தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, இரு டோசேஜ்ஜின் போதும், இருவேறு தடுப்பூசிகளை சிலர் போட்டுக்கொள்கின்றனர். இது ஆபத்தானதா, இல்லை ஆரோக்கியமானதா என்பதை பற்றிய ஆய்வொன்று வெளியாகியுள்ளது. அதை இங்கு பார்ப்போம்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதேநேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை காக்கும் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணி மக்களில் சிலர் முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் வேறொரு தட்டுபூசியும் மக்கள் போட்டுக்கொள்கின்றனர். ஆனால் இப்படி இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது, அவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பக்கவிளைவுகளில், மிதமாகவும் மோசமாகவும் பக்கவிளைவுகள் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த விளைவு, காய்ச்சலாகவோ, குளிர் ஜுரமாகவோ, தலைவலியாகவோ பெரும்பாலான நேரம் இருப்பதாகவும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இதுதொடர்பாக லேன்செட் மருத்துவ பத்திரிகையில் வெளிவந்திருக்கும் மருத்துவ ஆய்வில், முதல் டோசேஜ் போடப்படும் தடுப்பூசியின் தாக்கம்தான் பெரும்பாலும் அடுத்தமுறையும் இருக்கும் என்றும், இருந்தாலும் இரண்டாவது டோசேஜ் எந்தளவுக்கு முந்தைய தடுப்பூசியோடு இணைந்து செயல்படுகிறது என்ற வேகத்தின் அடிப்படையில் ஒரு சில கூடுதல் அறிகறிகள் அதிகமாக தெரியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதற்காக செய்த ஆய்வில், வெவ்வேறு தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளும் நபர்களும் 34 சதவிகிதம் காய்ச்சலுக்கான வாய்ப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பக்கவிளைவுகள்யாவும், தடுப்பூசி போட்டு 48 மணி நேரத்துக்கு பின்னரே தெரிவதாகவும், இந்த விளைவுகள் சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் அளவுக்கு ஆபத்தானதாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு இந்த பக்கவிளைவுகளின் விளைவு எதுவும் உறுதியாக தெரியாததால், மக்கள் இதுபோன்ற ரிஸ்க்கை எடுக்க வேண்டாமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், இருவேறு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளும்போது அதன் முழு பலன்கள் கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் இருப்பது தெரியவந்துள்ளது. எந்தளவுக்கு பலன் இருக்கிறது என்பது தெரியவர, இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகுமென ஆக்ஸ்போர்டு நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க நோய்த் தடுப்பு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் என எந்தவொரு அதிகாரவர்க்க மருத்துவ நிபுணர் குழுவும், இப்படி இருவேறு தடுப்பூசிக்கென வழிமுறைகளையோ தடையையோ நிபந்தைனைகளையோ இதுவரை விதிக்கவில்லை. இவர்களின் மௌனம், சம்மதத்துக்கான அறிகுறி இல்லை என்பதை மனதில் கொண்டு, ஒரே வகை தடுப்பூசியை மட்டும் இப்போதைக்கு மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள் சிலர்.