தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தலைதூக்க வாய்ப்பில்லை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தலைதூக்க வாய்ப்பில்லை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தலைதூக்க வாய்ப்பில்லை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
Published on

திமுக அரசு அதிமுக அரசு என்று பார்க்காமல் காவல்துறை அரசுக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தலைதூக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவிக்கு வந்த புதிதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு குறைந்திருந்த குற்றச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா? இல்லை இது அரசியலுக்காக சொல்லப்படும் குற்றச்சாட்டா? என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடம் கேட்டோம்....

திமுக அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது, ஆனால், நான் அந்த கட்சி, இந்த கட்சி என்று சாதாரண பொதுமக்கள் சொல்வது போல திமுக போலீஸ் அதிமுக போலீஸ் என்று இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது என பேச ஆரம்பித்தார் பாலபாரதி.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமான செயல்படுகிறது என்றே நான் நம்புகிறேன், ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளித்தாலும் அவர்களுக்கு கீழே பணியாற்றும் காவலர்கள் அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றே எண்ணுகிறேன். காவல் துறைதான் அரசாங்கத்தின் நிர்வாக செயல்பாடுகளை சுமந்து செல்லும் பெரிய வாகனம்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு சாதாரண ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்குவது கூட மிகவும் கடினமான விசயம், அப்போது பார்த்தால் சட்டம் ஒழுங்கு, காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால் திமுக ஆட்சிக்கு வருகின்ற போது காவல் துறையினரின் செயல்பாடு அதே மாதிரியாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். காவல்துறை திமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தால் நிச்சயமாக சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.

இதுதான் அரசுக்குள் இருக்கும் அரசியல், இந்த அரசியல் நுட்பமானது. இந்த விசயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி காவல் துறையில் என்ன மாதிரியான எதிர் அரசியல் இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதை சரிசெய்து காவல் துறையின் ஒத்துழைப்பு பெறவேண்டும். திருட்டு சம்பவங்கள் எல்லாம் காவல் துறையினருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். இதை கண்காணிக்கிற கவனிக்கிற பொறுப்பு காவல் துறைக்கு இருக்கிறது.

காவல் துறையினர் மனம் திறந்து திமுக ஆட்சியை ஏற்றுக்கொண்டு மதசார்பற்ற அரசு என்ற அடிப்படையில் காவல்துறை அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை உறுதியாக தமிழக அரசு கவனிக்கும். ஆனால், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்ற கருத்தும் விமர்சனமும் மக்கள் மத்தியில் பரப்புவதற்கான ஒரு அரசியல் இருக்கிறது.

தமிழக காவல் துறையில் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் நல்ல முறையில் கொண்டுசெல்ல முடியும். இந்த அரசு வந்த பிறகு மக்களுக்கான நல்ல திட்டங்களை அறிவிக்கிறார்கள். அரசின் அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது. எந்த பிரச்னையாக இருந்தாலும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அதை சரிசெய்வார்கள் என்ற நம்பிக்கை சாதாரண மக்களுக்கு கூட ஏற்பட்டிருக்கிறது.

இந்த புதிய அரசியல் சூழலில் காவல்துறை அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன். இல்லையென்றால் சமூக விரோதிகள் வருவார்கள். சாதி மத கலவரங்கள் உருவாகும். திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்க வாய்ப்பிருக்கிறது. காவல்துறை தொடர்பான விசயங்களில் இந்த அரசின் தலையீடு இல்லை என்றே நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது ஒட்டுமொத்த காவல் துறையும் இணைந்து நின்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வராது என்பது என்னோட கருத்து என்று முடித்தார் பாலபாரதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com