சிவசேனா எம்பிக்கு தடை: விமானத்தில் பறக்க நிரந்தரத் தடை சாத்தியமா?

சிவசேனா எம்பிக்கு தடை: விமானத்தில் பறக்க நிரந்தரத் தடை சாத்தியமா?
சிவசேனா எம்பிக்கு தடை: விமானத்தில் பறக்க நிரந்தரத் தடை சாத்தியமா?
Published on

விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாத்துக்கு பல விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பறக்க தடை விதித்தன. சிவில் விமான போக்குவரத்து துறை முதல் முறையாக இப்படி ஒரு சம்பவத்தைச் சந்தித்துள்ளது. இப்படி ஒரு தடைக்கு சட்டத்தில் இடமுள்ளதா இதற்காக புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய சட்டங்களின் படி விமான நிறுவனங்கள் அத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியுமா என்று ஆலோசனை செய்யப்பட்டது. இதன் பிறகு பேசிய மூத்த அதிகாரி ஒருவர், விமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நபரை சேவையை பெறுவதில் இருந்து தடை செய்ய முடியுமா என்றும் டிக்கெட் வைத்திருக்கும் ஒருவரை விமானத்தில் ஏற அனுமதி மறுக்கும் உரிமை விமான நிறுவனத்திற்கு இருக்கிறதா என்றும் சட்டங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் ராஜீவ் நயன் சவ்பே கூறுகையில், ஒரு நபருக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுவது குறித்து பல பரிந்துரைகள் வந்துள்ளன என்றும் இது தொடர்பான விதிகள் மற்ற நாடுகளில் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று தாங்கள் ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் இருக்குமானால், அது குறித்து தெளிவான சட்டங்கள் வேண்டும். எந்த சூழ்நிலையில் ஒரு நபர் தடை செய்யப்படலாம், அந்த தடை எவ்வளவு நாட்கள் இருக்கும், தடை செய்யப்பட்ட பயணி மேல்முறையீடு செய்ய என்ன வழி என அனைத்திற்கும் தெளிவான சட்டங்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

வளர்ந்த நாடுகளைப் பொருத்தவரையில், இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட விமான பயணிகள் பட்டியல் இல்லை. ஆனால் ஒவ்வொரு விமான நிறுவனமும் தங்களுக்கு என்று ஒரு தனி பட்டியல் வைத்திருக்கலாம். எந்த ஒரு நபரையும் அந்த விமான நிறுவனம் தடை செய்ய முடியும். அமெரிக்காவில் 9/11 தாக்குதல்களுக்கு பிறகு, அரசாங்கமும் விமான நிறுவனங்களும் இணைந்து ஒரு பொதுவான பட்டியலை வைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நபருக்கு அதுவும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டதில்லை. தற்போதுள்ள சிவில் விமான விதிகளின் படி, மோசமாக நடந்துக்கொள்ளும் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கலாம். ஆனால் நிரந்திர தடை விதிக்கும் சட்டம் இல்லை.

இந்நிலையில் சிவ சேனா செய்தி தொடர்பாளர் மனிஷா கயாந்த், ரவீந்திர கெய்க்வாத் தீவிரவாதி இல்லை என்றும் மேலும் 4 விமான நிறுவனங்கள் அவரை தடை செய்வது நியாயமல்ல என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com