மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நீராவி மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டதாகவும், கட்டணம் கடுமையாக உயர்ந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், பொதுமக்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இனி ஊட்டி மலை ரயில் சாதாரண மக்களுக்கு கிடையாதா என்று பலரும் ஏக்க பெருமூச்சுவிட்டனர். இந்தச் செய்தி தீயாக பரவியது. அதாவது, 'டி.என்.43' என்ற பெயரில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை தனியார் மூலம் தொடக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த நிலையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
மேலும் சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள், காவி வண்ணத்தில் உடை அணிந்து காட்சியளித்தாகவும் தகவல் வெளியானது. இந்தத் தரவுகளை கொண்டு தெற்கு ரயில்வேயிடம் ஊட்டி மலை ரயில் தனியார் வசமானதா, கட்டணம் உயர்த்தப்பட்டதா போன்ற கேள்விகளை முன்வைத்தோம். அதனை ஒட்டுமொத்தமாக மறுத்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.
இது குறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஊட்டி மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டது என்ற செய்தி முற்றிலும் தவறானது. அதேபோல மலை ரயிலுக்கான கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஒரு தனியார் நிறுவனம் ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து அதாவது Chartered Trip சென்றது. பொதுவாக சாதாரண கட்டணத்தை காட்டிலும் இதுபோன்ற மொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்படும் ரயிலின் கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும். மேலும், பணிப்பெண்கள் காவியுடையில் இருப்பது, ரயிலின் பெயர் மாற்றப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் பொய்யானது. ஊட்டி மலை ரயில் இப்போது வரை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது" என தெரிவித்தார்.
சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு!
இதனிடையே, உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது ஃபேஸ்புக் பதிவு:
தனியாரை விட இளகியமனதோடு இருக்கும் அரசு!
உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 3000 ரூபாய். மார்ச் முதல் ஜூன், ஜூலையில் சீசன் காலத்தில் போய்வர ஒரு நபருக்கு 12000 வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே டார்ஜ்லிங் மலை ரயில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இந்தியா முழுக்க 150 ரயில்கள் தனியாருக்கு கொடுக்க அட்டவணை வெளியிடப்பட்டு, ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டன. இதில் தென்னக ரயில்வேயின் 26 ரயில்கள் அடக்கம். தாம்பரம் முதல் கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பத்தூர் ரயில்களும் அடங்கும் .
ஒரே நாளில் 485 ரூபாய் இருந்த கட்டணம் 3000 ரூபாயா? என்று அதிர்ச்சியடைய வேண்டாம். இதுவெல்லாம் அரசு திடீரென செய்யவில்லை. முறையாக அறிவித்து தான் செய்கிறது. தான்தோன்றித்தனமாக நடக்கும் பழக்கம் அரசுக்கு இல்லை. அது எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் செய்கிறது.
தனியார் நிறுவனம் மலைரயில் கட்டணத்தை 3000 ரூபாய் என நிச்சயித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக பலர் சொல்கின்றனர். இதைவிட குறைந்த கட்டணத்துக்கு மலைகளையே தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு. இப்பொழுது சொல்லுங்கள் தனியாரைவிட இளகியமனதோடு தானே அரசு நடந்து கொள்கிறது!
- இவ்வாறு சு.வெங்கடேசன் தனது பதிவில் கூறியுள்ளார்.
ஊட்டி மலை ரயிலின் வரலாறு என்ன?
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகே பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது. தொடர்ந்து 1909 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊட்டி மலை ரயிலின் வயது 112 ஆண்டுகள்.
1885 ஆம் ஆண்டு ரூ.5 லட்சம் முதலீட்டில் நீலகிரி ரயில்வே கம்பெனி உருவாக்கப்பட்டது. 1891-ஆம் ஆண்டு சென்னை பிராந்திய ஆளுநர் வென்லாக் பிரபு நீலகிரியில் மலை ரயில் பாதையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலைப் பாதையில் 27 கி.மீ.க்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1899 ஜூன் 15-இல் திறக்கப்பட்டது.
1908-இல் குன்னூரில் இருந்து ரூ. 24.40 லட்சம் செலவில் 19 கி.மீ.தூரம். உதகைக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த மலை ரயில் பாதையில் 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன. மேலும், ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் மிக நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
ஆங்கிலேயே பொறியாளர் மிக்சல் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு, இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகப் புகழ் பெற்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை யுனோஸ்கோ நிறுவனம் கடந்த 2005 ஜூலை 15-ஆம் தேதி உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.