உள்ளூர் தகவலில் இருந்து உலக தகவல்கள் வரை நாம் அறிந்து கொள்வதற்கு பேருதவியாக இருப்பது செய்தித்தாள்கள். கதை சிறுகதை கவிதை செய்திகள் என பலவற்றையும் தாங்கி வருவது செய்தித்தாள்கள். அவற்றைப் பெறுவதற்கு நமக்குப் உதவியாக இருப்பவர்கள், செய்தித்தாள்கள் விநியோகிக்கும் நபர்கள். மழை, வெயில், காற்று, குளிர் என எந்த காலங்களிலும் நேரம் தவறாமல் நம் கைக்கு செய்தித்தாள்களை கொண்டு சேர்ப்பதில் அவர்கள் பங்கு பெரும்பங்கு.
செய்தித்தாள்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு நாள் செய்தித்தாள் வரவில்லை என்றாலும் கூட உலகமே மறந்தது போல் ஆகிவிடும். அந்தவகையில், தங்கள் பணி மூலம் நமது அந்த நாளையே புத்துணர்வு பெற வைக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டியே, நம் தொடரின் இந்த அத்தியாயம் அமையவுள்ளது. இன்று நாம் சந்திக்கவிருப்பது நீலகண்டன் எனும் செய்தித்தாள் விநியோகிக்கும் தொழிலாளி.
நீலகண்டன், தனது 42 வயதிலும் காலை 3 மணி முதல் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் துடிப்பான இளைஞர். எந்த நேரத்திலும், யார் அழைத்தாலும் ஓடிவந்து உதவி செய்யும் அவர், தன் பணி அனுபவம் குறித்தும் வாழ்க்கை முறை குறித்தும் நம்மிடம் பேசினார்.
``தினமும் வீடு வீடாக போய் நாளிதழ் விநியோகிப்பதுதான் என்னுடைய பணி. பல வருடங்களாவே இந்த வேலையில் நான் இருக்கிறேன். அதனாலேயெ என்னிடம் ஒருவர் உதவிகேட்டால், அவர் இருக்கும் இடத்துக்கே போய் அவர்களின் தேவையை நிறைவேற்றும் பழக்கம் என்னை தொற்றிக் கொண்டது. வேலையின் ஊடாக எனக்கு வந்த இந்த பழக்கம், மிகப்பெரிய மனநிறைவை எனக்கு கொடுக்கிறது.
தினமும் காலை மூணு மணிக்கு வேலைக்கு போயிடுவேன். பேப்பர் கட்டு வந்ததும், தமிழ் - இங்கிலீஷ் பேப்பர்னு பிரிச்சு வச்சு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நேரில் கொண்டு போய் கொடுப்பேன். என்னதான் இன்னைக்கு எல்லாமே டிஜிட்டல் ஆகிட்டாலும்கூட, நிறைய பேர் என்னை எதிர்ப்பார்த்து வாசல்லயே அதிகாலையில காத்திருப்பாங்க. அவங்ககிட்ட பேப்பர் கொடுக்கும்போது வர்ற சந்தோஷம் வேறு எதிலும் எனக்கு இல்லைங்க!
கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு முன்னாடி இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு கடைக்கும் இலவச பேப்பர்தான் போடுவேன். அப்போ எனக்கு அம்பது ரூபா சம்பளம் கொடுப்பாங்க. காலப்போக்குல நானும் ரெண்டு மூணு கம்பெனில பேப்பர் ஏஜெண்டா மாறிட்டேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பேப்பர் தான் சொல்லிருப்பாங்க. தமிழோ இங்கிலீஷோ... ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க விரும்பும் செய்தித்தாள்தான் வேணும். தெரியாம வேற கொடுத்துட்டா கூட கோச்சிப்பாங்க. அதனால என்னைப்போன்ற விநியோகஸ்தர்கள் பொறுப்பா இருந்து செயல்படனும். சில பேருக்கு, வேற பேப்பர் கொடுத்துட்டா, அந்த நாளோட தொடக்கமே கோவமா ஆரம்பிக்கும். இது அந்த நாளையே கெடுத்துடும்னு நினைச்சு கோவப்படுவாங்க. அதனால, யார் வீட்டுக்கு என்ன பேப்பர் என்பது எங்களுக்கு சரியா தெரிஞ்சிருக்கனும். சரியான பேப்பரை கொடுக்கிறோமோ என்பதை போலவே, சரியான நேரத்துல அதை அவங்க கையில கொடுக்கிறோமா என்பதும் முக்கியம். நேரம் தவறிட்டா, அதுக்கும் கோவப்படுவாங்க. அந்தவகையில், என்னைப் போன்றோர்தான் ஒவ்வொருத்தருடைய காலையையும் விடிய வைக்கிறோம்!
பேப்பருக்கு பெருசா கமிஷன் என்று சொல்ல முடியாது. சொற்ப கமிஷன்தான். இருந்தாலும் செய்றோம். காலைல மூணு மணிக்கு எழுந்திருச்சு வேலைக்கு போனாலும், ஒவ்வொரு கம்பெனி பேப்பர் கட்டு வந்ததும் அதை பிரிச்சு சேர்த்துக்கொள்ள, பொழுது விடியும் நேரம் ஆகிடும். வந்திருக்கிற பேப்பர் எல்லாத்தையும் தனித்தனி பிரிச்சு, யார் யாருக்கு எந்தெந்த பேப்பர் கொடுக்கணும். எல்லாம் முடிச்சிட்டு நாங்க வீட்டுக்கு திரும்புறதுக்குள்ள, எங்களுக்கு சாப்பாடு டைம் - டீ டைம் எல்லாம் தாண்டிடும்.
