இணையத்தில் 'பிரைவசி' தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பயனாளிகளின் பிரைவசியை பாதுகாக்கும் உறுதியுடன் 'பிரேவ் சர்ச்' (Brave Search) எனும் புதிய தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது. பிரைவசி நோக்கிலான 'பிரேவ்' பிரவுசர் சேவை வழங்கி வரும் நிறுவனம், இந்தப் புதிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இணைய உலகில் 'கூகுள்' நம்பர் ஒன் தேடியந்திரமாக இருப்பது தெரிந்த விஷயம்தான். அதேபோல, இணையத்தை அணுக வழிசெய்யும் பிரவுசர்களில் 'கூகுள் குரோம்' முன்னணியில் இருக்கிறது.
கூகுள் தேடியந்திரமும் சரி, குரோம் பிரவுசரும் சரி... செயல்திறன் - வேகம் போன்றவற்றில் சிறப்பாக அமைந்திருந்தாலும், 'பிரைவசி' என்று வரும்போது பிரச்னைக்குரியவையாக இருக்கின்றன. பயனாளிகளின் தேடல் அடிச்சுவடுகளை பின்தொடர்ந்து விளம்பர வலை விரிக்கிறது என்பது கூகுள் தேடியந்திரம் மீது தொடர்ந்து சொல்லப்படும் விமர்சனமாக இருக்கிறது.
அதேபோல, கூகுள் குரோம் பிரவுசரிலும் பயனாளிகளுக்கு பிரைவசி பாதுகாப்பு இல்லை என சொல்லப்படுகிறது. குரோம் பிரவுசரில் பயனாளிகளை பல விதங்களில் கூகுள் பின்தொடர்வதாக விமர்சனம் இருக்கிறது.
இந்தப் பின்னணியில், பயனாளிகள் பிரைவசியை பாதுகாக்கும் நோக்கில் மாற்று தேடியந்திரங்கள் பல முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. கூகுள் போல பயனாளிகளை பின்தொடராமல் தேடல் சேவை அளிப்பதாக உறுதி அளிக்கும் டக்டக்கோ இந்தப் பிரிவில் முன்னிலையில் இருக்கிறது. இது தவிர, ஸ்டார்ட் பேஜ் உள்ளிட்ட பிரைவசி தேடியந்திரங்கள் இருக்கின்றன.
இந்தப் பட்டியலில் இப்போது 'பிரேவ் சர்ச்' தேடியந்திரம் இணைந்திருக்கிறது. இதே பெயரில் பிரைவசி நோக்கிலான பிரவுசர் சேவையை வழங்கி வரும் பிரேவ் நிறுவனம் இந்தப் புதிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
பயனாளிகள் பிரைவசியை பாதுகாக்கும் வகையில் இணைய விளம்பரங்களை பிளாக் செய்யும் தன்மைகாக அறியப்படும் பிரேவ் பிரவுசர், கடந்த சில மாதங்களாகவே 'பிரேவ் சர்ச்' வசதியை சோதனை முறையில் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது உலக அளவில் முன்னோட்ட வசதியாக அறிமுகம் செய்துள்ளது.
சொந்த தேடல் வசதி:
கூகுளுக்கு போட்டியாக அறிமுகம் ஆகும் 'பிரேவ் சர்ச்', பயனாளிகளின் தேடல்களை பின்தொடர்வதில்லை என உறுதி அளிப்பதோடு, பிரைவசி தேடியந்திரங்களில் மேம்பட்ட தேடல் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. அதாவது, இது சொந்த தேடல் பட்டியலை கொண்டிருப்பதாக சொல்கிறது.
தேடியந்திரங்களைப் பொறுத்தவரை சொந்த தேடல் பட்டியல் இருப்பது முக்கியம். பெரும்பாலான தேடியந்திரங்கள் இந்தத் திறனை பெற்றிருப்பதில்லை. அதாவது, இணையத்தில் உள்ள பக்கங்களை எல்லாம் பட்டியலிட்டு கொள்ளும் வசதியை அவை பெற்றிருப்பதில்லை. இத்தகைய வசதி 'கூகுள்', 'பிங்', சீனாவின் 'பெய்டு' மற்றும் ரஷ்யாவின் 'யாண்டெக்ஸ்' போன்ற வெகு சில தேடியந்திரங்களே இத்தகைய தேடல் பட்டியலை கொண்டுள்ளன.
மற்ற தேடியந்திரங்கள் பெரும்பாலும், இந்த தேடல் பட்டியலை அடிப்படையாக கொண்டே தேடல் சேவையை வழங்குகின்றன. 'டக்டக்கோ' தேடியந்திரம் கூடு முழு அளவில் சொந்த தேடல் பட்டியலை கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில், 'பிரேவ் சர்ச்' இணையத்தில் தகவல்களை தேடித்தருவதற்கான சுயேட்சையான தேடல் பட்டியலை உருவாக்கி வைத்திருப்பதாக கூறுகிறது. எனவே, இதன் தேடல் முடிவுகள் தனித்தன்மையோடு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதே நேரத்தில் புகைப்படத் தேடலுக்கு, மைக்ரோசாப்டின் 'பிங்' தேடலை பயன்படுத்துவதாக பிரேவ் தெரிவிக்கிறது. மேலும், பயனாளிகள் கூகுள் தேடலையும் கலந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
சொந்த தேடல் பட்டியல் இருப்பதால், தேடல் முடிவுகளை அளிக்கும்போது, குறிப்பிட்ட தேடல் முடிவு எந்த அளவுக்கு சுயேட்சையாக அமைந்துள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், தேடல் தொடர்பாக பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையிலும் முடிவுகள் மேம்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடல் எப்படி?
'பிரைவசி' அம்சம் நிச்சயம் ஈர்ப்புடையது என்றாலும், பிரேவ் சர்ச்சின் தேடல் அனுபவம் எப்படி இருக்கிறது? - 'பிரேவ் சர்ச்' முகப்பு பக்கமும் கூகுள் போலவே எளிமையாக இருக்கிறது. இதன் தேடல் கட்டத்தில் கீவேர்டை டைப் செய்ததும் முடிவுகள் பட்டியலிடப்படுகின்றன. அனைத்து முடிவுகள், புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள் என முடிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளதோடு, உள்ளூர் முடிவுகளை பார்க்கும் வசதியும் உள்ளது.
மேலும், பலவிதங்களில் தேடல் முடிவுகளை வடிகட்டலாம். தேடல் முடிவுகளை 'பிங்', 'கூகுள்', 'மோஜிக்' உள்ளிட்ட தேடியந்திரங்களிலும் ஒப்பிட்டு பார்க்கலாம். கீவேர்டு தொடர்பான கூடுதல் விவரங்கள் மிகவும் விரிவாக, அருகாமையில் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரேவ் சர்ச்சிலும் விளம்பரங்கள் தோன்றினாலும் இப்போதைக்கு தேடல் முடிவுகளில் விளம்பர நெடி இல்லை. மாற்று தேடியந்திரங்களின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் பிரேவ் சர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்திப் பார்க்கலாம்.
பிரேவ் சர்ச் தேடியந்திரம்: https://search.brave.com/
- சைபர்சிம்மன்