மின்சார வாகனத்துறையில் அடுத்த தலைமுறை பேட்டரி- ஐஐடி மெட்ராஸ் புதிய கண்டுபிடிப்பு

மின்சார வாகனத்துறையில் அடுத்த தலைமுறை பேட்டரி- ஐஐடி மெட்ராஸ் புதிய கண்டுபிடிப்பு
மின்சார வாகனத்துறையில் அடுத்த தலைமுறை பேட்டரி- ஐஐடி மெட்ராஸ் புதிய கண்டுபிடிப்பு
Published on

மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை பேட்டரி தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், உருவாக்கியுள்ளனர். மின்சார வாகனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் (Lithium-Ion) பேட்டரிகளுக்கு மாற்றாக, எளிதில் கிடைக்கக்கூடிய விலை குறைந்த ஜிங்க்-ஏர் (Zinc-Air) பேட்டரிகளை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

பணத்தை வங்கியிலும், நீரை தொட்டியிலும் சேகரிப்பது போல மின்சாரத்தை வேதியல் முறையில் சேகரிக்கும் மின் சாதனம் பேட்டரிகள்.

21ஆம் நூற்றாண்டில் கைபேசி முதல் செயற்கை கோள்கள் வரை அனைத்து மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கும் மூலாதாரமாக விளங்குகிறது பேட்டரிகள். லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம் அயான் பேட்டரி போன்றவை தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது உள்ள லித்தியம் - அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் இவை சிக்கனமானவை; மட்டுமின்றி நீண்ட ஆயுட்காலம் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியும்.

மின்சார வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம்-அயன் பேட்டரிகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் சீனா, மின்சார வாகன பேட்டரி உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது, இந்திய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் லித்தியம் - அயன் பேட்டரிகளை இறக்குமதி செய்கின்றன. லித்தியம்-அயன் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கின்றன. மேலும் இந்திய சந்தையின் வெவ்வேறு தேவைகளை லித்தியம் -அயன் பேட்டரிகளால் மட்டுமே பூர்த்தி செய்துவிட முடியாது.

இந்நிலையில் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றான ஒன்றை, குறைந்த செலவில் செயல்படும் ஜிங்க் ஏர் பேட்டரிகளை ஐஐடி சென்னையின் ரசாயனப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் அரவிந்த் குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து ஐஐடி சென்னையின் பேராசிரியர் அரவிந்த் குமார் பேசுகையில், கடந்த மே மாதம் ஜிங்க் ஏர் பேட்டரிகளை ஐஐடி ஆராய்ச்சியாளர் குழு கண்டறிந்த நிலையில், தற்போது பலகட்ட சோதனையில் பேட்டரி வெற்றி அடைந்துள்ளதாகவும், மின்சார வாகனங்களில் பொருத்தி ஜிங்க் ஏர் பேட்டரிகளை சோதனை மேற்கொள்ளும் ஆய்வு பணிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவை லித்தியம் அயன் பேட்டரிகள் போல் இல்லாமல் கேசட்டுகள் போன்ற லிங்க் தகடில் மின்சாரத்தை சேகரிக்க முடியும் என்பதால் டிஸ்க்குகளை மாற்றி சார்ஜ் செய்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. எனவே வரும் ஆண்டுகளில் பெட்ரோல் நிலையங்களைப் போன்று, 'ஜிங்க் ரீசார்ஜ் நிலையங்களை' தனியாக அமைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜின்க்-ஏர் பேட்டரிகளின் நன்மைகள் :

  • துத்தநாகம் இந்தியாவில் பரவலாகக் கிடைக்கக் கூடியது. லித்தியம்-அயன் பேட்டரிகளின் இறக்குமதியைக் குறைக்கும்.
  • லித்தியம் அயன் பேட்டரிகள் போன்று மூடிய திட வேதி பெட்டியில் மின்சாரத்தை சேகரிக்காமல் துத்தநாகத் தகட்டில் சேகரிப்பதால் எளிமையாக கையாளவும் சார்ஜ் செய்யவும் முடியும் என கூறப்படுகிறது.
  • லித்தியம்-அயன் பேட்டர்களோடு ஒப்பிடுகையில், துத்தநாகம் விலை குறைந்தது.
  • சந்தையில் ஒரு கிலோ வாட் ஹவர் (KWhr) திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி 16,000 முதல் 20000 க்கு விற்கப்படும் நிலையில், ஜிங்க் ஏர் பேட்டரிகளின் விலை 12000 என குறைகிறது.
  • மேலும் லித்தியம் அயான் பேட்டரிகளை போல அதிக அளவில் ஜிங்க் ஏர் பேட்டரிகளும் உற்பத்தி செய்யும் போது அதன் விலை பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் குறையும் எனக் கூறப்படுகிறது.
  • ஜின்க்-ஏர் பேட்டரிகள் நீரின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை, நீண்ட ஆயுள் கொண்டவை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com