“கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை உருவாக்குமென்பது ஆதாரமற்றது” - நிபுணர்களின் கருத்து

“கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை உருவாக்குமென்பது ஆதாரமற்றது” - நிபுணர்களின் கருத்து
“கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை உருவாக்குமென்பது ஆதாரமற்றது” - நிபுணர்களின் கருத்து
Published on

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுகளில், மிக முக்கியமான அம்சமாக இருப்பது, அதுபற்றிய தவறான பரப்புதலை ஒழிப்பதும் தடுப்பதும். இதற்காக, அரசு தொடர்ச்சியாக முயற்சிகளை செய்து வருகிறது. இருந்தும்கூட, ‘தடுப்பூசி போட்டால் இதயப்பிரச்னைகள் வரும், சில வருடங்களில் வாழ்வியல் பாதிப்புகள் வரலாம்’ என்றெல்லாம் வதந்திகள் பரவிவருகின்றன. இப்படி சமீபத்தில் வந்த ஒரு விஷயம்தான் ‘தடுப்பூசி போட்டால், மலட்டுத்தன்மை உருவாகும்’ என்பது. இதன் உண்மைத்தன்மையை, இங்கே அறிந்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி, மலட்டுத்தன்மையை உருவாக்கும் என்பதை முற்றிலுமாக மறுக்கும் விதமாக, மத்திய அரசு நேற்று முன்தினம் (கடந்த புதன்கிழமை) விளக்கமொன்று அளித்திருந்தது. அதில், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆண்கள் – பெண்களுக்கு மலட்டுத்தன்மை வருமென்ற கூற்றுக்கு, எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை. அனைத்து தடுப்பூசியும், அனைவருக்கும் பாதுகாப்பானது என்பதற்கு மட்டுமே அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே மக்கள் எதற்கு அச்சப்பட வேண்டாம்.

அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதல் தரப்பட்டிருக்கும் அனைத்து தடுப்பூசிகளும், முதலில் விலங்குகளுக்கும் – பின் மனிதர்களுக்கும் செலுத்தப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. அனைத்திலும் தடுப்பூசி பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்ட பின்னரே அவை சந்தைக்கு வந்தன. ஆகவே, தடுப்பூசி பாதுகாப்பானதல்ல என்ற வதந்திகளை நம்பவேண்டாம்” எனக்கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு மட்டுமன்றி, தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை பணிக்குழுவின் தலைவர் அரோராவும் குறிப்பிட்டிருந்தார். பத்திரிகை பேட்டியொன்றில் அவர் இதுபற்றி பேசும்போது, “இந்தியாவில், போலியோ தடுப்பூசி போடப்பட்ட நேரத்திலும், இதேபோன்றதொரு வதந்தி பரவியது. உதாரணத்துக்கு போலியோ தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகளுக்கு, வருங்காலத்தில் மலட்டுத்தன்மை குறைபாடு ஏற்படுமென்று சொன்னார்கள். ஆனால், இது அனைத்தும் வதந்தியாகவே காலப்போக்கில் முடிந்தது. இன்றளவுவரை, அப்படியான எந்தவொரு பக்கவிளைவையும் போலியோ தடுப்பூசி ஏற்படுத்தவில்லை. போலியோ தடுப்பூசி செய்ததெல்லாம் ஒன்றுதான். அது, போலியோவை ஒழித்தது.

எந்தவொரு தடுப்பூசியும், கண்டறியப்படும்போது அதற்கு உழைத்த ஒவ்வொரு விஞ்ஞானியும், அறிவியலாளரும் நிறைய பரிசோதனைகள் செய்திருப்பனர். முன்பின் தெளிவு இல்லாமல், எந்தவொரு அறிவியலாளரும் தடுப்பூசி கண்டுபிடிக்கமாட்டார்கள். அரசும், முழு ஆய்வுக்கும் பிறகே அதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. மக்கள், அதை புரிந்துக்கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு கண்டுபிடித்திருக்கும் தடுப்பூசிகள் எதற்கும், இப்படியான (மலட்டுத்தன்மை) பக்கவிளைவு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே அச்சப்பட வேண்டாம் யாரும்” எனக்கூறியுள்ளார்.

சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மனு லட்சுமி பேசுகையில், “கொரோனா தடுப்பூசியானது, மலட்டுத்தன்மையை உருவாக்குமென்பது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. இது உடலில் கொரோனா போன்றொரு ஸ்பைக் புரதத்தை உருவாக்கி, வருங்காலத்தில் உடல் கொரோனாவுக்கு எதிராக செயல்படும்வகையில் திடப்படுத்துமே தவிர, குறைபாடுகள் எதையும் ஏற்படுத்தாது.

இப்போது தடுப்பூசி பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்கூட பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாயொருவர் தடுப்பூசி போடுவதற்கு முன்னும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறோம். அதேபோல கர்ப்பிணிகளும், தடுப்பூசி போடும் முன்னும் பின்னும் வேறு எந்த வழிமுறையும் பின்பற்ற வேண்டி இருப்பதில்லை. அரசும் இதையே சொல்கின்றது. இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தாய்மார்கள் – கர்ப்பிணிகள் அனைவரும், தங்களோடு சேர்த்து தங்களின் குழந்தையையும் காப்பாற்றுகின்றனர். அந்தளவுக்கு, தடுப்பூசி பாதுகாப்பானது. ஆகவே, வதந்திகளை மக்கள் தயவுசெய்து நம்பவேண்டாம். தடுப்பூசி, பாதுகாப்பானதுதான்!” என்றார்.

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை எதிர்கொள்ள உதவும் வழிமுறையாக இருக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற வதந்திகள் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் விழிப்புணர்வோடு அனைத்தையும் அணுகவேண்டிய இடத்தில் உள்ளோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com