்தியாவில் வாழும் நாயகியின் சித்தப்பா, நெகட்டிவாகவே பேசும் நபராகவே சித்தரித்திருப்பது உறுத்தல்.
அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு காட்சிகளை செம்மையாக்குகிறது. சாந்தனு மொய்த்ராவின் இசை படத்தோடு கலந்து கரைகிறது. எடிட்டர் சந்திரசேகர் பிரஜாபதி தனது கத்திரிக்கோலில் தாராளத்தை கடைபிடித்திருக்கலாம். மொத்ததில் பொறுமையுடன் படத்தை பார்க்கும் சினிமா பிரியர்களுக்கு 'அக்டோபர்' படம் நிச்சயம் பிடிக்கும்.
நாயகன் சொல்வதைப்போல, பெரிய அளவில் பழகமில்லாத 'ஒருவரின் இறுதி வார்த்தை' அத்தனை முக்கியமானது தானே!
| முந்தைய அத்தியாயம்: ஓடிடி திரைப் பார்வை 8: Teenkahon - அடையமுடியாத உறவுகளும்... அடக்கியாளும் உணர்வுகளும்! |