சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை நடவடிக்கைகளில் குறைவான நாட்களே பங்கேற்கிறார் என்பதை சுட்டிக் காட்டி, நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். சச்சின் டோன்ட் பங்க் என்ற ஹேஸ்டாக், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சச்சின், ரேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் குறைவான நாட்களே, அவை நடவடிக்கை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் மாநிலங்களவை நிகழ்வில் நேற்று பங்கேற்றார். சச்சின் பங்கேற்றதை சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இது தான் சச்சினின் குறைவான ஸ்கோர் எனக் கூறி கலாய்க்கின்றனர். சச்சின் மாநிலங்களவையில் பங்கேற்ற புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் ஒருவர், நடப்பு ஆண்டில் இந்தியா சாதித்தது இரண்டு. ஒன்று ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. மற்றொன்று சச்சின் மாநிலங்களவை வருகை என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் மாஸ்டர் பிளாஸ்டர். மாநிலங்களவையில் மாஸ்டர் பங்கர் என பதிவிட்டு, நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
வானில் பறக்கும் விமானம் திடீரென சாலையில் பயணிப்பது எப்படி அரிதானதோ, அதுபோல் சச்சின் மாநிலங்களவைக்கு வருவதும் அரிதிலும் அரிதான நிகழ்வு என நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.
சச்சின் இனி உங்களின் பேட் பதில் சொல்லாது. மாநிலங்களவையில் பங்கேற்பதை, கட் அடிப்பது தொடர்பாக நீங்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சச்சின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மற்றொரு நெட்டிசன், ஒழுங்கீனமான மாணவர்கள் முதல் வரிசையில் தான் அமர்வார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் களத்தில் ஜாம்பவனாக வலம் வந்த சச்சினை, மாநிலங்களவை உறுப்பினராக ஜொலிக்கவில்லை என நெட்டிசன்கள் ஒருபுறம் கேலிசெய்து வந்தாலும், மற்றொருபுறம் அவருக்கு ஆதரவாக பதிவுகளும் இணையதளங்களில் வந்தவண்ணம் உள்ளன.
சில அரசியல்வாதிகள் சச்சினை குறிவைத்து தாக்குவதாகவும் சச்சினின் நேசர்கள் தெரிவிக்கின்றனர்.