நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன? நியூட்ரினோ என்றால் என்ன? ஏன் அதற்கு ஆதரவும் எதிர்ப்புமாய் குரல்கள் ஒளிக்கின்றன என்பது சாமானிய மனிதன் நினைக்கும் விஷயமாக இருக்கிறது. எந்தவொரு அறிவியல் திட்டத்திற்கும் சாதகமும் பாதகமுமான விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு நியூட்ரினோ ஆய்வுத் திட்டமும் விதிவிலக்கில்லை !
தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைக்கப்பட இருந்த இந்த ஆய்வகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. 2.5 கிமீ தூரத்துக்கு சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்கப்பட இருந்தது.
இந்த ஆய்வகத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்பதால், ஆய்வகம் அமைக்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
எனவே நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதில் சிக்கல் நீடித்தது. அனுமதியைப் பெற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில்தான் இந்த ஆய்வகம் ஆந்திர மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்திகளும் வெளியாகின. அதேவேளையில், நியூட்ரினோ ஆய்வகம் தமிழகத்தில் அமைந்தால் அது நன்மையா, தீமையா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, நாம் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் பற்றி புரிந்துக்கொள்வோம்.
எப்படி உருவாகிறது நியூட்ரினோ ?
உலகம் உருவான காலத்திலிருந்தே நியூட்ரினோக்கள் இருந்திருக்கின்றன. நட்சத்திரங்களிலிருந்து இவை உற்பத்தியாகின்றன. உதாரணமாக, சூரியனிலிருந்து நமது பூமிக்கு, ஒரு சதுர சென்டிமீட்டருக்கு சுமார் நாற்பது கோடி நியூட்ரினோக்கள் வந்தடைகின்றன. நம் காற்று மண்டலத்திலும், பூமியின் உட்பகுதியிலும் இவை உற்பத்தியாகின்றன. நம் உடம்பும் நியூட்ரினோக்களை தயாரிக்கின்றன. நம் உடம்பிலிருக்கும் சுமார் 20 மில்லி கிராம் பொட்டாசியம்-40-ஐக் கொண்டு நாம் அனுதினமும் சுமார் 340 லட்சம் நியூட்ரினோக்களை நம்மை அறியாமலே தயாரிக்கின்றோம்.
மூன்று வகையான நியூட்ரினோக்கள்
அணுவின் அங்கமாக எலக்ட்ரான் இருக்கையில், இயற்கையில் எலக்ட்ரானைப் போலவே ஆனால் அதனை விட கனமான இரண்டு துகள்கள் உண்டு. அவை, மியுவான் எனப்படுவதாகும். இது எலக்ட்ரானை விட 200 மடங்கு கனமானது. டவ்வான் எனப்படுவது எலக்ட்ரானை விட 3,500 மடங்கு கனமானது. இந்த மூன்று துகள்களுக்கு இணையாக மொத்தம் மூன்று வகையான நியூட்ரினோக்கள் உள்ளன. எலக்ட்ரானுக்கு இணையாக எலக்ட்ரான் நியூட்ரினோவும், மியுவானுக்கு இணையாக மியுவான் நியூட்ரினோவும், டவ்வானுக்கு இணையாக டவ்வான் நியூட்ரினோவும், உள்ளன. இந்த 6 துகள்களும் லெப்டான் எனப்படும் துகள் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த லெப்டான் குடும்பத்தில் உள்ள துகள்களுள் நியூட்ரினோக்கள் தான் ஏராளமாக காணப்படும்.
உலக அளவில் ஆய்வுக் கூடம்
நியூட்ரினோ ஆராய்ச்சி உலக அளவிலான கவனத்தை ஈர்த்தது. ஜப்பானில் உள்ள சூப்பர்-கம்யோகான்டே நியூட்ரினோ ஆய்வகம், கனடாவில் ஸட்பெரி நியூட்ரினோ ஆய்வகம், இத்தாலியில் கிரான்-சாசோ ஆய்வகம், தென் துருவத்தில் உள்ள ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகம் என்பவை உலகின் முக்கிய ஆய்வு கூடங்களாகும். இதை அடிப்படையாகக் கொண்டே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு நவீன ஆராய்ச்சிக் கூடத்தை இந்தியாவில் கட்டமைக்க திட்டமிட்டது.