செய்தித்தாள் விநியோகிக்க, இன்னைக்கும் என்னைக்கும் சைக்கிள் தான் வசதியான வாகனம். அதுவும், இப்போ விக்கிற பெட்ரோல் விலைக்கு, வண்டில போயி பேப்பர் போடுவது சாத்தியமில்லாத ஒன்னு. சாதாரணமா ஒரு பேப்பருக்கு 10 பைசாவிலிருந்து 15 பைசா வரைக்கும் கமிஷன் கிடைக்கும். இதுக்கு முன்னாடி நிறைய கம்பெனி பேப்பர் வரும். ஆனா இப்பலாம் கம்பெனி எண்ணிக்கை ரொம்ப குறைஞ்டுச்சு. கணிசமா பேப்பர் எண்ணிக்கையும் குறைஞ்சிடுச்சு. இளவயது பசங்க எல்லாரும், செல்போனிலேயே செய்தி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க என்பதாலகூட இப்படி இருக்கலாம்.
ஆனா, வயசானவங்க அப்படி இல்ல. நான் முன்னாடியே சொன்னது போல, அரை மணி நேரம் லேட்டா பேப்பரை எடுத்துட்டு போனாலும் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல உட்கார்ந்திருப்பாங்க. பேப்பர் கையில் கொடுத்த உடனேயே உற்சாகமாய் விடுவாங்க. அந்த சந்தோஷம்தான் எங்களோட அந்த நாளினை அழகாக்கும். அதேபோல வயசானவங்களை பொறுத்தவரை, மாசம் ஆச்சுன்னா முதல் தேதியிலயே காசு எடுத்துவச்சுட்டு காத்திருப்பாங்க. அவங்க நம்ம கிட்ட வாங்குற அந்த ஒரு பேப்பரை வச்சு தான், என்னைப் போன்றோரின் குடும்பம் நடக்குது என்பதெல்லாம் அவங்களுக்கு தெரியுமோ தெரியாதோ...! ஆனாலும் எனக்கு ஒரு உதவி செய்ற மாதிரி ஒவ்வொரு மாசமும் பில்லு கொடுத்தவுடனே பணத்தை கொடுத்துடுவாங்க.
இதுக்கு முன்னாடி எல்லாம் பேப்பர்கள் மீதமானால், எடைக்கு போடுவோம். அதில் ஒரு லாபம் கிடைக்கும். ஆனா இப்ப முழுசா நாங்களே பணம் செலுத்திதான் பேப்பர் வாங்க வேண்டியிருக்கு. மீந்து போனாலும் எந்த விலைக்கு வாங்கிறோமோ அந்த விலைக்குதான் எடைக்கு போடணும். இதனால பாதி விலைக்கு அதுல பாதி விலைதான் கிடைக்கும். அதனால வாடிக்கையாளர்களை கரெக்ட தேர்வு செஞ்சி தேவையான பேப்பரை வாங்கிட்டு போகும்.
நான் ஒரு நாளைக்கு 100 பேப்பரிலிருந்து 200 பேப்பர் வரைக்கும் போடுவேன். எல்லோரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. உதாரணத்துக்கு ஒரு தெருவில், 10 பேர் இருப்பாங்க. இன்னொரு தெருவில் ஒருத்தர்தான் இருப்பாங்க. அதனால அலுப்புப் படாம போகனும். நான் அப்படித்தான்! மழை, வெயில் நேரத்துல, கொஞ்சம் சிரமமா இருக்கும். இருந்தாலும் அவங்க அவசரம் புரிஞ்சுகிட்டு பேப்பர் போட்டுருவேன். ஒவ்வொரு நாளும் பேப்பர் போட்டு முடிச்சபிறகு, இன்னிக்கு வேலை நல்லபடியா முடிஞ்சதுனு ஒரு திருப்தி இருக்கும். அதேநேரம், அடுத்த நாள் எப்படியிருக்குமோன்ற பயமும் இருக்கும்.
ஒவ்வொரு நாள் காலையிலும், என் வரவை எதிர்நோக்கி காத்து இருக்கவங்கதான், எங்களை உயிர்ப்போட வச்சுக்கு உதவுறவங்க. நிறைய வீடுகள்ல அதை கொண்டு போய் அவன்கிட்ட சேக்கும்போது அந்த முகத்தில் ஒரு மிகப்பெரிய மலர்ச்சி தெரியும். அது ஒன்றே போதுமே எங்களுக்கெல்லாம்!” என்றார் பூரிப்புடன்.
இப்படியாக தினந்தோறும் ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை ஒரு தகவலை ஒரு செய்தித்தாளை சேர்க்கிற எண்ணத்தோடு தான் வாழ்ந்து வருகிறார்கள் இந்த எளிய மனிதர்கள்.
- ஜோதி நரசிம்மன்
முந்தைய அத்தியாயம்> எளியோரின் வலிமை கதைகள்-14: ரெடிமேட் ஆடைகளால் நலிவடையும் தையல் தொழில்