இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தனது பதவி உயர்வுக்கு தடையாக இருந்தார் எனும் ரீதியிலான கருத்துக்கள் சுயசரிதையில் இடம் பெற்றதாக வெளியான நிலையில் சுயசரிதை வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளார் சோம்நாத்.
"சந்திரயான் 2 திட்டத்தில் தோல்விக்கான காரணமாக லாண்டரில் இருந்து தொலை தொடர்பு கிடைக்கவில்லை என்று தான் கூறப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் மென்பொருளில் தவறு ஏற்பட்டுள்ளது, அதன் அல்கார்தம் மாற்றப்பட்டுள்ளது என்பது தான்.. ஏன் சந்திரயான் 2 திட்டத்தின் லேண்டர் தரை இறங்கவில்லை எனும் காரணம் விஞ்ஞானிகளான எங்களுக்கு தெரிந்தும் வெளிப்படையாக சொல்லப்பட்ட காரணம் தொலைதொடர்பு இல்லை என்பது தான்.. வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் வெளித்தடை தன்மை அவசியம்" இதுதான் இந்நாள் இஸ்ரோவின் தலைவரும், சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதற்கு காரணமானவருமான சோம்நாத், தனது சுயசரிதையில் எழுதிய வார்த்தைகள்.
கேட்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இஸ்ரோவில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இதன் பின்னால் உள்ள அரசியல் புரிந்தது. குறிப்பாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தனது தாய் மொழியான மலையாளத்தில் "நிலவு குடிச்ச சிம்மங்கள்" எனும் புத்தகத்தை எழுதி வருகிறார். சோம்நாத் கேரள மாநிலம் துறவூரில் பிறந்தது முதல் தொழில்நுட்பவியலாளராக ஆவதற்கான பயணமும், இஸ்ரோவிற்கு வந்த பிறகு அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சந்திரயான் திட்டத்தின் வெற்றி குறித்து தனது ஆழ்மனது கருத்துக்களை சுயசரிதை புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
160 பக்கங்கள் கொண்ட சோமநாத்தின் சுயசரிதை இதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் அதன் முதல் பிரதியின் நகல் மட்டும் புத்தகத்தை வெளியிடும் லிபி பதிப்பாளரால் சில பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சுயசரிதையில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை கேரளாவில் உள்ள முன்னணி நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன.
அதில் குறிப்பாக இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் அவரது முன்னோடியுமான சிவனைப் பற்றிய சர்ச்சைக்குரிய சில தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சோம்நாத்தின் வளர்ச்சிக்கு சிவன் எந்த அளவிற்கு தடையாக இருந்தார் என்பது குறித்து மலையாள மனோரமா பத்திரிகை விரிவான கட்டுரை வெளியிட்டது. இஸ்ரோவில் முன்னாள் தலைவர் கிரண்மாருக்கு பிறகு சிவன் மற்றும் சோம்நாத் ஆகியோர் ஒரே குரூப்பில் இருந்ததாகவும் இஸ்ரோ தலைவருக்கான தகுதி தனக்கு இருந்தும் சிவனுக்கு வழங்கப்பட்டது என்றும் சிவன் தலைவராக பொறுப்பேற்றது முதல் அனைத்து அதிகாரத்தையும் அவர் பயன்படுத்தியதாகவும் யாரோடும் கலந்தாலோசிக்காமல் திட்டங்களை செயல்படுத்தியதாகவும் கூறப்பட்ட தகவல் இஸ்ரோ வட்டாரத்தை மட்டுமல்லாது அறிவியலாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
மேலும் சந்திரயான் 2 திட்டத்தில் சோதனை மிகக் குறைவான அளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும், தரையிறங்குவதற்கு முன் லேண்டர் தவறான பாதைக்கு சென்றதற்கு காரணம் தவறான மென்பொருள் பயன்பாடு தான் என சோமநாத் தனது சுயசரிதையில் கூறியதாக மலையாள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டது. மேலும் லேண்டர் தவறாக தரையிறங்கியதற்கான காரணம் தங்களுக்கு தெரிந்தாலும் வெளியே வேறு காரணம் கூறப்பட்டது என்றும் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அப்போது இஸ்ரோ இருந்ததாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனை மறைமுகமாக தனது சுயசரிதையில் சோம்நாத் சாடியுள்ளதாக மலையாள செய்தி பத்திரிகைகள் வெளியிட்டது. இந்நிலையில் தான் சோம்நாத் தனது சுயசரிதை புத்தகத்தை தற்போதைக்கு வெளியிடவில்லை என்றும் நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சோம்நாத்திடம் கேட்டபோது டாக்டர் சிவன் என்னை தலைவராவதை தடுக்க முயன்றதாக தான் கூறவில்லை என்றும் விண்வெளி கமிஷனின் உறுப்பினராக ஆக்கப்படுவதற்கு எனக்கு வாய்ப்புகள் குறைவாக கொடுக்கப்பட்டதாக மட்டும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது புத்தகம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் பதிப்பாளர்களை சில பிரதிகளை வெளியிட்டு இருக்கலாம் ஆனால் இத்தனை சர்ச்சைக்கு பிறகு வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக சோம்நாத் கூறியுள்ளார்.
டாக்டர் சிவன் தொடர்ந்து இஸ்ரோவின் ஆலோசகராக இருந்து வருவதால், எதிர்கால பணிகளுக்கான ஆலோசனைகளை அவர் தொடர்ந்து அளித்து வருவதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக சோம்நாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவனிடம் கேட்டபோது புத்தகத்தை தான் படிக்கவில்லை என்றும் படித்த பிறகு தான் கருத்துக்கள் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பாலவெற்றிவேல்