எப்படி அமைக்கப்படும் ஆய்வுக் கூடம் ?
தேனி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள நியூட்ரினோ ஆய்வு, ஒரு மலைக்குள் ஆய்வுக்கூடத்தையும் மலையின் வெளியே அலுவலகம் மற்றும் குடியிருப்புகளையும் கொண்டிருக்கும்.
மலை உச்சியிலிருந்து 1,300 மீட்டருக்கு கீழ் அடுத்தடுத்து இரண்டு குகைகள் இருக்கும். ஒரு குகையில் உணர் கருவியும் மற்றொன்றில் கட்டுப்பாட்டு அறையும் இருக்கும். பாதுகாப்புக்காக இக் குகைகள் பல சுரங்கப்பாதைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். பிரதான குகையானது 130 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும், 30 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். சார்னோகைட் பாறைகளால் ஆன மலையினுள்ளே இவை அமைக்கப்படுவதால், இவ்விடம் பாதுகாப்பாக இருக்கும். கடல் மட்டதிலிருந்து 400 மீட்டர் உயரத்தில் இந்த வளாகத்திற்கான நுழைவுவாயில் அமைந்திருக்கும். இந்த நுழைவுவாயில், உங்களை 2 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதைக்கு அழைத்துச்செல்லும். இந்தச் சுரங்கப்பாதையானது 7 மீட்டர் அகலமும் 7 மீட்டர் உயரமும் கொண்டுள்ளதால் இருவழி வாகன போக்குவரத்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நியூட்ரினோவால் நன்மைகள் என்னென்ன?
இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளைய சமுதாயம் பயனடைவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நியூட்ரினோ ஆய்வு மையம் உபயோகிக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் தொழில்நுட்பத்தில் வலுவான ஒரு தலைமுறை உண்டாகும். இந்த ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உணர் கருவி மருத்துவத் துறையிலும் பயன்படுத்துவதை காணலாம். இந்த வகையான ஒரு திட்டம் பல்வேறு துறைகளின் ஒன்றாக்கத்திற்கு வழிவகுத்து சமுதாயத்திற்கு பல நன்மைகளைத் தரும். ஆய்வகத்தில் வேலை செய்ய கணிசமான மனிதவளமும் தேவைப்படும்.இயற்பியல் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் பெரிய அளவில் இத்திட்டத்திற்கு தேவை. பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியாவில் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல ஏற்கெனவே இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதா?
மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானதாகவே நியூட்ரினோ திட்ட ஆய்வகத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.உலகிலேயே மிகக் கடினமான பாறைகள் கொண்டது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இதன் காரணமாகவே பொட்டிபுரம், நியூட்ரினோ ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
10 மீட்டர் அகலமும், 2.5 கிலோ மீட்டர் நீளமும் உள்ள இந்த நியூட்ரினோ ஆய்வகமானது மலையிலிருந்து சுரங்கம் அமைத்து ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். இதற்காக சுரங்கத்தைத் தோண்டும்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் பாறைகள் வெட்டப்பட வேண்டும். இதற்கு 1,000 டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த வெடி மருந்துகளைப் பயன்படுத்தி 1 லட்சம் டன் பாறைகள் வெட்டப்படும். இதனால் மலைப் பகுதியியைச் சுற்றி 1 லட்சம் டன் தூசிகள் காற்றில் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், இந்த வெடி மருந்தைப் பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் அதிர்வால் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையில் பாதிப்பு ஏற்படும் என அணு கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சியாளர் டி.வி.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே சிறந்த பசுமைமாறா காடான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைத்தால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வுக் கூடத்துக்கு அனுமதி அளித்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அப்பகுதியில் யானைகள் மற்றும் எருதுகள் சரணாலயம் உள்ளது. அதைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் கவனத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்ற சிக்கலின் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் மசனகுடி வனப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கத் திட்டமிடப்பட்டபோது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது.