2015-ம் ஆண்டு சென்னையை உலுக்கியது வெள்ளம். யாராலும் மறக்க முடியாத சம்பவமாக அமைந்த சென்னை வெள்ளத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரியின் திறப்புதான். குறிப்பிட்ட நேரத்துக்குள்ளேயே அதிக அளவிலான தண்ணீர் திறப்பும் , இணையாக கடுமையான மழையும் இருந்ததே சென்னையில் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு என்றாலே சென்னை மக்களுக்கு பீதி பற்றிக்கொள்வதை மறுக்கமுடியவில்லை.
2015 சம்பவம் அதற்கு காரணமாக உள்ளது. ஆனால் ஏரி திறப்பு என்பது வழக்கமான ஒன்றுதான் எனவும், சென்னை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளை வேடிக்கை பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக சென்னையில் இரண்டு தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் 22 அடியை நெருங்கிவிட்டது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,027 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் திறப்புதானே தவிர இது வெள்ளம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக செம்பரம்பாக்கம் அச்சம் குறித்து விளக்கம் அளித்த சென்னை வெதர்மேன், ஏரி திறந்து விடப்பட்டாலே வெள்ளம் என நினைக்கக்கூடாது. அடையாறு நதியானது ஓரளவு பெரிய நதி. அதில் 10,000 கன அடி சென்றாலும் கூட மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 2015-க்கும் பின் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் தற்போதைக்கு மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என தெரிவித்துள்ளார்