'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்!

'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்!
'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்!
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், விடைத்தாள்களை மாற்ற முயற்சி உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தேறியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தக் குற்றச்சாட்டுகளில் நீட் பயிற்சி மையம் ஈடுபட்டிருப்பது நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை வலுப்படுத்துகிறது. இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் முதலில் முன்வைக்கக் கூடிய விஷயம்: 'இது ஏழைகளுக்கானதாக இல்லை' என்பதுதான். லட்சம் லட்சமாக பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்தி படித்தால் மட்டும்தான் இந்த நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை இருக்கிறது என்ற குற்றச்சாட்டுதான் இதற்கு முக்கியக் காரணம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இத்தகைய நீட் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவையாக உள்ளன. கடந்த ஆண்டு நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சிகளைப் பெறுவதாக தங்களது குடும்ப வருமானத்தில் 12% தொகையை இந்தியப் பெற்றோர்கள் செலவிடுகின்றனர் என்ற அதிர்ச்சிகர புள்ளிவிவரம் கூறியுள்ளது. இதிலிருந்தே இந்த நீட் பயிற்சி மையங்களின் வருவாய் - லாப அளவை நம்மால் யூகிக்க முடியும்.

மேலும், CRISIL என்ற அமைப்பு 2020-ல் நடத்திய ஆய்வுபடி, 2021-ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் சுமார் ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம் செய்யும் என கணித்துள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இதுவரை இல்லாத அளவில் 13% அதிகம் என்று கூறப்பட்டடுள்ளது. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த வர்த்தகம் ரூ.45,000 கோடியாகவே இருந்தது.

மிக முக்கியமான 10 இந்த நீட் பயிற்சி வழங்கக் கூடிய மையங்கள் கொடுத்திருக்கக் கூடிய தகவலின்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தேர்வில் மொத்தம் வெற்றி அடைந்தவர்களில் 25% பேர் நாட்டின் மிகப்பெரிய 3 நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள். 50 சதவிகிதம் மாணவர்கள் முதல் ஐந்து இடத்தில் இருக்கக் கூடிய பயிற்சி மையங்களில் பயின்றவர்கள். முதல் 10 இடங்களில் 9 பேர் இந்தப் பயிற்சிக் கூடங்களில் படித்தவர்கள்தான்.

இதற்காக, இந்த நீட் பயிற்சி மையங்கள் அதிகபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். சராசரியாக பார்த்தால் ஒரு மாணவரிடம் இருந்து ரூ.2,94,000 அளவில் நீட் பயிற்சி வழங்குவதற்காக வசூலிக்கப்படுகிறது.

கட்டணங்களை பொறுத்தவரை சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு ஒரு கட்டணம், திருச்சி, செகந்திராபாத், மீரட் போன்ற நகரங்களுக்கு வேறு கட்டணம், கிராமங்களுக்கு தனி கட்டணம் என வெவ்வேறு வகைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இந்த முதல் மூன்று இடத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டும் நீட் பயிற்சி மையங்களை நாடு முழுவதும் சுமார் 544 கிளைகளைப் பரப்பி பயிற்சி கொடுக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்கள் மட்டும் ஆண்டிற்கு சுமார் ரூ.1000 கோடியில் இருந்து ரூ.1,500 கோடி வரை தனித்தனியாக லாபமாக ஈட்டுகின்றன.

இப்படி தங்களுக்குள் உள்ள தொழில் போட்டி, அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நீட் பயிற்சி மையங்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

வினாத்தாள்களை திருடி தங்கள் பயிற்சி மையத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பது, ஆள்மறாட்டம் செய்வது என தொடங்கி தற்போது விடைத்தாள்கள் ஏமாற்றும் அளவிற்கு இவர்களது விஷக் கைகள் நீண்டு கொண்டிருக்கின்றன.

இதற்கு சாட்சிதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது எழுந்து இருக்கக்கூடிய அதிர்ச்சி தரும் மோசடிகள். இன்னும் வெளியே தெரியாமல் எத்தனை எத்தனை முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதை ஊகிக்க கூட முடியவில்லை. இத்தகைய நீட் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் மோசடி செய்யப்படுவதால் பல ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்துபோவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் எதிர்கால மருத்துவக் கட்டமைப்பும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com