இந்திய விடுதலை அறவழியில் சாத்தியமாகாது; ஆயுத வழியில் தான் சாத்தியமாகும் என்பதில் உறுதியாக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த தினம் இன்று..
1. நேதாஜி, மேற்கு வங்கத்தில் 1897ல் ஜனவரி 23ல் கட்டாக் எனும் ஊரில் செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்தவராயினும் அடிமையைக் கண்டு பொங்கும் போராட்டக் குணத்தையே அவர் பெற்றிருந்தரர்.
2. நேதாஜியின் பெற்றோர் அவரை லண்டனுக்கு அனுப்பி ஐசிஎஸ் படிக்கவைத்தனர். ஆனால் ஆங்கிலேயருக்கு மண்டியிட்டு செய்யக்கூடிய வேலையை என்னால் செய்ய முடியாது என்று சீறிய நேதாஜி அந்த வேலையை தூக்கிவீசி சுதந்திர போராட்டத்தில் தன் காலடியை பதித்தார்.
3. நாட்டுக்கெனத் தனிக் கொடி, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தது, வெளிநாடுகளில் இந்திய விடுதலைக்காக ராணுவம் உருவாக்கியது, ஜான்சி ராணிப் படை என பெயரிட்டு பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தியது என நேதாஜியின் ஒவ்வொரு அடியும் ஆங்கிலேய அரசாங்கத்தின் பிடறியைப் பிடித்து ஆட்டியது.
4. 1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேதாஜி, அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே வெற்றி வாகை சூடினார் போஸ். இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கவனத்தை போஸின் பக்கம் திருப்பியது.
5.சிறையில் சுபாஷ், காசநோயால் அவதிப்பட அவரை விடுவிக்கச் சொல்லி ஆதரவாளர்கள் போராட்டம் செய்தனர். சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 3 ஆண்டுகள் இந்தியாவில் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால், ‘மன்னிப்புக் கேட்க நான் கோழையல்ல. என்னை என் நாட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்?’ என்று சொல்லி விடுதலை ஆக மறுத்துவிட்டார் சுபாஷ்.
6. ‘விடுதலை என்பது அடிமைப்படுத்தியவனிடம் கேட்டுப் பெறுவதல்ல; அவனிடம் இருந்து எடுத்துக் கொள்வது.’ ‘ரத்தம் கொடுங்கள், நான் சுதந்திரம் தருகிறேன்’ என நேதாஜியின் வீர முழக்கங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அனலைக் கக்கியது. புரட்சி நெருப்பை பற்ற வைத்தது.
7.வீட்டுச் சிறையில் பலத்த கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கானிஸ்தானையும், பின்னர் அங்கிருந்து ஜெர்மனியையும் அடைந்தார். தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் பயணிக்க முடியுமா என்று ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளே வியந்து போற்றின. இந்தியாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரை சந்தித்தார் நேதாஜி. ஹிட்லர் அப்போது ரஷ்யாவை தாக்கும் திட்டத்துடன் இருந்ததால் அப்படி ஒரு அறிக்கையை தன்னால் வெளியிட முடியாது என்று மறுத்துவிட்டார்.
8. இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும் ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதல் முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான்.
9. நேதாஜியின் விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டுடனான தொடர்பும் முக்கியமானது. அவரது இந்திய தேசிய ராணுவத்தில் லட்சுமி அம்மையார் படைத்தளபதியாக இருந்தார். மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் நல்ல உறவைக் கொண்டிருந்தார் நேதாஜி. 1949ல் கமுக்கத்தில் நடந்த ஒரு மாநாட்டில், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சரியான தருனத்தில் வருவார். என்னோடு நேரடியான தொடர்பில் இருக்கிறார்” என்று கூறியிருந்தார் பசும்பொன்.
10. 1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால் அவரது இறப்பில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை. மத்திய அரசு நேதாஜி மரணம் தொடர்பாக இதுவரை மூன்று விசாரணைக் கமிஷன்கள் அமைத்து ஆவணங்களை வெளியிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார் என்பதற்கு போதுமான சான்று இல்லை.