நெற்றிக்கண்- திரைப்பார்வை: லாஜிக் மீறலை சகித்துக்கொண்டால் லேடி சூப்பர் ஸ்டாரை ரசிக்கலாம்!

நெற்றிக்கண்- திரைப்பார்வை: லாஜிக் மீறலை சகித்துக்கொண்டால் லேடி சூப்பர் ஸ்டாரை ரசிக்கலாம்!
நெற்றிக்கண்- திரைப்பார்வை: லாஜிக் மீறலை சகித்துக்கொண்டால் லேடி சூப்பர் ஸ்டாரை ரசிக்கலாம்!
Published on

நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கும் சினிமா 'நெற்றிக்கண்'. ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார்.

பெண்களை கடத்தி துன்புறுத்தும் சைக்கோ. அவனை துரத்திப் பிடிக்கும் பார்வையற்ற இளம்பெண். இதுதான் படத்தின் ஒன்லைன். சிபிஐ அதிகாரியான நயன்தாரா ஒரு விபத்தில் கண்பார்வை இழக்கிறார். வாடகை டாக்ஸிக்காக காத்திருக்கும் நயன்தாராவை 'சைக்கோ' டாக்டர் அஜ்மல் தனது காரில் ஏமாற்றி அழைத்துப் போகிறார். அங்கிருந்து தப்பிக்கும் நயன்தாரா போலீஸ் உதவியுடன் 'சைக்கோ' டாக்டரான அஜ்மலை பிடிக்கிறார்.

இப்படியான கதைகளைப் பொறுத்தவரை தொடர் குற்றங்களில் ஈடுபடும் வில்லன் யார் என்பதை கடைசிவரை அல்லது படத்தின் முக்கிய திருப்புமுனைக் காட்சி வரும்வரை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஒருவேளை அப்படத்தின் துவக்கத்திலேயே இவன்தான் வில்லன் என ரசிகர்களுக்கு காட்டிவிட்டாலும் கூட வில்லன் பிடிபடும் வரையிலான காட்சிகளை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நகர்த்துவார்கள். ஆனால், நெற்றிக்கண் இப்படி எந்த பாணியிலும் இல்லாமல் நயன்தாராவுக்கு இருக்கும் புகழ் பிம்பத்தை மட்டும் நம்பியே எடுக்கப்பட்டிருக்கிறது.

நயன்தாரா பயணித்திருக்க வேண்டிய டாக்ஸி வர தாமதமாவதால், அவர் வில்லனின் காரில் தவறுதலாக ஏறிவிடுகிறார். ஆனால் அவர் ஏறியது டாக்ஸி அல்ல; ப்ரைவேட் கார் என்பதை கண்டிபிடிக்க ஏன் இத்தனை போராட்டம்..? ஏறகெனவே மொபைல் ஆப் மூலம் வாடகை டாக்ஸியை நயன்தாரா புக் செய்திருக்கிறார். டாக்ஸி டிரைவரிடமும் போனில் எங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் என பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்க வாடகை டாக்ஸியின் எண் அந்த ஓட்டுநரின் எண் இரண்டும் நயன்தாராவிடம் இருக்கும்தான். அதனை சோதித்தால் நயன்தாரா பயணித்தது வாடகை டாக்ஸி அல்ல என்பதை எளிமையாக கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஏன் தலையைச் சுற்றி மூக்கைத்தொட முயன்று, அதனையும் செய்ய முடியாமல் திணறி இருக்கிறார் இயக்குநர் எனப் புரியவில்லை. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஓகே. நயன்தாராவின் நடிப்பு அருமை.

நயன்தாராவை அஜ்மல் மிக நெருக்கமாக பின் தொடர்கிறார். மெட்ரோ ரயிலில் நயன்தாராவுக்கு எதிரில் அமர்ந்து பயணிக்கிறார். வாட்ஸ் ஆப் வீடியோ கால் செய்யும்போதே அஜ்மலின் முகத்தை ரெக்கார்ட் செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது. பதற்றத்தில் தவறினாலும் கூட மெட்ரோ ரயில், ரயில் நிலையம், ஷாப்பிங் மால் என அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். இவற்றை எல்லாம் விட்டுவிட்டு உணவு டெலிவரி பையனின் க்ளூவை வைத்துக் கொண்டு ஆதிகால டெக்னிக்கில் கம்ப்யூட்டரில் படம் வரைவதெல்லாம் வேற லெவல் லாஜிக் மீறல்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் 'இதுவும் கடந்து போகும்' பாடல் இதம். 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தை நினைவூட்டும் விதமாக மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' திரைப்படம் இருந்தது. நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' அதிகாரபூர்வ ரீமேக்காக இருக்கிறது. அப்படி இருக்க, ஏற்கெனவே ஒருவர்உருவாக்கிய கதையினை சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும், கொஞ்சம் நம்பும்படியாகவேணும் சொல்லி இருக்கலாம்.

எல்லா சைக்கோ குற்றவாளிகளுக்கும் தான் குற்றவாளியானதற்கு பின் தன் தரப்பு நியாயமாக ஒரு ப்ளாஷ்பேக் கதை இருக்கும். அஜ்மலுக்கும் அப்படியொரு கதை இருக்கிறது. ஆனால், அதுவும் அத்தனை வலிமையாக இல்லை. சைக்கோ குற்றவாளி பிடிபட்ட பிறகும்கூட நீளும் காட்சிகள் சோர்வடைய வைக்கின்றன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை படத்தின் காட்சி அமைப்புகள் எப்படிச் சொதப்பினாலும் படம் முடியும் போது ஒரு நிறைவான மன உணர்வைத் தந்தால் கொஞ்சம் திருப்தி கிடைக்கும். அந்த நிறைவு இறுதிக் காட்சிகளில் இப்படத்தில் கிடைக்கும்.

1981-ல் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த நடிப்பில் வெளியான சினிமா 'நெற்றிக்கண்'. 2021-ல் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் சினிமாவின் பெயரும் அதுவே. இந்த ஒரு லாஜிக்தான் படத்தில் நிறைவாக அமைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com