“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..

“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..
“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..
Published on

கேரளாவில் மீட்புப் பணியின் போது நடந்த அனுபவங்கள் முழுவதையும் ராணுவ ஹெலிகாப்டர் தலைவர் ரான் ராபர்ட் பகிர்ந்துள்ளார்.

நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். கேரள மக்களும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள களத்தில் இறங்கினார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டனர். அனைத்தரப்பு மீட்புப்படைகளையும் மிஞ்சும் வகையில் கேரள மீனவர்கள் களத்தில் இறங்கி அசத்தினர்.

மீட்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை ராணுவ வீரர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. மீட்பு பணிகளின் போது அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. பொதுவாகவே, ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வு என்பதே அவ்வளவு எளிதில் இருக்காது. பெரும்பாலான இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துகொள்ள வெளியேற முடியாத நிலையில் மக்கள் சிக்கிக்கொண்டனர். சாலைகள் முடங்கிய நிலையில், அவர்களை மீட்பதில் பெரும் பங்கு வகித்தது பறக்கும் போர் ஹெலிகாப்டர்கள் தான். இந்த போர் ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே சுமார் 300க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாத இடங்களில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 70 டன் உணவுகள் பாதிக்கப்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

உணர்ச்சிவசங்களை கடந்து சென்றோம் :

கடந்த 20 நாட்களுக்கு மேலாக கேரளாவில் நடந்த மீட்பு பணிகள் குறித்து மலையாள மனோரமா என்ற கேரள ஊடகத்திடம் போர் ஹெலிகாப்டர் தலைவர் ரான் ராபர்ட் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “மீட்பின் போது நாங்கள் உணர்ச்சிவசமோ அல்லது இரக்க குணத்தை வெளிக்காட்ட இயலாது. நாங்கள் அனைத்தையும் கடந்து சென்றுக் கொண்டே இருந்தோம்” என்றார். ரான் ராபர்ட் கோயம்பத்தூரில் இருந்து கேரள மீட்புக்காக சிறப்பு நியமனம் செய்யப்பட்டவர். அவர் தொடர்ந்து கூறும் போது, “அவசர நேரத்தில் எங்களுக்கு தேவையான கூடுதல் ஹெலிகாப்டர்களை கேரள அரசு வழங்கியது. 

13 டன் ஹெலிகாப்டர்.. நம்பர் முடியவில்லை.. :

எங்கள் மீட்பு வீரர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களில் தினமும் காலை ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். இதற்காக எங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் உதவி புரிந்தனர். நாங்களும் முடிந்தவரை பணிபுரிந்தோம். அனைத்து வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியிருந்தது. ஏராளமான பெரிய மரங்கள் விழுந்திருந்தன. அதனால் நாங்கள் குறைவான உயரத்தில் பறக்க இயலவில்லை. ஒருமுறை மீட்புப் பணிக்காக ஒரு கட்டடத்தின் மீது ஹெலிகாப்டரை நிறுத்தினோம். 13 டன் கொண்ட அந்த ஹெலிகாப்டரை அக்கட்டடம் தாங்கியதை என்னால் நம்ப முடியவில்லை. அது எந்நேரமும் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஹெலிகாப்டர் மூலம் ஏராளமானோரை காப்பாற்றினோம். ஒருமுறை அந்த ஹெலிகாப்டர் சென்றால் 33 பேரை மீட்டு வரும். 

12 மணிக்கு தூக்கம், காலை 3.30க்கு மீட்பு :

ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் துணை பைலட் இருவரையும் தவிர அனைவருமே மீட்டுப்பணிக்கு சென்றுவிட்டனர். எங்கள் தரைப்படை வீரர்கள் ஓயாது மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு 12 மணிக்கு தான் தூங்குவார்கள். ஆனால் விடியற்காலை 3.30 மணிக்கெல்லாம் மீண்டும் மீட்புப்பணிக்கு புறப்பட்டுவிடுவார்கள். அவர்களின் தியாகமே வெற்றிகரமான மீட்புக்கு காரணம். தரைப்படை குழுவின் தலைவராக செயல்பட்ட போர்விமானத் தலைவர் இம்தியாஸ் அகமது சிறப்பாக செயல்பட்டார். அதேபோன்று திருவனந்தபுரத்தில் மீட்புக்குழுத் தலைவராக செயல்பட்ட விமானப்படை தலைவர் பிரசாந்த் நாயரும் திறமையான பணியை வெளிப்படுத்தினார். 

திக்..திக்.. 13 மாணவிகள் மீட்பு :

மீட்புப் பணிகளில் மிகவும் அபாயகரமானது என்றால் அது செங்கனூரில் உள்ள ஐய்யப்பா கல்லூரியில் 13 மாணவிகளை மீட்டது தான். அந்த அனுபவத்தை மறக்க முடியாது. கல்லூரியில் மாணவிகள் சிக்கிக்கொண்டனர். எங்கள் ஹெலிகாப்டரில் எரிபொருள் அளவு குறைந்துகொண்டே இருந்தது. வேகமான காற்றால் சிரமம் இருந்தது. கொஞ்சம் கூட எதையும் பார்க்க இயலவில்லை. பெரிய மரங்கள் ஏராளமாக சாய்ந்திருந்தன. எப்படியோ எரிபொருள் தீர்ந்துபோவதற்குள் ஒருவழியாக 13 பேரையும் காப்பாற்றிவிட்டோம். எங்கள் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டவர்கள் சோகத்தை வெளிப்படுத்த ஒரு அறை கூட இல்லை. அனைத்து உணர்ச்சிவசமான தருணங்களையும் கண் முன்னே கடந்தே வந்தோம். 

கசப்பான செல்ஃபி : நெகிழ்ச்சியான நன்றி

ஒருமுறை கர்ப்பிணி பெண் ஒருவரை பத்திரமாக மீட்டோம். அவரது கணவரும் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். அதற்காக மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் நன்றி (THANKS) என்று எழுதிக் காட்டினர். அதனை மறக்கவே முடியாது. அது மிகவும் ஒரு நெகிழ்ச்சியான தருணம். மீட்புப் பணியின் போது ஒரு இளைஞர் மீட்டோம். அவர் ஒரு செல்ஃபி எடுத்துவிட்டு செல்லுமாறு கூறினார். அதுபோன்ற தருணங்களில் செல்ஃபி எடுக்கக்கூறியது கசப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் மனித இயல்புகளை புரிந்துகொண்டு நகர்ந்தோம். மக்கள் உதவி கேட்கும் போது அவர்களின் மாடிகளில், துணிகளால் ‘உதவி’ (Help) என எழுதிக்காட்டினர். இந்த மீட்புப்பணிகள் அனைத்துமே எங்கள் கள வீரர்களால் மட்டும் சாத்தியமானது” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com